full screen background image

குமார சம்பவம் – சினிமா விமர்சனம்

குமார சம்பவம் – சினிமா விமர்சனம்

இந்தப் படத்தை தயாரிப்பாளர் கே.ஜே.கணேஷ் தயாரித்துள்ளார்.

இந்தப் படத்தில் குமரன் தங்கராஜன், பாயல் ராதாகிருஷ்ணா, குமரவேல், ஜி.எம்.குமார், வினோத் முன்னா, வினோத் சாகர், பாலசரவணன், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், கவுதம் சுந்தர்ராஜன், அர்ஜய், சார்லஸ் வினோத், விஜய் ஜாஸ்பர், கே.சரவணன், கே.கோபால், டெலிபோன் ராஜ், சக்தி பாலாஜி கிருஷ்ணராஜ், வி.தாரணி, கவிதா, சரவண் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.

எழுத்து, இயக்கம்பாலாஜி வேணுகோபால், இசைஅச்சு ராஜாமணி, ஒளிப்பதிவுஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பாளர்ஜி.மதன், கலை இயக்கம்கே.வாசுதேவன், உடை வடிவமைப்புநந்தினி நெடுமாறன், சண்டை இயக்கம்ஓம் பிரகாஷ், பத்திரிக்கை தொடர்புநிகில் முருகன்.

காளிதாசனின் மகா காவியமான குமார சம்பவம் என்ற தலைப்பை வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் குமரன் என்ற பெயருடைய ஒரு ஹீரோ அறிமுகம் ஆகிறார் என்பதை தவிர அந்தக் கதைக்கும், இந்தக் கதைக்கும் வேறு எந்தத் தொடர்பும் இல்லை.

ஹீரோ குமரன் தன் தாத்தா, தாய், தங்கையுடன் ஒரு பெரிய வீட்டில் வசித்து வருகிறார். குமரன் சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்கின்ற ஆசையில் பல தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி ஓகே வாங்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.

இவருடைய வீட்டின் மேல் மாடியில் வருடக் கணக்காக குடியிருப்பவர் குமரவேல் என்ற சமூக செயற்பாட்டாளர், சமூக அக்கறை கொண்டவர் அடிக்கடி நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து அரசு அமைப்புகளை கோர்ட்டுக்கு இழுக்கும் ஒரு நேர்மையான மக்கள் தொண்டர். ஆனால், இவருக்கும் குமரனுக்கும் ஆகாது. ஏதோ ஒரு மோதல் இருவருக்கும் இடையில் இருக்கிறது.

இந்த நேரத்தில் எந்த தயாரிப்பாளரும் தன்னுடைய கதையை படம் பார்க்க முன் வராததால் நாமே சொந்தமாக படம் தயாரிக்கலாம் என்று தன் நண்பன் பேச்சைக் கேட்டு தாத்தாவிடம் சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி சண்டைக்கு வருகிறார் குமரன்.

அந்த வீட்டை இப்போது விற்றால் மொத்தமாக 22 கோடி கிடைக்கும் என்பதால் இந்த வீட்டை விற்றுவிட்டு பணத்தை மூன்று பேரும் பங்கு போட்டுக் கொண்டு அந்த பணத்தில் நான் ஒரு நான் ஒரு சினிமா இயக்குநராக தலையெடுக்க விரும்புகிறேன் என்கிறார் குமரன். ஆனால் தாத்தாவோ முடியவே முடியாது. நான் சாகின்றவரையிலும் இந்த வீட்டில்தான் இருக்க வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.

பேரனும், தாத்தாவும் இப்படி முட்டிக்கொண்டு இருக்கும் சூழலில் தாத்தா திடீரென்று இறந்துவிடுகிறார். அவர் இறந்துவிட்டாலும் அவருடைய உயில் உயிரோடு இருக்கிறது.

அந்த உயிரின்படி தன்னுடைய சொத்துக்களை 4 பாகமாக பிரித்து நான்காவதாக மாடியில் குடியிருக்கும் குமரவேலுக்கும் ஒரு பாகத்தை எழுதி வைத்துவிட்டு போய் இருக்கிறார் தாத்தா. இது குமரனுக்கு மிகப் பெரிய கோபத்தை ஏற்படுத்துகிறது.

