full screen background image

வடிவேலு தமிழரென்று சீமானுக்கு இப்போதுதான் தெரியுமா?-சீறுகிறது தெலுங்கு அமைப்பு..!

வடிவேலு தமிழரென்று சீமானுக்கு இப்போதுதான் தெரியுமா?-சீறுகிறது தெலுங்கு அமைப்பு..!

‘தெனாலிராமன்’ படத்தில் கிருஷ்ணதேவராயரை களங்கப்படுத்தும்விதத்தில் வடிவேலு நடித்திருப்பதாகக் கூறி அந்தப் படத்தை மறுபடியும் சென்சார் செய்ய வேண்டும் என்று சென்னையில் இருக்கும் தெலுங்கு மக்கள் பேரவை சார்பில் கோரிக்கை விடப்பட்டிருந்தது.. வடிவேலுவுக்கு எதிராக இந்த அமைப்பினர் போராட்டமும் நடத்தியிருந்தனர்.

இந்தச் சர்ச்சையில் 4 நாட்களுக்கு முன்பாக வடிவேலுவுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அந்த அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு தெலுங்கு மக்கள் பேரவை நிறுவனர் தலைவர் ஆர்.பாலகுருசாமி நேற்று ஒரு பதில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.

“வடிவேலு ஒன்றும் எங்களின் எதிரி அல்ல. எங்கள் உணர்வுகளை ஜனநாயக வழியில் வெளிபடுத்தி வருகிறோம். கடந்த 3 ஆண்டுகளாக படம் இல்லாமல் வடிவேலு இருந்தபோது சீமான் ஏன் அவரை வைத்து படம் எடுக்கவில்லை..?

இன்று ‘தெனாலிராமன்’ படத்தை எதிர்ப்பது தெலுங்கு அமைப்புகள் என்றதும் சீமான் கச்சை கட்டிக்கொண்டு களத்தில் குதித்துள்ளார். இன்று மட்டும் வடிவேலு தமிழன் ஆகிவிட்டார். கமலின் ‘விஸ்வரூபம்’ படத்துக்கும், நடிகர் விஜயின் ‘துப்பாக்கி’ படத்துக்கும் பிரச்சினை வந்தபோது, சீமான் எங்கே சென்றிருந்தார். கமலும், விஜயும் தமிழர்கள் இல்லையா?.

எங்கள் உணர்வுகளை ஒடுக்கும் வகையில் மிரட்டல்கள் விடுக்கும் தொனியில் பேசி வந்தால் உங்கள் மிரட்டலுக்கு அடி பணிய மாட்டோம். நாங்கள் எதையும் சந்திக்க தயார். எங்களுக்கு நீதி கிடைக்கும்வரை நாங்கள் ஜனநாயக வழியில் போராடுவோம். சீமானுக்கு இதன்மூலம் எங்களுடைய கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்..” என்று அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பிரச்சினை போகிற போக்கைப் பார்த்தால், இது கடைசியாக தெலுங்கர்-தமிழர் என்கிற பிரிவினை பிரச்சினைக்குள் கொண்டுபோய் விடும் என்றே தெரிகிறது. அடுத்த வார வெள்ளிக்கிழமை என்று ரிலீஸ் தேதியைக் குறித்து வைத்துக் கொண்டு தயாரிப்பாளர்கள் காத்திருக்கும் சூழலில் இந்த நிலைமையை இப்போதே தமிழ்த் திரையுலகத்தினர் முடிவுக்குக் கொண்டு வந்தால் நல்லது..! இல்லையேல் எல்லோருக்குமே சிக்கல்தான்..

முள் மேல சேலை விழுந்துவிட்டால் சூதானமாகத்தான் எடுக்க வேண்டும். இல்லாவிடில் சேலைதான் கிழியும்..!

Our Score