full screen background image

லால் சலாம் – சினிமா விமர்சனம்

லால் சலாம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை லைகா புரொடெக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார்.

படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தும், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான கபில்தேவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

படத்தில் மேலும் விஷ்ணு விஷால், விக்ராந்த், ஜீவிதா, அனந்திகா சனில்குமார், செந்தில், கே.எஸ்.ரவிக்குமார், லிவிங்ஸ்டன், நிரோஷா, தம்பி ராமையா, ஆதித்ய மேனன், விவேக் பிரசன்னா, தன்யா பாலகிருஷ்ணா, தங்கதுரை, காக்காமூட்டை சசிகுமார் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – லைகா புரொடக்ஷன்ஸ், தயாரிப்பாளர் – சுபாஸ்கரன், திரைக்கதை மற்றும் இயக்குநர் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இசை – ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவாளர் – விஷ்ணு ரங்கசாமி, படத் தொகுப்பாளர் – பி.பிரவின் பாஸ்கர், கலை இயக்குநர் – ராமு தங்கராஜ், நடன இயக்குநர் – தினேஷ், சண்டைப் பயிற்சி இயக்குநர்கள் – ‘அனல்’ அரசு, ‘கிக்காஸ்’ காளி, ‘ஸ்டண்ட்’ விக்கி, பாடல்கள் – யுகபாரதி, சினேகன், கபிலன், விவேக், ஏ.ஆர்.ரஹ்மான், மஷூக் ரஹ்மான், கதை மற்றும் வசனம் – விஷ்ணு ரங்கசாமி, ஆடை வடிவமைப்பு – சத்யா என்.ஜே., ஒலி வடிவமைப்பு – பிரதாப், ஒலிக்கலவை – எஸ்.சிவகுமார்(ஏ.எம் ஸ்டுடியோஸ்), புகைப்படங்கள் : ஆர்.எஸ். ராஜா, விளம்பர வடிவமைப்பு: கபிலன் செல்லையா, நிர்வாகத் தலைமை (லைகா புரொடக்ஷன்ஸ்)-: ஜி.கே.எம். தமிழ் குமரன், நிர்வாகத் தயாரிப்பாளர் – சுப்ரமணியன் நாராயணன், பத்திரிக்கை தொடர்பு –  ரியாஸ்.K.அஹ்மத்.

ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டு ஒரு மதமாகவே பரவியிருக்கிறது. இந்தக் கிரிக்கெட் விளையாட்டு ஒன்றில்தான் இந்தியாவில் இருக்கும் அத்தனை மதங்களை சேர்ந்தவர்களும் ஒன்றாக இணைந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த கிரிக்கெட் என்னும் மதத்திற்கும், மதம் பிடித்தால் என்னாகும் என்பதுதான் இந்தப் படத்தின் கதைக் கரு.

இந்துகளும், இஸ்லாமியர்களும் அண்ணன் – தம்பிகளாக பழகும் கள்ளக்குறிச்சி அருகேயிருக்கும் முரார்பாத் கிராமத்தில் இருந்து மும்பைக்கு சென்று பெரும் தொழிலதிபராக இருக்கிறார் மொய்தீன் பாய்’ என்ற ரஜினி. இவரது மகன் ‘சம்சுதீன்’ என்ற விக்ராந்த் கிரிக்கெட் வீர்ர். கிரிக்கெட் பைத்தியம். ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட முயற்சித்து வருகிறார்.

இதே நேரம் முரார்பாத்தில் இரண்டு கிரிக்கெட் குழுக்கள் உள்ளன. ஒன்றில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள். இன்னொரு அணியில் இந்துக்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதில் இந்துக்கள் இருக்கும் அணியின் தலைவனாக இருப்பவர் ரஜினியின் மறைந்த நண்பரான லிவிங்ஸ்டனின் மகன் ‘திரு’ என்ற விஷ்ணு விஷால்.

