‘லிங்கா’ படத்திற்கெதிராக மதுரையைச் சேர்ந்த இயக்குநர் ரவிரத்தினம் தாக்கல் செய்திருந்த மனுவை மதுரை உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
‘முல்லைவனம் 999’ என்ற படத்தின் இயக்குநர் ரவிரத்தினம், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் தனது “முல்லைவனம் 999′ படத்தின் கதையைத் திருடி, லிங்காவை தயாரித்துள்ளனர். எனவே லிங்கா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்…” என கோரியிருந்தார்.
இந்த மனுவுக்கு நடிகர் ரஜினிகாந்த், ‘லிங்கா’ படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ், கதாசிரியர் பொன் குமரன் ஆகியோர் தனித்தனியாக பதில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்கள் தங்களது மனுவில், மனுதாரர் ரவிரத்தினத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்து விளக்கம் அளித்தனர். கடந்த வாரம் அனைத்துத் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு கூறுவதை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வேணுகோபால், “மனுதாரர் தனது கதையை பதிவு செய்யவில்லை. ‘யூ டியூப்’பில் மட்டும் வெளியிட்டுள்ளார். பதிப்புரிமை பெறாத ஒரு கதையை தனது கதைதான் என்று யாரும் கூறமுடியாது. இதன்படி பார்த்தால், மனுதாரர் பதிப்புரிமை இல்லாத ஒரு கதையை தனது கதை என்று கூறுவது சரியல்ல.
‘லிங்கா’ படத்தின் கதை என்ன என்பது மனுதாரருக்கு தெரியாது. யூகத்தின் அடிப்படையில் ‘லிங்கா’ படத்தின் கதை தனது கதைதான் என்று மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
மனுதாரரின் கோரிக்கைக்கு இந்த நீதிமன்றம் பரிகாரம் அளிக்க முடியாது. இந்த வழக்கு தனிப்பட்ட பிரச்சினை சார்ந்தது. இரு தரப்பினருக்கு இடையே உள்ள அறிவுசார் சொத்துரிமை சார்ந்த வழக்கு. சொத்துரிமை வழக்குகள் எந்த வகையிலும் கிரிமினல் வழக்குகள் ஆகாது. அவை சிவில் வழக்காகத்தான் கருதப்படும். இந்த வழக்கு இந்த நீதிமன்றத்தில் விசாரிக்கத் தகுந்தது அல்ல. ஆகையால் இந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவிட்டார்.
‘லிங்கா’வுக்கு எதிரான கடைசி தடையும் நீங்கிவிட்டது. இனி டிசம்பர் 12-ல் தியேட்டர்களில் ‘லிங்கா’வை காணலாம்..!









