மதுப் பழக்கத்தைத் கைவிட்டதால் கடந்த நான்காண்டுகளாக தனது வாழ்க்கை ஒரே சீராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார் பாலிவுட் நடிகையான பூஜா பட்.
நடிகை பூஜா பட் பாலிவுட்டில் 1990-களில் பிரபலமான நடிகையாக இருந்தவர். இவரது தந்தைதான் பாலிவுட்டின் மூத்த இயக்குநரான மகேஷ் பட்.
‘Daddy’, ‘Dil Hai Ki Manta Nahin’, ‘Zakhm’ போன்ற புகழ் பெற்ற பாலிவுட் படங்களில் நடித்திருந்தார் பூஜா பட். கடைசியாக ‘சதக்-2’ படத்தில் நடித்திருந்தார். தற்போது நெட் பிளிக்ஸில் வெளியாகவுள்ள ‘பாம்பே பேகம்ஸ்’ என்னும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
பூஜா பட் ஒரு காலத்தில் மதுவுக்கு பெரும் அடிமையாக இருந்தவர். இதனாலேயே பாலிவுட்டில் பல பட வாய்ப்புகளை இழந்தவர்.

தற்போது மது பழக்கைக் கைவிட்டுவிட்டதால் தனது வாழ்க்கை சீராகவும் தன்னம்பிக்கை கொடுப்பதாகவும் இருப்பதாக தனது டிவீட்டரில் இட்ட ஒரு செய்தியில் குறிப்பிட்டுள்ளார் பூஜா பட்.
தனது செய்தியில், “இன்றுடன் வெற்றிகரமான நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு காலத்தில் இளஞ்சிவப்பு ஷாம்பெயின், மாஸ்ட் மற்றும் மும்பை நகர பார்கள் என்றுதான் எனது வாழ்க்கை இருந்தது. ஆனால் இப்போது அதே வாழ்க்கை இளஞ்சிவப்பு வானமும், வெறிச்சோடிய ஊர் சாலைகளாகவும் மாறியிருக்கிறது.
இதுவொரு வளமான சீரான வாழ்க்கைப் பயணம். என்னுடன் இருந்த தெய்வீக சக்தி என்னை உண்மையாகவும், வலிமையாகவும் வைத்திருந்தன. இந்த வாழ்க்கைக்கு நன்றி..” என்று குறிப்பிட்டுள்ளார் பூஜா பட்.
மற்றவர்களும் பூஜா பட்டை பின் தொடர்ந்தால் நல்லதுதான்..!