“மேக்கப் போடுறதுக்கே 5 மணி நேரமாகும்…” – விக்ரமின் ‘ஐ’ பட அனுபவங்கள்..!

“மேக்கப் போடுறதுக்கே 5 மணி நேரமாகும்…” – விக்ரமின் ‘ஐ’ பட அனுபவங்கள்..!

‘ஐ’ திரைப்படம் நாளை வெளியாவதையொட்டி நடிகர் விக்ரம் நேற்றைக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து ‘ஐ’ பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

“ஐ’ பட அனுபவம் மிகவும் வித்தியாசமாக, கூடவே கொஞ்சம் கஷ்டமாகவும், நிறைய ஜாலியாகவும் பலவித உணர்வுகளோடும் இருந்துச்சு..

இந்தப் படத்தில், நான் 10 விதமான தோற்றங்களுடனும், 4 வேடங்களிலும் நடித்து இருக்கிறேன். இந்த படத்துக்காக என் உடல் எடையை அதிகரித்தும், குறைத்தும் கடின உழைப்பை தந்து இருக்கிறேன். இது, காதலும் திகிலும் கலந்த படம். சினிமாவை நேசிப்பவர்களுக்கு மேலும் நேசத்தை தரும் படமாக இருக்கும்.

இந்தப் படத்தின் கதையை இப்பவே சொன்னால் படம் பார்க்கும்போது உங்களுக்கு இண்ட்ரஸ்ட் வராது. நான் ‘மிஸ்டர் மெட்ராஸ்’ ஆகணும்ன்ற ஆசையோடு இருப்பேன். அந்தப் போட்டிக்கான மேடையில் உண்மையான பாடி பில்டர்ஸ் நிறைய பேர் இந்தியா முழுவதில் இருந்தும் வரவழைக்கப்பட்டிருந்தார்கள். அவர்களோடு ஒரே மேடையில் நானும் நின்றேன். எனக்கும் அவங்களுக்கும் வித்தியாசம் தெரியக் கூடாதுங்கிறதுக்காக பாடியை பில்டப் செய்றதுக்காக நிறைய உழைச்சிருக்கேன். எக்சர்சைஸ் செஞ்சிருக்கேன்.

நான் இப்படி என் உடம்பை வருத்தி செஞ்சுக்கிட்டதை பத்தி நிறைய பேர் என்கிட்ட கேட்டு்ட்டாங்க.. என்னுடைய வேலை அதுதான். அதைத்தான் நான் செஞ்சேன்.  ஊசி போட்டு உடம்பை ஏத்திக்குங்கன்னு சொன்னாங்க. ஆனா நான் அதை செய்யலை. வெறும் பிளாக் டீ, முட்டையின் வெள்ளைக் கரு, தண்ணி குடிக்கணும்னு தோணிச்சின்னா ஆரஞ்சு பழத்தோட சதையை வாய்ல வைச்சுக்குவேன்.. இப்படி கஷ்டப்பட்டுத்தான் உடம்பை மெயின்டெயின் செய்தேன்.

எனக்கு மேக்கப் போடறதுக்கே அஞ்சு மணி நேரமாகும். அப்பவே நான் தூங்கிருவேன். ஆனா மேக்கப் போடும்போது எனக்கு சில பிரச்சனைகள் வந்து தோலில் அலர்ஜி ஏற்பட்டு முகமே தடிப்பு, தடிப்பா வந்திருச்சு. அந்த மாதிரி நேரத்துல ஷங்கர் ஸார் என்னோட முதுகு பக்கமா கேமிராவை வைச்சு ஷூட் செஞ்சு சமாளிச்சார். சந்தானம்கூட அப்போயிருந்த என் முகத்தைப் பார்த்துட்டு அது மேக்கப்போன்னு நினைச்சு பாராட்டிட்டு போனார்.

படத்தின் சண்டை காட்சிகளும், பாடல் காட்சிகளும் மிரட்டலாக இருக்கும். படப்பிடிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் நிச்சயமாக பேசப்படும். குறிப்பாக சீனா பற்றி குறிப்பிட வேண்டும். அங்கு குறிப்பிட்ட இடங்களுக்கு விமானம் மூலம் சென்று, அங்கிருந்து ரெயிலில் பயணம் செய்து, பின்னர் கார்களிலும், நடந்தும் போய் படப்பிடிப்பு தளத்தை அடைந்தோம்.

எங்ககூட வந்த லொகேஷன் மேனேஜரே ரொம்ப ஆச்சரியப்பட்டார். ‘எங்களுக்கே இந்த இடம் தெரியாதே.. நீங்க எப்படி கண்டுபிடிச்சீங்க?’ன்னு கேட்டார். அந்த இடத்துல இருந்த பூக்கள் அங்க மட்டும்தான் இருக்குமாம். படத்தை பாருங்க. உங்களுக்கே தெரியும். 

ஆஸ்கர் பிலிம்ஸ் கொஞ்சம்கூட சமரசமே செஞ்சுக்கலை. ஷங்கர் ஸார் என்ன கேட்டாரோ அதை செஞ்சு கொடுத்தாங்க. ‘அந்நியன்’ படத்துல வந்த மாதிரி இதுலேயும் ஒரு பைட் சீன் இருக்கு. அது நிச்சயமா பேசப்படும்னு நம்புறேன்..” என்றார் விக்ரம்.

உழைத்த உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கும் விக்ரம் ஸார்..!

Our Score