இந்தப் படத்தை ஆஹா ஓடிடி தளத்திற்காக வினோத் சேகர், தினகரன் பாபு இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
படத்தில் சார்லி, ஜெகன் பாலாஜி, சரண்யா ரவிச்சந்திரன், அதிதி பாலன், விநாயகராஜ், அருண் பிரசாத், தமிழ் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – விஷ்ணு கே.ராஜா, இசை – தீபக் நந்தகுமார், படத்தொகுப்பு – சிவராஜ், பத்திரிக்கை தொடர்பு – நிகில் முருகன், எழுத்து, இயக்கம் – உதயகுமார், வினோத் சேகர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் காயல்பட்டினம் அருகே உப்பளங்கள் நிரம்பியிருக்கும் ஒரு குக்கிராம்தான் இந்தப் படத்தின் கதைக் களம்.
அந்த ஊரின் மின்சார அலுவலகத்தில் லைன்மேனாக பணியாற்றி வருகிறார் ‘சுப்பையா’ என்கிற சார்லி. இவருடைய மகனான நாயகன் ஜெகன் பாலஜி ஒரு மின் பொறியியல் பட்டதாரி. இவரை அதே ஊரில் வசிக்கும் சரண்யா ரவிச்சந்திரன் ஒரு தலையாய் காதலித்து வருகிறார்.
சிறந்த படிப்பாளியும், அறிவாளியுமான ஜெகன் தெருவில் இருக்கும் மின் விளக்குகளை தானாகவே ஆன் மற்றும் ஆஃப் செய்யும்படியான தானியங்கி கருவி ஒன்றை கண்டு பிடித்திருக்கிறார்.
இதற்கு அங்கீகாரம் பெறுவதற்காக தூத்துக்குடி கலெக்டரை பார்க்க பலவாறு முயற்சித்தும் முடியாமல் போகிறது. கடைசியாக சென்னைக்கு சென்று முதலமைச்சரை நேரில் சந்தித்து தனது கண்டுபிடிப்பை பற்றி எடுத்துச் சொல்ல நினைத்து சென்னைக்கு வருகிறார்.
வந்த இடத்தில் சுற்றுச் சூழலாய் தாக்கிய பல சம்பவங்கள் அவருக்கு மனச் சோர்வைத் தர மீண்டும் தாய் மண்ணுக்கே திரும்பிச் செல்கிறார்.
வந்த இடத்திலும் அவருக்குத் தொல்லைகள் பெரிதாகின்றன. சூரிய சக்தியை வைத்து தொழில் நடத்தும் நிறுவனத்தின் பெரும் முதலாளிகள், அவரது கண்டுபிடிப்புக்கு எதிராக சில, பல சதி வேலைகளை செய்கிறார்கள்.
ஜெகன் அந்த சதிகளில் இருந்து மீண்டு தனது முயற்சியில் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதை சொல்வதுதான் இந்த ‘லைன்மேன்’ திரைப்படம்.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஜெகன் பாலாஜி புதியவர் என்றாலும், தனது இயல்பான நடிப்பின் மூலம் அந்தக் கதாப்பாத்திரத்தை பெரிதும் ரசிக்க வைத்திருக்கிறார்.
அப்பாவியாய் தூத்துக்குடி கலெக்டரை சந்திக்க முயல்வதும், லஞ்சம் கேட்கும் அதிகாரியிடம் அதைக் கொடுத்துவிட்டு சந்திப்புக்குக் காத்திருக்கும் கொடுமையையும் தன் நடிப்பாலேயே சமப்படுத்தியிருக்கிறார்.
தன்னை ஊரார் பைத்தியம், மெண்டல் என்று சொல்வதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முயற்சித்து வருபவர், சென்னையில் அதிகார வர்க்கம் அவரை அரை மணி நேரம் ஆட் கொண்டு அவரது வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் கொடூரத்தைத் தாங்க முடியாமல் ஊருக்குத் திரும்பும் காட்சிகளில் தனது அப்பாவித்தனமான நடிப்பினாலேயே “அடப்பாவிகளா” என்று நம்மையும் சொல்ல வைத்துவிட்டார்.
கடைசி காட்சிகளில் அதிகாரமும், பணமும் சேர்ந்து ஒரு எளிய மனிதனின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட சுவடே தெரியாமல் அப்பாவியாய் கிடைத்த வாழ்க்கையை ஓட்டப் பழகும் புது லைன்மேன் வேடத்தில் வரும்போது ஒட்டு மொத்தப் பாராட்டையும் பெற்றுவிட்டார் நாயகன் ஜெகன் பாலாஜி. வாழ்த்துகள்!
