பெங்களூர் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் தேர்வு..!

பெங்களூர் சர்வதேசத் திரைப்பட விழாவிற்கு ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் தேர்வு..!

வெளிவருவதற்கு முன்னரே பரவலாக ‘சிறந்த படம்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுவிட்டது ‘குற்றம் கடிதல்’ திரைப்படம். நல்ல சினிமாவை கொண்டாடும் பல்வேறு திரைப்பட விழாக்களில் இத்திரைப்படம் கலந்து கொண்டு, தமிழ்நாட்டின் பெயரையும், தமிழ் சினிமாவின் பெயரையும் நிலைநாட்டி வருகிறது.

பிரம்மா.G என்ற அறிமுக இயக்குநரின் இயக்கத்தில் ஜே.எஸ்.கே. FILM CORPORATION என்கிற நிறுவனத்தின் சார்பில் ஜே.சதீஷ்குமார் மற்றும் CHRIST PICTURES சார்பில் கிறிஸ்டி தயாரித்திருக்கும் படம் ‘குற்றம் கடிதல்.’

இத்திரைப்படம் இதுவரையிலும் ஜிம்பாப்வே திரைப்பட விழா, மும்பை திரைப்பட விழா, கோவாவில் நடைபெறும் சர்வதேசத் திரைப்பட விழா ஆகிய திரைப்பட விழாக்களில் பங்கு கொண்டு சிறந்த படத்திற்கான அங்கீகாரம், மற்றும் கௌரவத்தைப் பெற்றதை போல, இப்போது அடுத்த மாதம் பெங்களூருவில் நடைபெறவுள்ள 7-வது சர்வதேச திரைப்பட விழாவிலும் கலந்து கொள்ளும் தகுதியைப் பெற்றிருக்கிறது.

“இந்தக் ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் ஒவ்வொரு விடியலிலும் எங்களுக்கொரு நல்ல சேதியை வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சந்தோஷத்தை சொல்லில் அடக்க முடியாது. இது போன்ற தரமான படங்களை தயாரிக்கும் பணியை இப்போது பயிற்சியாக மேற்கொண்டு வரும் நான், இனிமேல் இதனை எனது வழக்கமாகவே மாற்றுவேன்” என்கிறார் தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார்.

கூடவே இன்னொரு செய்தி.. விஜய்சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ படமும் இதே திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக தேர்வாகியுள்ளதாம்..!

தமிழ்ச் சினிமாவிற்கு பெருமையளிக்கும் விஷயம்தான் இது..!

Our Score