எப்போது ஊரில் மேட்ச் நடந்தாலும் கோப்பையை விஷ்ணுவிஷால் டீமே தட்டிச் செல்கிறது. இதனால் மும்பையில் இருக்கும் விக்ராந்தை ஊருக்கு வரவழைத்து போட்டியில் விளையாட வைக்கிறது இஸ்லாமிய டீம். இதிலும் விஷ்ணு விஷால் டீமே ஜெயிக்க.. இரண்டு அணிகளுக்குள் மத ரீதியான மோதல் உருவெடுக்கிறது.

ஏற்கெனவே சிறு வயதில் இருந்தே விஷ்ணு விஷாலுக்கும், விக்ராந்துக்கும் மோதல் இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த மோதல் தனிப்பட்ட விரோத்த்தையும் பெரிதாக்கிவிடுகிறது.

சந்தனக்கூடு திருவிழாவையொட்டி இன்னொரு கிரிக்கெட் மேட்ச்சை திட்டமிட்டு நடத்துகிறார்கள் இஸ்லாமிய அணியினர். இதில் விஷ்ணு விஷால் அணியினர் திட்டமிட்டு தோற்கடிக்கப்படுகின்றனர்.

இந்தப் போட்டியின் இறுதியில் இரண்டு அணியினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு அது அடிதடியாகி, மதக் கலவரமாக வெடித்து ஊரையே இரண்டாக்குகிறது. இந்த மோதலில் விக்ராந்த் தனது வலது கையையும் இழக்கிறார். இது அவருக்குள் தாங்க முடியாத கோபத்தை ஏற்படுத்த, விஷ்ணு விஷாலை கொலை செய்யும் வெறியில் இருக்கிறார் விக்ராந்த்.

இன்னொரு பக்கம் ஜாமீனில் ஊருக்குள் வந்தாலும் யாரும் மதிக்காத நிலையில்.. தனது தாயே தன்னை வீட்டுக்குள் விடாத சூழலில் விஷ்ணு விஷால் சிக்கலில் தவித்து வருகிறார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆளும் கட்சிப் பிரமுகரின் மருமகனான  விவேக் பிரசன்னாவின் தூண்டுதலால் ஊர்க் கோயில் தேர்த் திருவிழாவும் தடைபடுகிறது. ஊரில் நல்ல பெயரெடுக்க இதையொரு வாய்ப்பாக நினைக்கும் விஷ்ணு விஷால் ஊர்க் கோயிலுக்கு சொந்த செலவில் தேர் செய்ய முயற்சிக்கிறார்.

இந்த முயற்சியில் மொய்தீன் பாயின் பங்களிப்பு என்ன..? அந்த ஊரில் மீண்டும் மக்களிடையே மத ஒற்றுமையும், நல்லிணக்கமும் ஏற்பட்டதா..? இல்லையா..? என்பதுதான் இந்த லால் சலாம்’ படத்தின் திரைக்கதை.

ரஜினி சிறப்புத் தோற்றம் என்றாலும் படம் முழுவதும் வந்து படத்தை முழுமையாகத் தாங்கிப் பிடித்திருக்கிறார். அவருடைய அறிமுகக் காட்சியே வழமையான ரஜினி படங்களைப் போலவே மாஸ் என்ட்ரிதான்.

வீட்டுக்குள்ளேயே மகனுக்கு பந்து வீசுவதுபோல கற்பனை செய்து நடிக்கும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறது ஐஸ்வர்யாவின் இயக்கம். விக்ராந்துக்கு ரஞ்சி அணியில் இடம் கிடைத்ததும் மகிழ்ச்சியில் துள்ளுவதும், விக்ராந்தின் கிரிக்கெட் வாழ்க்கை பாழாய்ப் போன இடத்தில் உருகுவதுமாய் என தனக்குக் கிடைத்த இடங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ரஜினி.

அதேபோல் மத நல்லிணக்கம் பேசுமிடங்களிலும், இந்தியா, தேசியம், இஸ்லாமியர்களின் தற்போதைய நிலைமையை வெளிப்படையாக பேசி நடித்திருக்கிறார். அதே நேரம் ரஜினி, தான் ஒரு சங்கியல்ல என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் இருப்பதினால்தான் இந்தப் படத்தில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டு, இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பல இடங்களில் பேச வைக்கப்பட்டிருப்பதும் தெளிவாகத் தெரிகிறது.