இரண்டாவது அனைத்துப் பாராட்டுக்களையும் பெறுபவர் அப்பாவாக நடித்திருக்கும் சார்லி. சமீப ஆண்டுகளில் தன்னுடைய குணச்சித்திர நடிப்பில் பின்னியெடுக்கும் சார்லிக்கு இந்தப் படமும் ஒரு மைல் கல்.
மின் இணைப்பைத் திருடிய சம்பவத்தால் தனது மனைவியை இழந்த சோகத்துடன் ஒற்றை மகனை தனியாளாக வளர்த்தெடுக்கும் அந்த ‘சுப்பையா’ என்ற கதாப்பாத்திரத்தில் ஒன்றிப் போயிருக்கிறார் சார்லி.
மகன் துவண்டு கிடைக்கும்போதெல்லாம் தைரியம் சொல்வதோடு, தன் மகனைப் பற்றிப் பெருமையாகச் சொல்லும்போதெல்லாம் அவர் முகம் காட்டும் பெருமித நடிப்பு அபாரம். கடைசியாக நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் காட்டும் அந்த நோயாளிக்கான நடிப்பையும் ஏ ஒன் என்றே சொல்லலாம்..!
சிறப்பு தோற்றத்தில் தூத்துக்குடி கலெக்டராக நடித்திருக்கும் அதிதி பாலனின் 5 நிமிட வருகை, படத்திற்குக் கிடைத்திருக்கும் கூடுதல் பலம்.
நாயகியாக நடித்திருக்கும் சரண்யா ரவிச்சந்திரன், அந்தக் கிராமத்துப் பெண்ணாகவே தோற்றமளிக்கிறார். உப்பளத்தில் பணியாற்றும் மற்றைய பெண் தொழிலாளர்களும் அந்த மண்ணின் மைந்தர்களாகவே இருந்துள்ளனர். ஊமையாக நடித்திருப்பவரின் கதை ஒரு சோகக் காவியம். அவருடைய நடிப்பும் பாராட்டத்தக்கது. வில்லனாக நடித்திருப்பவர் அளவு கடந்த வில்லத்தனத்தைக் காட்டாமல் கட்டுப்பாட்டோடு நடித்திருப்பதால் அவரையும் ரசிக்க முடிகிறது.
முழுக்க, முழுக்க உப்பளமும், அதன் அருகிலும்தான் கதை நடக்கிறது என்பதால் ஒளிப்பதிவாளரின் கை வண்ணத்தில் காட்சிக்குக் காட்சி படம் அழகுடனேயே பவனி வருகிறது. ஒரேயொரு டிரோன் ஷாட்டில் அந்த உப்பளக் கிராமத்தைக் காண்பிக்கையில் சொக்கிப் போகிறோம்.
தீபக் நந்தகுமாரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். சோகத்தை கொடுக்கும் வண்ணமும் பாடலும், இசையும் அமைந்திருக்கிறது. சிவராஜின் படத்தொகுப்பு காட்சிகளை அழகுற இணைத்துள்ளது. இரவு நேரக் காட்சிகளின் ரம்மியம் குறையாமல் கிடைத்திருக்கிறது.
உப்பளம் கிடங்கில் வேலை செய்யும் கிராமத்து மக்களின் வாழ்க்கையையும், அவர்களது வலிகளையும் மிகைப்படுத்தாமல் சொல்லியிருக்கிறார் இயக்குநர். அதே நேரம் தன்னுடைய கண்டுபிடிப்புக்கான அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒரு எளிய கிராமத்து விஞ்ஞானியின் போராட்டத்தையும் திரை மொழியில் சிறப்பாக சொல்லியிருக்கிறார்கள் படத்தின் இயக்குநர்களான எம்.உதய்குமாரும், வினோத் சேகரும்..!
சினிமாத்தனத்தை குறைவாக வைத்துக் கொண்டு இயல்பு தன்மையோடு ஒரு சிறுகதை வடிவத்தில் ஒரு கிராமத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டியிருக்கிறது இந்த ‘லைன் மேன்’ திரைப்படம்..!
இந்த ‘லைன் மேன்’ எத்தகைய இருட்டுக்கும் ஒரு வெளிச்சம் உண்டு என்பதை நிரூபித்திருக்கிறது.
RATING : 4 / 5