இந்த நேரத்தில் குமரவேலும் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். அதை விசாரிக்க வரும் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளையும் அறிந்து கொண்டு எனக்கு ஒரு பத்து கோடி ரூபாய் கொடுத்தால் இந்த வழக்கில் இருந்து உங்களை விடுவிக்கிறேன். இல்லாவிட்டால் நீங்கள்தான் குமரவேலை கொலை செய்தீர்கள் என்று கேசை திருப்புவேன்..” என்கிறார்.

இந்த விசாரணை வளையத்துக்குள் சிக்கிக் கொள்ளும் குமரன் கேஸ் வந்தால் எதிர்த்து நிற்கலாம் என்று முடிவெடுக்கிறார். அதையடுத்து அந்த வீட்டை விற்பனை செய்ய பெரும் முயற்சிகள் எடுக்கிறார். ஆனால் ஒவ்வொரு முயற்சியும் தோல்வி அடைகிறது.

கடைசியில் குமரன் அந்த வீட்டை விற்றாரா..? காவல்துறையிடம் இருந்து தப்பித்தாரா?.. குமரவேலை யார் கொலை செய்தது?.. அவருடைய மரணம் எப்படி நிகழ்ந்தது?.. என்ற சில கேள்விகளுக்கு கொஞ்சம் சஸ்பென்ஸ் காமெடி கலந்த திரைக்கதையாக இந்தப் படத்தை கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஹீரோவாக நடித்திருக்கும் குமரன்தான் இந்தப் படத்திலும் ஹீரோவாக நடித்திருக்கிறார். இது அவருடைய முதல் படம் என்பதால் அவருடைய நடிப்பு பற்றி எடுத்த எடுப்பிலேயே நாம் விமர்சிக்க தேவையில்லை.

ஆனாலும் விமர்சனமே தேவையில்லை என்பதுபோல குமரனும் மிகச் சிறப்பாக தனக்கு வந்த நடிப்பை அழகாக படத்தில் காட்டி இருக்கிறார். கொஞ்சம் காமெடி, கொஞ்சம் எமோஷன்ஸ் கலந்த தன்னுடைய கேரக்டர் ஸ்கெட்ச்சுக்கு ஏற்ப ஒரு நடிப்பை சிச்சுவேஷன் காமெடிகளிலேயே சிரிக்க வைத்திருக்கிறார். அந்த வகையில் குமரனின் இந்த முதல் பட வாய்ப்பு அவருக்கு வெற்றியைத்தான் தந்திருக்கிறது.

சமூக செயற்பாட்டாளராக நடித்திருக்கும் குமரவேல், ஒரு போராளி எப்படி பேசுவானோ, நடந்து கொள்வானோ அது மாதிரியான மன ஓட்டத்துடன் எதற்கும் பயப்படாத தன்மையுடன் தன்னுடைய சமூக அக்கறை கொண்ட மனிதன் என்ற கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். இவரும் குமரனும் பேசிக் கொள்ளும் ஒரு காட்சியில் அழுத்தமான ஒரு நடிப்பை காண்பித்து இருக்கிறார் குமரவேல்.

தாத்தாவாக நடித்திருக்கும் ஜி.எம்.குமார் தன்னுடைய உடல் வலுவையும், கனமான முகத்தையும், கணீர் குரலையும் வைத்து அந்த தாத்தாவிற்கு பக்கபலம் சேர்த்திருக்கிறார்.

இதுவரையிலும் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த வினோத் சாகர் இந்தப் படத்தில் காமெடியனாக உருமாறி இருக்கிறார். அதிலும் இரண்டாம் பாதியில் தொடர்ச்சியான காமெடி அலைகளும், கை தட்டல்களும் தியேட்டரில் தூள் பறக்கின்றன. அத்தனைக்கும் சொந்தக்காரர் வினோத் சாகர்தான். அவருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள். இன்னொரு பக்கம் காமெடியன் பால சரவணன் ஹீரோவுடன் இணைந்து சில ஒன் லைன் காமெடிகளை அள்ளித் தெளித்து இருக்கிறார்.

