full screen background image

L.ஜெகதம்மா 7B: ஸ்டேட் பர்ஸ்ட் – திரைப்பட விமர்சனம்

L.ஜெகதம்மா 7B: ஸ்டேட் பர்ஸ்ட் – திரைப்பட விமர்சனம்

எவர் ஸ்டார் இந்தியன் வழங்கும் எல் ஜகதம்மா ஏழாம் கிளாஸ் பி​’ படத்தைப் பாசில் ஹோல்டிங்ஸ் உடன் இணைந்து ஊர்வசி தயாரித்துள்ளார்.

ஊர்வசி, வி.கே.பைஜு, ராஜேஷ் ஷர்மா, ஜெயன் சேர்த்தலா, நோபி மார்கோஸ், அஞ்சலி சத்யநாத், கலேஷ் ராமானந்த், பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஜிபின் கோபிநாத், ரேஷ்மி அனில், ஷைலஜா அம்பு, பி.ஆர். பிரதீப் நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு அனில் நாயர், இசை கைலாஷ் மேனன், பாடல்கள் பி.கே.ஹரி நாராயணன், படத்தொகுப்பு ஷாய்ஜால் பி.வி, கலை இயக்கம் ராஜேஷ் மேனன், ஆடைகள் குமார் எடப்பால், ஒப்பனை ஹசன் நண்டு கோபாலய்ஸ், கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியுள்ளார் ஷிவாஸ். பத்திரிக்கை தொடர்பு: சக்தி சரவணன்.

திருமணம் ஆகாத 40 வயதைத் தாண்டிய ஜெகதம்மா, கேரளாவில் பாரத்தூர் என்கிற முன்னேற்றம் எட்டிப் பார்க்காத சிறிய ஊரில் வசித்து வருகிறார்.

அங்கே உள்ளவர்களுக்குக் குறிப்பாக  உழைக்கும் பெண்களிடம் வட்டிக்குப் பணம் கொடுத்து, வாங்கும் தொழில் செய்கிறார்.

 அத்துடன் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்டாகவும் இருக்கிறார். படப்பிடிப்புகளுக்கு துணை நடிகர்கள்  சப்ளை செய்கிறார். அவருக்கு நம்பிக்கைக்குரிய தம்பியைப் போல்  அன்வர் என்பவர் கூடவே இருக்கிறார்.

இப்படிப்பட்ட ஜெகதம்மா   சொன்னபடி கேட்பதற்கு அங்கே ஒரு பெண்கள் கூட்டம் இருக்கிறது. அதிகாரிகளின் சட்ட, திட்டங்களெல்லாம் அங்கே செல்லுபடி ஆகாது. அப்பகுதிப் பெண்கள் இவர் சொல்வதையே வேதவாக்காக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இது அந்தப் பெண்களின் கணவர்களுக்குப் பிடிப்பதில்லை.  இருந்தாலும் இவர் சொல்வதைத்தான் மனைவிகள் நம்புவார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவர் இறந்து விடுகிறார். அந்த  11 ஆவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஜெகதம்மா போட்டியிடும்படி ஒரு சூழல் வருகிறது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அவர் தேர்தலில் நிற்கிறார்.

அவரை எதிர்த்து தேசிய கட்சி, பொதுவுடமை கட்சி என இரண்டு பிரதான கட்சிகள் வேட்பாளர்களை களத்தில் நிறுத்துகின்றன. அனுதாப ஓட்டுகளை வைத்து வெற்றி பெறலாம் என்றுஇறந்த பஞ்சாயத்து தலைவர் மகளை நிறுத்தி ஒரு கட்சியினர் தேர்தல் பணியாற்றுகிறார்கள். 

இன்னொரு கட்சியான பொதுவுடமைக் கட்சியில் ஒரு பெரிய பணக்காரரை வேட்பாளராக நிறுத்துகிறார்கள். அவருக்கு வாய்ப்பு கொடுத்ததில் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் முணுமுணுப்புகள் எதிர்ப்புகள் கிளம்புகின்றன.  அப்போது அந்த உறுப்பினர்களின் வங்கிக் கணக்கில் ஐம்பதாயிரம் ரூபாய் வந்தவுடன் அவர்கள் எல்லோரும் மனம் மாறி ஒப்புக் கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட இரு பெரிய மலைகள் இடையே ஜெகதம்மா மோதுகிறார். இவரை எதிர்த்து பல்வேறு பிரச்சாரங்கள் செய்கிறார்கள். இந்த அரசியல் விளையாட்டில் தனி ஒரு நபராக ஜெகதம்மா எப்படி ஜெயிப்பார் ?

