full screen background image

“ரஜினியிடம் மன்னிப்பு கேட்கிறோம்..” – விநியோகஸ்தர்களின் சரண்டர்..!

“ரஜினியிடம் மன்னிப்பு கேட்கிறோம்..” – விநியோகஸ்தர்களின் சரண்டர்..!

“என் வார்த்தைகள், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மனதை புண்படுத்தியிருந்தால் அவரிடம், நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்..” என்று ‘லிங்கா’ படத்தின் திருச்சி ஏரியாவின் சினிமா வினியோகஸ்தரான சிங்காரவேலன் கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் நடித்து திரைக்கு வந்த ‘லிங்கா’ படம் சில வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட வினியோகஸ்தர்கள் தங்களுக்கு நஷ்டஈடு கோரி சென்னை வள்ளுவர்கோட்டம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார்கள்.

இது தொடர்பாக, வேந்தர் மூவிஸ் நிர்வாகி டி.சிவா கூறும்போது, ‘பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்று தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷிடம் கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து நேற்று மாலை சென்னை பிரஸ் கிளப்பில் பத்திரிகையாளர்களை மீண்டும் சந்தித்தனர் லிங்கா படத்தினால் நஷ்டப்பட்ட விநியோகஸ்தர்கள்.

அப்போது பேசிய திருச்சி, தஞ்சை ஏரியாவின் விநியோகஸ்தரான சிங்காரவேலன், “லிங்கா படத்தை திருச்சி, தஞ்சை ஏரியாவுக்கு வினியோகம் செய்த வகையில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒரு வேகத்தில், ‘ரஜினிகாந்தின் பிறந்தநாள் தேசிய விடுமுறை தினமா?’ என்று பேசிவிட்டேன். இதன் மூலம் ரஜினிகாந்தின் மனதை நான் புண்படுத்தியிருந்தால், அவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கிறேன்.

பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்களான எங்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே சமாதான பேச்சுவார்த்தை தற்போது தொடங்கியிருக்கிறது. இதனால் மேற்கொண்டும் பிரச்சினையை வளர்க்க நாங்கள் விரும்பவில்லை. வேறு எந்த போராட்டத்திலும் ஈடுபடும் திட்டமும் எங்களுக்கில்லை..” என்று லிங்கா போராட்டத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

பேட்டியின்போது, மன்னன், கிருஷ்ணகுமார், அய்யப்பன் உள்பட பல விநியோகஸ்தர்களும் உடன் இருந்தார்கள்.

Our Score