ஹீரோயின் இல்லாத படமாக இருக்கக் கூடாது என்பதால் இதில் ஹீரோயினாக பாயல் ராதாகிருஷ்ணனை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். மிக மிக அழகான முகம். அவ்வளவு அழகிலும் அவ்வளவு அழகான நடிப்பையும் காண்பித்துவிட்டு தன்னுடைய கேரியரை துவக்கி இருக்கிறார். அவருக்கும் நமது பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

மேலும் லிவிங்ஸ்டன், கௌதம், சிவா அரவிந்த், வினோத் முன்னா என்ற மற்றைய நட்சத்திரங்களும் கொஞ்சம் காமெடி கலந்த தங்களுடைய நடிப்பை காண்பித்திருக்கிறார்கள்.

ஒரே வீட்டுக்குள் பல கட்சிகள் நடப்பதால் ஒவ்வொரு முறையும் கேமராவை மாற்றி மாற்றி வேறு பல கோணங்களில் வைத்து காட்சிகளை படமாக்கி நமக்கும் ஒரு ஆர்வத்தை உண்டு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி. யாரை அழகாக காட்ட வேண்டுமோ அதேபோல் நாயகியை மிக மிக அழகாக காட்டிவிட்டு தன்னுடைய பெயரை பதிவு செய்திருக்கிறார் ஜெகதீஷ் சந்திரமூர்த்தி.

வசன காமெடி இல்லாமல் சிச்சுவேஷன் காமெடி என்றால் அதற்கு பட தொகுப்பாளர்தான் நிச்சயமாக பொறுப்பேற்க வேண்டும். அப்படி ஒரு மிக அழகான சிச்சுவேஷன் காமெடிகளை தரும் அளவுக்கு படத் தொகுப்பை நேர்த்தியாக செய்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஜி.மதன்.

அச்சு ராஜாமணியின் இசையில் பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகம்தான். எந்த இடத்திலும் கதையை விட்டு வெளியே போகாமல் பாடல் காட்சிகளை கூர்ந்து கவனிக்க வைத்திருக்கிறது ராஜாமணி இசை. கூடவே காமெடிகள் நிகழும் இடத்தில் அதற்கேற்றார் போன்ற பின்னணி இசையையும் கொடுத்து வெற்றியில் அவரும் பங்கு எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சில இடங்களில் கேரக்டர் ஸ்கெட்ச்சுகளே சிரிப்பை வரவழைக்கும், அதுபோல இந்த படத்திலும் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் வினோத் முன்னா அவருக்கான கேரக்டர் ஸ்கெட்ச்படி மூல வியாதிக்காரராக சிறப்பாக நடித்திருக்கிறார்.

கொலையா, தற்கொலையா, அல்லது இயற்கை மரணமா என்பதே தெரியாத ஒரு சம்பவத்திலிருந்து ஆரம்பிக்கும் படம் இடையிடையே கொஞ்சம் கொஞ்சமாக வரதராஜன் என்ற குமரவேலின் வாழ்க்கை கதையையும் சொல்லிக் கொண்டே போக இடைவேளைக்கு பின்பு அதை காமெடியாகவும் மாற்றியமைத்து படத்தை கடைசி வரையிலும் ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பாலாஜி வேணுகோபால்.

காமெடி காட்சிகளில் லாஜிக் பார்க்க வேண்டாம் என்பது விமர்சகர்களின் கருத்து. அந்த வகையில் இந்தப் படத்திலும் காமெடி ஒன்லைன்களும் அவ்வப்பொழுது கதாபாத்திரங்கள் தங்களுக்கு தாங்களே பேசிக்கொள்ளும் மைண்ட் வாய்ஸ்களும் காமெடியை வரவழைத்து இருக்கின்றன.

வினோத் சாகரின் உடல் மொழியே பல காட்சிகளில் நமக்கு காமெடியை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. இவரிடம் இருந்து இப்படி ஒரு காமெடி வரவழைக்க முடியும் என்று நினைத்து இயக்கி இருக்கும் இயக்குநருக்கு இதற்காக இன்னொரு பாராட்டு.

காமெடி படம் என்பதால் லாஜிக் பார்க்க வேண்டாம் என்று நாம் யோசிக்கும் தருணத்திலும் வினோத் முன்னாவின் இன்ஸ்பெக்டர் மேடம் நிