‘இது நம்ம ஆளு’ திரைப்படம் தொடர்பான சர்ச்சை இப்போது வெளிப்படையான மோதலாகவும் ஆரம்பித்திருக்கிறது.
சிம்பு-நயன்தாரா நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தினை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வருகிறார். படத்திற்கு இசை டி.ராஜேந்தரின் இளைய மகனான குறளரசன்.
‘படம் துவங்கி முடியும் இந்த நேரத்திலும் இன்னமும் 2 பாடல்கள் தயாராக இல்லையென்றும், அதனைத் தயார் செய்து கொடுத்து, நயன்தாராவும் வந்துவிட்டால் நான் ஷூட் செய்து கொடுக்கத் தயார்’ என்று பாண்டிராஜ் சென்ற மாதமே ட்வீட் செய்திருந்தார்.
இந்த நேரத்தில் நேற்று மாலை குறளரசன் தனது ட்வீட்டில், “நானும் எனது அப்பாவும் விரைவில் பத்திரிகையாளர்களை சந்திக்கப் போகிறோம். எனது வாழ்க்கையில் இந்த அளவுக்கு யாரும் என்னை மோசமாக பேசியதில்லை. இது நம்ம ஆளு படத்தின் பாடல்களை நன்றாக இல்லையென்றும், ஒருத்தரும் கேட்க மாட்டார்கள் என்று இயக்குநர் பாண்டிராஜ் சொல்கிறார். ரசிகர்கள்தான் பாடல்களை கேட்டு அது பற்றி முடிவெடுக்க முடியும்..” என்று சொன்னார்.
இதையடுத்து இந்த ட்வீட்டிற்கு பதிலளித்த பாண்டிராஜ், மிக கிண்டலாக ஒரு ட்வீட்டரை எழுதினார்.
இதற்கடுத்து மேலும் கோபமடைந்த குறளரசனும் தன் பங்கிற்கு மேலும் ட்வீட்டுகளை போட்டுத் தாளிக்க.. தனக்கு இன்னும் சம்பளப் பாக்கியிருப்பதாகவும், ஒரு வருடம் கழிந்தும்கூட இன்னும் தரப்படவில்லை என்று பாண்டிராஜும் குற்றம் சாட்டியிருக்கிறார். கூடவே, விரைவில் அவரும் இது நம்ம ஆளு படக் குழுவினருடன் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்கப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.
ட்வீட்டர் உலகம் சுறுசுறுப்படைந்து ஏகப்பட்ட ஷேர்களைச் செய்து தனது கடமையைக் கச்சிதமாகச் செய்து வருகிறது.
தனது முதல் படத்திலேயே இப்படியொரு சோதனையை எதிர்பார்த்திருக்கவே மாட்டார் குறளரசன். அதிலும் தனது இசையார்வத்திற்கு படத்தின் இயக்குநரே கொள்ளி வைத்திருப்பது அவருக்குள் கோபத்தைக் கிளறியிருக்கிறது. அதனால்தான் இந்த டிவிட்டர் புலம்பல்..!
இது ஒரு புறமிருக்க இன்னொரு பக்கம் நயன்தாராவை மிச்சமிருக்கும் பாடல் காட்சிகளில் நடித்துக் கொடுக்க வரும்படி தயாரிப்பாளர் சங்கம் மூலமாக டி.ராஜேந்தர் கேட்டிருக்கிறார். தனக்கு சம்பளப் பாக்கியிருப்பதால் நயன்தாரா வருவதற்கு யோசிக்கிறாராம்..!
ஏற்கெனவே ‘வாலு’ படத்தை சிம்புவுக்காக வாங்கி சொந்தமாக ரிலீஸ் செய்த டி.ராஜேந்தர் அதன் மூலம் பல கோடிகளை நஷ்டமாக இழந்து தவிக்கிறார். இந்த நிலைமையில் சிம்புவின் அடுத்த படமும் இப்படியொரு சிக்கலை உருவாக்கியிருக்கிறது..
பாசமிக்க தந்தையாக, அதுவும் பணக்கார தந்தையாக இருப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை தமிழ்ச் சமூகத்திற்கு உணர்த்தி வருகிறார் திரையுலக அஷ்டாவதனி டி.ராஜேந்தர்..!
பாவம் என்கிற வார்த்தையை உதிர்ப்பதைத் தவிர நம்மால் வேறொன்றும் சொல்ல முடியவில்லை..!