நடிகர்கள்: கங்கை அமரன், ரோஜா, தர்ஷன் கணேசன், ஸ்ரீ தாரா, ஜார்ஜ் மரியான், ஆடுகளம் நரேன், யுகேந்திரன், போஸ் வெங்கட், அர்ச்சனா ரவிச்சந்திரன் மற்றும் பலர்.
தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ், எழுத்து – இயக்கம்: டி.டி. பாலச்சந்திரன், இசை: ‘இசைஞானி’ இளையராஜா, ஒளிப்பதிவு: என்.வின் சகாய், படத்தொகுப்பு: நாகூரன் ராமச்சந்திரன், கலை இயக்கம்: மதுரை ஜெயக்குமார், சண்டைப் பயிற்சி: தளபதி தினேஷ்.
(இதில் தர்ஷன் கணேசன் அறிமுக நடிகர்; இவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனாவார்)
படத்தின் பெயரைக் கேட்டவுடனேயே உங்களுக்குத் தெரிந்திருக்கும், இது நிச்சயமாக ஒரு வித்தியாசமான கிராமத்துத் திரைப்படம்தான். சிவகங்கை மற்றும் மானாமதுரை ஆகிய பகுதிகளுக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.
இன்று தமிழ்நாடு முழுவதுமே திடீர் பணக்காரர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால், கிராமப்புறங்களில் நடக்கும் மணல் திருட்டுதான். அரசியல்வாதிகள் போர்வையில் இருக்கும் மணல் திருடர்கள்தான் இன்று திடீர் பணக்காரர்களாக மாறுகிறார்கள். ஒரே ஒரு இடத்தில் மணல் எடுக்க அனுமதி (லைசென்ஸ்) வாங்கிவிட்டு, பல இடங்களில் அள்ளிச் செல்கிறார்கள். இந்தப் பணம் அரசுக்கோ சம்பந்தப்பட்ட துறைக்கோ முறைப்படி செல்வதில்லை. மாறாக, தொகுதி எம்.பி, எம்.எல்.ஏ, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, வட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், கிராமச் செயலாளர் என அனைவருக்கும் முறையாகக் ‘கட்டிங்’ போய்விடுகிறது. தமிழ்நாடு முழுக்கவே மணல் கொள்ளையில் ஈடுபடாத அரசியல் கட்சிகளே கிடையாது என்று சொல்லும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. அந்த மணல் திருட்டை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.
கிராமத்தில் கங்கை அமரன் – ரோஜா தம்பதியர் வாழ்கின்றனர். கங்கை அமரன் மிகவும் நல்லவர், அப்பாவியான மனிதர்; யார் வேண்டுமானாலும் அவரை எளிதில் ஏமாற்றிவிடலாம். அவர்களுக்குக் குழந்தை இல்லாததால், ஒரு ஆட்டைப் பாசமாக வளர்த்து வருகிறார்கள். ரோஜாவும் தன்மையான குணம் கொண்டவர். கங்கை அமரன் பிறந்து வளர்ந்த அதே ஊரைச் சேர்ந்தவர்; அவருக்கு யாரும் பெண் தர மாட்டேன் என்று சொன்னபோது, சந்தனம் என்ற கதாபாத்திரத்தில் வரும் ரோஜா தானே முன்வந்து அவரைத் திருமணம் செய்துகொண்டார். இதனால் தம்பதியரிடையே அலாதியான பாசமும் ஒற்றுமையும் நிலவுகிறது.
அந்த ஊரில் மணல் திருட்டு தீவிரமாக நடக்கிறது. ஒரு நாள் மணல் ஏற்றிச் சென்ற லாரி மோதி கங்கை அமரன் வளர்த்த ஆடு இறந்துவிடுகிறது. இதற்காகக் காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுக்கச் செல்கிறார். அங்குள்ள ஆய்வாளர் போஸ் வெங்கட்டுக்கு மணல் திருடர்களிடம் இருந்து மாதந்தோறும் லஞ்சம் போவதால், அவர் கங்கை அமரனை அடித்துத் துரத்திவிடுகிறார்.
