பிரபல மலையாள நடிகை கீது மோகன்தாஸ் முதன்முதலாக எழுதி, இயக்கிய ‘Liar’s Diace’ என்ற ஹிந்தி திரைப்படம் அடுத்த வருடம் ஆஸ்கர் போட்டியில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் இந்தியாவின் சார்பில் போட்டியிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
கீது மோகன்தாஸின் இந்த Liar’s Diace படம், சென்ற ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி இந்தியாவில் வெளியிடப்பட்டது. மிகச் சிறப்பான கதை, திரைக்கதை, இயக்கம் என்பதால் படம் சினிமா விமர்சகர்களால் மிகவும் கொண்டாடப்பட்டது.
சென்ற ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருது இத்திரைப்படத்தின் ஹீரோயின் கீதாஞ்சலி தபாவிற்குக் கிடைத்தது. மேலும் இந்தப் படத்தில் ஒளிப்பதிவு செய்த கீது மோகன்தாஸின் கணவர் ராஜீவ் ரவிக்கு சிறந்த ஒளிப்பதிவிற்கான தேசிய விருதும் கிடைத்தது.
இது மட்டுமல்ல.. சூடான் பிலிம் பெஸ்டிவல், ரோட்டர்டாம் பிலிம் பெஸ்டிவல், சோபியா பிலிம் பெஸ்டிவல் ஆகிய சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டது. சோபியா பிலிம் பெஸ்டிவலில் ஜூரிகளின் சிறப்பு பரிசு இந்தப் படத்திற்குக் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் கதை மிகவும் சிறியதுதான். இந்திய-திபெத் எல்லையில் இமாசலப் பிரதேசத்தில் ஒரு குக்கிராமத்தில் வசித்து வருகிறார் ஹீரோயின். அவருக்கு சிறிய வயதில் பெண் குழந்தை உண்டு. இவருடைய கணவர் டெல்லியில் கட்டுமான நிறுவனத்தில் கட்டிட வேலை செய்யப் போனவர் பல மாதங்களாகியும் திரும்ப வரவில்லை. அவரைத் தேடி இவரும் டெல்லிக்கு போக கிளம்புகிறார். தனது மகளுடன் தன்னுடைய வீட்டில் இருக்கும் குட்டி ஆட்டையும் தூக்கிக் கொண்டு இவர் டெல்லிக்கு செல்லும் பயணம்தான் படத்தின் கதை..!
நடிகை கீது மோகன்தாஸுக்கு தான் இயக்கிய முதல் படமே ஆஸ்கருக்கு தேர்வானதில் தனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி என்கிறார். மேலும் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் தனக்கு மிகவும் துணை நின்ற அனைத்து தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
ஆஸ்கரை வெல்லுமா என்பதற்கு அடுத்த பிப்ரவரி மாதம்வரைக்கும் காத்திருக்க வேண்டும்..!