விஷ்ணு விஷால் எப்போதும் சீரியஸான முகத்துடன் கிரிக்கெட்டே வாழ்க்கை என்பதைபோல நடித்திருக்கிறார். தான் செய்த தவறை உணர்ந்து அதற்குப் பரிகாரமாக ஊருக்கு தேரை ரெடி செய்து தரும் வேளையில் இறங்கும்போதுதான் படமே பரபரப்பாகிறது. சண்டை காட்சிகளிலும், காதல் காட்சிகளிலும் ஹீரோவுக்கு உரித்தான நடிப்பை காண்பித்திருக்கிறார் விஷ்ணு விஷால்.

இன்னொரு நாயகனான விக்ராந்த் முதல் சில காட்சிகளில் சாதாரணமாகத் தெரிபவர் கிரிக்கெட் மட்டையைத் தொட்டவுடன் வேறுவிதமான ஆக்சனைக் காட்டியிருக்கிறார். கொலை வெறியோடு விஷ்ணுவைத் துரத்தியவர், பின்பு கத்தி தன் கழுத்துக்கு வந்தவுடன் தன்னைக் காப்பாற்ற அதே திரு முன் வந்து கை கொடுக்கும்போது காட்டும் நடிப்பும், மனம் திருந்துவதும் வெகு இயல்பாக இருக்கிறது.

பல வருடங்கள் கழித்து தமிழ் சினிமாவுக்கு திரும்பியிருக்கும் ஜீவிதா இந்தப் படத்தில் அழுதே தனது நடிப்பை முடித்திருக்கிறார். ரஜினியின் வீட்டுக்கு வந்து வாசலில் அமர்ந்து அழும் காட்சியில் சென்டிமெண்ட்டும் ஓர்க் ஆகிவிட்டது.

நாயகி னந்திகாவுக்கு மிகப் பெரிய ஸ்கோப் இல்லை. சில காட்சிகளில் முகத்தைக் காட்டியும், ஒரு டூயட்டில் அழகைக் காட்டிவிட்டும் சென்றிருக்கிறார். இவர் கடைசியில் என்னவானார் என்பது தெரியவே இல்லை.

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தம்பி ராமையா தன் அனுபவ நடிப்பின் மூலமாக காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்புதான் ஊர்க் கோவில் சம்பந்தப்பட்ட கதைக்கு உயிர் கொடுத்திருக்கிறது.

அதேபோல் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் நகைச்சுவை நடிகர் செந்திலின் தாத்தா-பேரன் பாசம் கதை இன்னொரு பக்கம் நம் மனதை கனக்க வைத்திருக்கிறது.

சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிவது போல நடித்திருக்கிறார் லிவிங்ஸ்டன். ரஜினியின் மனைவியாக வரும் நிரோஷாவுக்கு பெரிய நடிப்பு வேலையில்லை என்றாலும், அவரும் ஸ்கிரீனில் வந்து சென்றிருக்கிறார்.

அரசியல்வாதியாக நடித்திருக்கும் போஸ்டர் நந்தகுமாரும், அவரது மருமகனான விவேக் பிரசன்னாவும் எதார்த்தமான வில்லத்தனத்தை காட்டி தற்போதைய தமிழக அரசியலை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள். அதிலும் விவேக் பிரசன்னாவின் வில்லத்தனம் அதிகம் ரசிக்க வைக்கிறது.

மேலும் இன்னொரு சிறப்பு தோற்றத்தில் கே.எஸ்.ரவிக்குமாரும், கபில்தேவும் வந்து செல்கின்றனர்.

படத்தில் முக்கியக் கதாபாத்திரம் என்று கடைசி நாட்களில் பரப்புரை செய்யப்பட்ட  தன்யா பாலகிருஷ்ணாவின் காட்சிகள் பெரிதாக இல்லை. வெட்டிட்டாங்களோ என்னவோவோ..? அவர் வரும் ஒரு காட்சியும் அமர்க்களம்..!