இதற்கிடையில், அந்த ஊரின் பெண் வி.ஏ.ஓ. அர்ச்சனா ரவிச்சந்திரன் ஒரு நாள் இரவில் மணல் லாரிகளைப் பிடித்து நிறுத்துகிறார். அவரை அந்த மணல் மாஃபியா கும்பல் கொலை செய்துவிடுகிறது. இந்த இரண்டு அநீதிகளுக்கும் நீதி கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் கங்கை அமரன் வழக்குத் தொடர்கிறார்.
வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஜார்ஜ் மரியான், கங்கை அமரனின் உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்து, அவருக்குக் காவல் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடுகிறார். அப்படிப் பாதுகாப்புக்கு நியமிக்கப்படுபவர்தான் காவலர் தர்ஷன் கணேசன்.
காவல் நிலையத்தில் இளையவராக இருப்பதால் சக காவலர்களால் கேலிக்குள்ளாகும் தர்ஷன் கணேசனுக்கு காவல் பணியில் பெரிய ஈடுபாடு இருப்பதில்லை. அவருக்கும் ஸ்ரீ தாராவிற்கும் இடையேயான காதலிலும் சண்டை, சச்சரவுகள் நீடிக்கின்றன. இந்தச் சூழலில் கங்கை அமரனுக்குப் பாதுகாப்பு அளிக்க வருகிறார். அங்கு வந்த பிறகுதான் மணல் திருட்டினால் ஏற்படும் பாதிப்புகள், நீர் வளம் சீர்குலைவது, நிலத்தடி நீர்மட்டம் குறைவது போன்ற தீவிரப் பிரச்சினைகளை அவர் உணர்கிறார். ஒரு காவலராக மட்டுமல்லாமல், பொறுப்புள்ள குடிமகனாக மாறி கங்கை அமரனுக்குத் துணை நிற்க முடிவு செய்கிறார். எதிர்த்தரப்பு இந்த வழக்கை முறியடிக்க பல வழிகளில் முயல்கிறது. இறுதியில் நீதிமன்றப் போராட்டத்தில் வென்றது யார் என்பதே கதை.
கங்கை அமரன்: வித்தியாசமான முதியவர் தோற்றத்தில், கிராமத்து அப்பாவியாக எதார்த்தமாக நடித்துள்ளார். நீதிமன்றப் படியேறி நீதி கேட்கும் காட்சிகளில் நம்மை யோசிக்க வைக்கிறார்.
ரோஜா: பாட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில இடங்களில் இயல்பாக நடித்திருந்தாலும், சில காட்சிகளில் அவரின் சிரித்த முகம் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமில்லாமல் போவதை இயக்குநர் கவனித்திருக்கலாம்.
தர்ஷன் கணேசன்: அறிமுகப் படத்திலேயே ஒரு இளைஞனுக்குரிய துடிப்பான தோற்றத்துடன் கவனிக்க வைக்கிறார். எதிர்காலத்தில் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்தால் சிறந்த நடிகராக வர வாய்ப்புள்ளது.
ஜார்ஜ் மரியான்: நீதிபதியாக வந்து அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். காவல் அதிகாரியிடம் “ஆபீசர் என்று சொல்லாதீர்கள், அலுவலர் என்று தமிழில் பேசுங்கள்” என்று திருத்தும் இடம் மற்றும் நீதிமன்றக் காட்சிகளில் கைதட்டல் பெறுகிறார்.
இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளது. தேவையற்ற இரைச்சல் இன்றி காட்சிகளைத் தூக்கி நிறுத்துகிறது. நாகூரன் ராமச்சந்திரனின் படத்தொகுப்பு இரண்டாம் பாதியில் விறுவிறுப்பைக் கூட்டுகிறது.
மணல் திருட்டால் நிலத்தடி நீர் குறைந்து ஒட்டுமொத்த விவசாயமும் எதிர்காலமும் பாழாகிறது என்ற தீவிரமான சமூகக் கருத்தைத் துணிச்சலாகப் பேசியதற்காக இயக்குநர் டி.டி. பாலச்சந்திரனையும் படக்குழுவையும் நிச்சயம் பாராட்டலாம். குடும்பத்துடன் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு விழிப்புணர்வுத் திரைப்படம்.
RATING : 4 / 5