அந்தப் பகுதி மக்களைக் கவர மூன்று வேட்பாளர்களும் விவாதம் செய்யும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். சித்தாந்தங்கள் சட்ட திட்டங்கள் பேசும் அவர்கள் மத்தியில் ஜெகதம்மா சில எளிமையான கேள்விகள் கேட்டு அவர்களை மடக்குகிறார். அது  பொதுமக்களிடம் பிரபலமாகிறது. அது மட்டுமல்லாமல் இவர் எளிமையாக ஜோடனை இல்லாமல் பேசுவது வைரலாகிறது.

ஜெகதம்மாவுக்கு வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. அப்போது அவரே மக்களிடம் அனுதாபம் பெறுவதற்கு ஒரு வேலையைச் செய்கிறார். அத்துடன் இடைவேளை வருகிறது.

அவர் செய்த வேலையால் மக்களிடம் அனுதாப அலையடிக்கிறது.11-வது வார்டு தேர்தலில் ஒரு வழியாக வெற்றி பெற்று விடுகிறார். எதிர்க்கட்சிகள் வாயடைத்துப்  போயிருக்கின்றன.

பஞ்சாயத்து தலைவரைத்  தேர்ந்தெடுப்பதில் இரு பக்கமும் சம பலத்துடன் இருப்பதால் ஒரு சிக்கல் வருகிறது. ஜெகதம்மாவின் ஒற்றை வாக்கு  முக்கியமானதாகிறது. இவரைத் துணைப் பஞ்சாயத்து தலைவராக முயற்சி செய்கிறார்கள். தான் தலைவராகத்தான் ஆவேன் என்று பிடிவாதம் பிடித்து அதிலும் வெற்றி பெறுகிறார். இவரைத் தலைவராக்கி தாங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளலாம் என்று நம்பிய அரசியல்வாதிகளுக்கு அவர்கள் எண்ணத்திற்கு எதிராகச் செயல்பட்டு பேரிடியாக மாறுகிறார்.

ஒரு காலத்தில் வட்டி வசூல் செய்யும் ராணியாக ஜெகதம்மா இருந்திருந்தாலும் அந்தப் பதவிக்கு வரும்போது மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்.

அங்குள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு உருப்படியாக செய்ய நினைக்கிறார். அங்கே கழிவு மேலாண்மை இல்லாமல் ஊரை அசுத்தப்படுத்துவதைக் தடுக்க நினைக்கிறார். இதற்காக கலெக்டரிடம்   மனு கொடுக்கிறார். இது எதிர்க்கட்சிகளுக்குப் பிடிக்கவில்லை .அவருக்கு எதிராகச் சதி செய்கிறார்கள்.

ஜெகதம்மா எதார்த்தமாக பேசிய பேச்சை வைத்து, கலவரம் செய்கிறார்கள். கலவரத்தைத் தூண்டினார் என்று  பழி போடுகிறார்கள். சிறை செல்கிறார். பிறகு குற்றமற்றவராக விடுதலையாகிறார்.

ஜெகதம்மா எதார்த்தமாக பேசிய பல பேச்சுகள் மக்களிடம் தீயாகப் பரவுகிறது. தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். அவர்களைப் பார்த்து இவர் நங்கு பழிக்கிறார். அது அவர்களை அவமானப்படுத்தியதாகப் பிரச்சாரம் செய்தாலும் மக்களிடம் அது பிரபலமாகிறது.

இப்படி அவருக்கு எதிரான அம்புகள் அனைத்தும் பூ மாலையாக மாறியது போல் அவருக்கு விளம்பரமாகவும் அமைகிறது.செல்வாக்கும் உயர்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் ஜெகதம்மா ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கிறார். நோட்டாதெரியாமல் வெள்ளந்தியாக இருக்கும் ஜெகதம்மா, பஞ்சாயத்து தலைவர் ஆன பிறகு தெருவில் பொறுப்பில்லாமல் குப்பை போடுபவர் வீட்டுக்கு அதை பார்சல் செய்து கொடுத்துவிட்டு அபராதத் தொகை செலுத்த பில்லை நீட்டும்போது பொறுப்புள்ள ஊர்த் தலைவராக மாறி இருப்பார்.