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் தேர் திருவிழா’, ‘ஜலாலி’ பாடல்கள் ஹிட் ரகம். ரஹ்மான் குரலில் ஒலிக்கும் ‘ஜலாலி ஜலாலி’ பாடல் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது. அதேபோல் தேவாவின் குரலில் வரும் ‘அன்பாளனே’ பாடல் இதயத்தை உருக வைக்கிறது. ‘தேர்த் திருவிழா’ பாடலில், மறைந்த பின்னணி பாடகர் ஷாஹுல் ஹமீதுவின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தியிருப்பது சிறப்பு. ஆனால், பின்னணி இசையை ரஹ்மான் இன்னும்கூட சிறப்பாக கொடுத்திருக்கலாம்.

விஷ்ணு ரங்கசாமியின் ஒளிப்பதிவில் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள், சண்டை காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. படத்தின் பிரம்மாண்டத்தை இவரது ஒளிப்பதிவுதான் வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் இப்போதைக்கு தேவையான மத நல்லிணக்கத்தை முன் வைத்து இப்படியொரு படத்தைக் கொடுத்தமைக்காக இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தைப் பெரிதும் பாராட்டலாம்.

கதைக் களம் 1993-ல் நடப்பதால், அந்தச் சூழலில் நடந்த மும்பை குண்டு வெடிப்பு, கலவரம் போன்ற விஷயங்களையும் கதையில் பொருத்தமாகப் பயன்படுத்தி இருப்பது சிறந்த ஐடியாதான்.

ஒரு கிராமத்தில் நடக்கும் கோவில் மற்றும் தேர்த் திருவிழா என்பது தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு நிகரான விழா என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம் மக்களின் வாக்குகளைப் பெற அரசியல்வாதிகள் என்னென்ன தில்லுமுல்லுகள், தந்திரங்கள், குழப்பங்களை செய்து,  ஒரு விஷயத்தை எப்படி ஊதி பெரிதாக்கி அதில் குளிர் காய்வார்கள் என்பதை திரைக்கதை, வசனத்தில் கச்சிதமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஐஸ்வர்யா.

படத்தின் மிகப் பெரிய மைனஸே இந்தப் படம் கிரிக்கெட் தொடர்பான படமா அல்லது ஊர்த் திருவிழா பற்றிய படமா என்கிற குழப்பம் இரண்டாம் பாதியில் வந்ததுதான். கிரிக்கெட் காட்சிகளும்கூட டென்ஷனைக் கூட்டாமல் வந்து செல்வது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

ஒரு மாநிலத்தின் ரஞ்சி போட்டியில் விளையாடும் அளவுக்கு திறமையுள்ள விக்ராந்த், கிராமத்தில் நடக்கும் தொடரில் விளையாட கூப்பிட்டவுடன் வருவதில் நம்பகத்தன்மை இல்லாமல் போய்விட்டது. இதேபோல் விஷ்ணு – விக்ராந்த் மோதலுக்கு இன்னமும் வலுவான காரணங்களைச் சொல்லியிருக்கலாம்.

என்னதான் மத நல்லிணக்கத்தை உணர்த்தும் படம் என்று சொன்னாலும் ஒரு கிராமத்தில் மத ரீதியாக 2 அணிகள் இருப்பது போன்று இருக்க முடியாத திரைக்கதையை அமைத்திருப்பது இயக்குநரின் வலிந்து திணிக்கப்பட்ட கற்பனையாகவே தெரிகிறது.

மேலும் முதல் பாதியிலும், இரண்டாம் பாதியிலும் முன்னும், பின்னுமாக நான் லீனியர் டைப்பில் மாறி மாறி வரும் திரைக்கதை ரசிகர்களை மேலும் குழப்பத்தில் கொண்டு போய் தள்ளிவிட்டது. இதை நேரடி காட்சிகளாகவே திரைக்கதையில் கொடுத்திருக்கலாம்.

இப்படி பல குறைகளை சொல்லிக் கொண்டே  போக வாய்ப்பிருந்தாலும் இப்போதைக்கு இந்திய துணைக் கண்டத்துக்கே தேவையான மத நல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் இந்தப் படம் பேசுகிறது என்பதால் இந்த ‘லால் சலா’மை நிச்சயம் நாம் இரு கரம் கூப்பி வரவேற்கலாம்.

RATING : 3.5 / 5

 

Our Score