full screen background image

அயோத்திதாசரின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட படம் ‘குதிரை வால்’..!

அயோத்திதாசரின் கருத்தை அடிப்படையாகக் கொண்ட படம் ‘குதிரை வால்’..!

தற்போது தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டு 100 சதவிகித பார்வையாளர்களுடன் திரைப்படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன.

பெரிய பட்ஜெட் படங்கள், பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், புது முயற்சிகளை கையில் எடுத்து அதில் உருவாகி வரும் புதிய படங்களும் அவ்வப்போது வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில், தமிழ் சினிமா இதுவரை கண்டிராத புதிய முயற்சியை கையில் எடுத்திருக்கிறது ‘குதிரை வால்’ திரைப்படம். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசரும், ட்ரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கின்றன.

இயக்குர் பா. இரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் 18-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சில்லுக்கருப்பட்டி’, ‘வாழ்’ ஆகிய படங்களுக்கு அடுத்து பிரபல பாடகர் பிரதீப் குமார் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர்களான மனோஜ் லியோனல் ஜாசன், ஷ்யாம் சுந்தர் இருவரும் இணைந்து இந்தப் படத்தை இயக்கியுள்ளனர்.

படத்தின் ட்ரெய்லரில், “கனவுல தொலைச்சத நனவுல தேடுறன்”, “இதுவொரு உளவியல் போர்”, “கனவுக்கு மேக்ஸ்ல விடை இருக்கா?”, “மேக்ஸ்ல ஒரு Illusion theory இருக்கு” – இது போன்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

வழக்கமான திரைப்படத்தில் இல்லாத புதிய கதைக் களம் கொண்டதாக இந்தப் படத்தின் திரைக்கதை இருக்கும் என்று டிரெயிலரை பார்த்தாலே தெரிகிறது.

“இந்தக் குதிரை வால்’ திரைப்படம் ஏன் திரையரங்குகளில் வெளியாக வேண்டும்?”, இந்தப் படத்தைப் மக்கள் ஏன் பார்க்க வேண்டும்..?”,  இந்தக் ‘குதிரை வால்’ திரைப்படத்தில் அப்படி என்னதான் சிறப்பு..?” போன்ற கேள்விகளுக்கு படக் குழு தற்போது பதிலளித்துள்ளது.

“நிறைய புதிய விஷயங்களை படத்தில் முயற்சி செய்திருக்கின்றோம் என்றாலும் இது ஒரு அரசியல் படம். அயோத்திதாசரின் இந்திர தேச சரித்திரம்’தான் இந்தக் குதிரை வால்’ படத்திற்கு அடித்தளம். ஒரு மரபு வழிப் புனைவை, இன்னொரு புனைவால்தான் உடைக்க முடியும் என்ற அயோத்திதாசரின் கருத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் எழுதப்பட்டது. புனைவு மூலமாக ஒட்டு மொத்த வரலாற்றையும் இந்தக் ‘குதிரை வால்’ படம் கேள்விக்கு உட்படுத்தும்.

குதிரை, இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வரலாற்றில் ‘குதிரை என்பது ஆக்கிரமிப்பின் சின்னமாகவே இருந்து வருகிறது என்பதை இந்தக் ‘குதிரை வால்’ படம் சுட்டிக் காட்டும்.

இப்படத்தில் புதுமைகள் எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவில் இது ஒரு சீரியஸான படமும்கூட. பெரியாரின் பகுத்தறிவும் இப்படத்தில் இருக்கும். ஆனால் அது புனைவாகவும் இருக்கும். இப்படத்தில் தமிழ் சிறு பத்திரிக்கைகளின் தாக்கமும் உண்டு. இதில் மேஜிக்கல் ரியலிசமும் உண்டு…” என்கிறது படக் குழு.

இந்தக் ‘குதிரை வால்’ படம் குறித்து தயாரிப்பாளரும், இயக்குநருமான பா.ரஞ்சித் பேசுகையில், “தமிழ்ச் சினிமாவில் இது ஒரு புதிய ஆரம்பமாக இருக்கும். புற உலகில் இருந்து விலகி அக உலகிற்குள் இருக்கும் ஒரு கலையைப் பற்றி இந்தக் ‘குதிரை வால்’ படம் பேசி இருக்கிறது. கனவு, கனவு உலகத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி இந்தக் ‘குதிரை வால்’ காட்சிப்படுத்தி உள்ளது.

வழக்கமான ஹீரோ-வில்லன் கதையாக இல்லாமல், பார்ப்பவர்கள் பர்சனலாக தங்களை படத்துன் தொடர்பு செய்து கொள்ளக் கூடிய அளவில் இந்தப் படம் இருக்கும். திரையரங்குகளில் இந்தக் குதிரை வால்’ படம் தரும் புதிய அனுபவம் நிச்சயமாக ரசிகர்களிடையே பேசப்படும்..” என்றார்.

இந்தப் படத்தின் டிரெய்லரின் துவக்கத்திலேயே இப்படம் கலந்து கொண்ட பல்வேறு திரைப்பட விழாக்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறது. உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்று, இறுதியாக மக்கள் பார்வைக்காக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வரும் மார்ச் 18-ம் தேதியன்று வெளியாக இருக்கிறது இந்தக் குதிரை வால்’ திரைப்படம்.

காணத் தவறாதீர்கள்..!!!

Our Score