அங்கே முறைசாரா தொழில் செய்து கொண்டு இருந்தவர்களுக்கு  மத்திய அரசு 100 கோடி ரூபாய் வழங்குகிறது. அதன் பிறகு அவர் தடையை உடைத்து முன்னேறிய ஒரு தலைவராக உருவெடுக்கிறார்.

அவரை இழுப்பதற்குப் பல்வேறு கட்சிகள் போட்டி போடுகின்றன. இன்னொரு பக்கம் தனிக் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறுகிறார்கள். இத்தனை கட்சிகள் இத்தனை கொடிகள் இருக்கும் போது இன்னொரு கட்சியா? இன்னொரு கொடியா? நமக்கு இருக்கும் ஒரு கொடி போதும் என்று அவர் தேசியக் கொடியைக் காட்டுகிறார் அத்துடன் படமும் முடிகிறது.

இந்தப் படத்தில் ஊர்வசி, ‘ஜெகதம்மா என்கிற டைட்டில் ரோல் ஏற்றுள்ளார். ஜெகதம்மாவாக ஊர்வசி படம் முழுக்க ஆக்கிரமித்து அனைத்து காட்சிகளிலும் அவரே மேலோங்கி நிற்கிறார்.

அந்தக் கதாப்பாத்திரத்தை தக்க வைத்துக் கொண்டு கம்பீரமாக படத்தைத் தூக்கிச் சுமந்து இருக்கிறார். பல்வேறு பாத்திரங்கள் இடையில் ஊடாடி வந்தாலும் எல்லாவற்றையும்விட அவர்தான்  மேலோங்கி வெளிப்பட்டுள்ளார். பல்வேறு சந்தர்ப்பங்களில், விதவிதமான முகபாவனைகள் என்று நடிப்பாற்றல் காட்டுவதற்கான வாய்ப்புகளும் படத்தில் உள்ளன. அதை அவரும் சரியாகப் பயன்படுத்தி உள்ளார்.

அந்தக் கிராமத்து மனுஷியாகச் சரியாக உடல் மொழி காட்டி உள்ளார். எனவே படம் பார்த்துவிட்டு  வெளியே வருகிறபோது ஜெகதம்மா மட்டுமே நினைவில் நிற்கும்படியாக அவர் நடித்துள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் பொதுவுடைமை கட்சி வேட்பாளர், தேசியக் கட்சித்  தலைவர்கள்,ஊர்வசியுடன் எப்போதும் துணை நிற்கும்  அன்வர் என்கிற வாலிபன்,தொலைக்காட்சி நேர்காணல் செய்பவர், லோக்கல் யூடியூப் சேனல்காரர் என்று பல்வேறு முகங்கள் மனதில் பதிகிறார்கள்.

எப்போதுமே ஏதாவது ஒரு ஸ்லோகத்தை சொல்லிக்கொண்டு இருக்கும் ஒரு பாத்திரம் நினைவில் இருக்கும்.

எளிமையான காட்சிகள் மூலம் கதாபாத்திரங்களின் தன்மையை உணர்த்தும் வகையில் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.அதற்கேற்ற வகையில் ஒளிப்பதிவாளர் அனில் நாயரின் ஒளிப்பதிவு  அமைந்துள்ளது. இசையமைப்பாளர்  கைலாஷ் மேனனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகமாக உள்ளன.

அரசியல் கட்சிகள் செய்யும் அன்றாடச் செயல்பாடுகளை எல்லாம் காட்சிகள் ஆக்கி விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறார்கள்.

அரசியல் விளையாட்டில் எதுவும் சகஜம் என்று இருக்கும் கட்சிகளின் போக்கையும் காட்சிகள் ஆக்கியிருக்கிறார்கள்.

ஏழாம் வகுப்பு படித்த ஒரு பெண், ஸ்டேட் ஃபர்ஸ்ட் என்று கூறும் அளவிற்கு எப்படி மாநிலத்தில் முதலாவதாகப் பார்க்கக் கூடிய பெண்ணாக உயர்கிறாள் என்பதுதான் இந்தக் கதை.

ஓர் எளிமையான கதையை எடுத்துக் கொண்டு கலகலப்பான காட்சிகளைக் கொண்டு வலிமையான கருத்தை சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்பில் வெற்றிகரமான படமாக உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் மலையாளத்தில் வந்திருந்தாலும் காட்சிகள் மொழித் தடைகளை தாண்டி ரசிக்க வைக்கின்றன.

ஊர்வசி என்ற நடிப்பு  ராட்சசிக்காக இந்தப் படத்தை நிச்சயமாக பார்க்கலாம்தான்!

RATING :3.5 / 5

Our Score