இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் லைகா நிறுவனத்திற்கும் சம்பந்தமில்லை என்று விஜய் நடிக்கும் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர் ஐங்கரன் கருணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.
விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘கத்தி’ படத்தினை ஐங்கரன் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. அனிருத் இசையக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார்.
இந்நிலையில் லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் கரன் அல்லிராஜா, இலங்கை அரசுடன் தொடர்புடையவர் என செய்தி பரவியது. இதனால், படத்திற்கு பெரும் பிரச்சினை ஏற்படும் என்று கருதிய தயாரிப்பாளர்களின் ஒருவரான ஐங்கரன் கருணாமூர்த்தி, நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
கருணாமூர்த்தி அவர்களிடம் பேசும்போது, “நான் 27 வருடங்களாக இந்தச் சினிமா துறையில் இருப்பவன். தொழிலில் நிறைய ஏற்ற, இறக்கங்களைப் பார்த்திருக்கிறேன். ஐங்கரன் நிறுவனத்தைப் பற்றி உங்களுக்கே தெரியும்… கிட்டத்தட்ட 2000 படங்களுக்கும் மேலாக வெளிநாடுகளில் வெளியிட்டு இருக்கிறோம்.
லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா எனது 20 வருட கால நண்பர். அவர் இலங்கையில் முல்லைத்தீவைச் சேர்ந்தவர். அவர் 100 சதவீதம் தமிழர். அவரது அம்மா முல்லைத்தீவு, அப்பா திருக்கோணமலை. இப்போது லண்டனில் பிசினஸ் பண்ணிட்டு இருக்கார்.
நான் இலங்கையில் பிறந்து வளர்ந்தவன். நாட்டை விட்டு 30 வருடங்களுக்கு முன்பே வெளியே வந்துவிட்டேன். லண்டனில் தமிழர்கள் என்றால் புலிகள் என்றுதான் சொல்வார்கள். நினைப்பார்கள். இதற்கு நாங்களும் விதிவிலக்கல்ல.. வியாபாரத்திற்காக ஒவ்வொரு நாட்டின் சட்டத் திட்டங்களுக்கு ஏற்ப கட்டுப்பாட்டுடன் நாங்கள் தொழில் செய்து வருகிறோம்.
நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் எங்கள் ஐங்கரன் நிறுவனத்திற்குதான் தேதிகளை கொடுத்தார்கள். ஆனால், பல்வேறு காரணங்களால் எங்களால் தனியாக தயாரிக்க முடியவில்லை. அப்போதுதான் சுபாஷ்கரன், “இவ்வளவு அனுபவத்தை வைச்சுக்கிட்டு ஏன் சும்மா இருக்கீங்க? வாங்க.. நாம சேர்ந்து பண்ணலாம்..”ன்னு சொன்னார். இந்தப் படத்தினை 100 சதவீதம் நான் மட்டும்தான் தயாரிக்கிறேன். அவர் எனக்கு பண உதவி பண்றார்.. அவ்வளவுதான்.
அதற்குள்ளாக விஜய் படத்தின் தயாரிப்பாளர்களாகிய நாங்கள் இலங்கை அரசாங்கத்தோடு சேர்ந்து பணியாற்றுகிறோம் என்று இந்த படத்திற்கு சம்பந்தமில்லாத செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அந்தச் செய்தியில் துளியும் உண்மையில்லை. லைகா நிறுவனம் உலகத்தில் நம்பர் ஒன் டெலிகாம் நிறுவனமாகும். அவர்களுக்கு தொழில்முறை போட்டியாளர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் கிளப்பிவிடும் செய்திகள்தான் இவை.
2013-ல் சுபாஷ்கரன் கம்பெனியில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்டோர் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்தார்கள். நானும் உடன் போயிருந்தேன். அவர் பிறந்த இடம், உள்ளிட்ட இலங்கை முழுவதையும் சுற்றிப் பார்த்தோம்.
தனியார் ஹெலிகாப்டர்கள் எல்லாம் இலங்கை விமானப் படையினரிடம் இருந்துதான் பெற முடியும். 25 பேர் அமரக் கூடிய இரண்டு ஹெலிகாப்டர்களை வாடகைக்கு எடுத்து, 5 நாட்கள் சுற்றிப் பார்த்தோம். அப்படிச் சுற்றிப் பார்க்கும்போது போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நிறைய உதவிகளை செய்ய சுபாஷ்கரன் முன் வந்தார். இந்தாண்டு ரூ.20 கோடி நிதியுதவி கொடுத்திருக்கிறார். அடுத்தாண்டு இன்னும் அதிகமாகவும் செய்ய முன் வந்திருக்கிறார்.
நாங்கள் இலங்கை சென்று வந்தது அனைத்துமே ஈழ மக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே தவிர, வேறு எந்த ஒரு டீலிங்கும் கிடையாது. இலங்கை அரசிடம் தொடர்பு வைத்துக் கொள்ளும் அளவிற்கு லைகா நிறுவனம் சிறு நிறுவனம் அல்ல. ராஜபக்சேவுக்கும் சுபாஷ் கரனுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது.
(கீழேயுள்ள புகைப்படத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள். சென்ற வருடம் கொழும்புவில் நடந்த அணி சேரா நாடுகளின் உச்சி மாநாட்டின் மெயின் ஸ்பான்சர் இந்த லைகா மொபைல் நிறுவனம்தான். ‘பக்சே’ பிரதர்ஸின் ஆசி இல்லாமல் இது நடக்குமா..?)
இதே லைகா நிறுவனம் ஏற்கெனவே ஞானம் புரொடெக்சன்ஸ் என்ற பெயரில் இயக்குநர் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் சேரன் நடிக்க.. ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தமிழ்ப் படத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார்கள்.
இந்த நேரத்தில் இந்தப் படத்தில் சுபாஷ் கரனை தயாரிப்பாளராக இருக்க வேண்டாம் என்று முடிவு செய்தால்.. பத்திரிகைகளில் வந்த செய்தி உண்மையாகிவிடும். அதனால்தான் அதனைச் செய்யாமல் இருக்கிறேன்.
‘கத்தி’ படத்தினைப் பொறுத்தவரை 40 சதவிகிதம் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. விஜய் இரு வேடங்களில் நடித்து வருகிறார். படம் இந்தாண்டு தீபாவளியன்று வெளியாகும். இப்போதைக்கும் என்னால் இதை மட்டுமே கூறமுடியும்…” என்றார் அவர்.