சமீப வருடங்களாக சர்ச்சையான விஷயங்களை முன் வைத்து திரைப்படங்களை உருவாக்கும் போக்கு இந்திய சினிமாவில் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது.
அரசியல், வாழ்க்கை வரலாறு, கள்ளக் காதல், ஓரினச் சேர்க்கை, பாலியல் பலாத்காரம் போன்றவைகளை முன் வைத்தே பல திரைப்படங்கள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. சில திரைப்படங்களில் மலிவான உடல் உறவு காட்சிகளை அப்பட்டமாக வைத்திருக்கிறார்கள். இவைகள் மீடியாக்களின் அதிகப்படியான விளம்பரத்தினால் இளைஞர்களை கவர்ந்திழுக்க ஓரளவு இந்தப் படங்களுக்கு கவனமும், வசூலும் கிடைக்கிறது.
இந்த வரிசையில் கேரளாவில் வரும் வாரம் ஒரு மலையாளப் படம் வெளியாகவுள்ளது. ‘HOLY WOUND’ என்ற பெயரில் உருவாகியிருக்கும் இந்தப் படம் பெண் ஓரினச் சேர்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில் ஜானகி சுதீர், அம்ருதா வினோத் இருவரும் கதையின் நாயகிகளாக நடித்துள்ளனர். அசோக் ஆர்.நாத் இயக்கியிருக்கிறார். மேலும் இந்தப் படம் ஒரு மெளனப் படமாகும்.
இரண்டு பால்ய வயது தோழிகள் தங்களுடைய மத்திய வயதில் சந்திக்கும்போது லெஸ்பியன்களாக மாறுவதுதான் படத்தின் கதையாம். சமீபத்தில் இந்தப் படத்தின் டீசரும், டிரெயிலரும் வெளியானது.
டிரெயிலர் வெளியான நிமிடத்தில் இருந்து இப்போதுவரையிலும் டிரெண்டிங்கிலேயே இருந்து வருகிறது இத்திரைப்படம். அந்த அளவுக்கு அந்த டிரெயிலரில் லெஸ்பியன் காட்சிகளும், உடல் உறவு காட்சிகளும் வெளியாகியுள்ளன.
இப்போது கேரளாவில் ஹாட் டாப்பிக்காக இந்தப் படம்தான் இருந்து வருகிறது. இது போன்ற படங்கள் சமூகத்தை சீரழிக்கின்றன. புதிய தலைமுறையினரை தவறான பாதைக்கு வழி நடத்துகிறது என்று போர்க்குரல்கள் எழுந்திருக்கின்றன. போதாக்குறைக்கு இந்த தோழிகளில் ஒருவர் கன்னியாஸ்திரி உடையிலேயே தனது காதலிக்கு முத்தம் கொடுப்பதுபோல டிரெயிலரில் இருப்பது கிறிஸ்துவ மக்களிடையே பெரும் கோபத்தைக் கிளப்பியுள்ளது.
இந்தப் படம் தியேட்டருக்கு வராது. நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது என்பதுதான் ஒரேயொரு ஆறுதல்..!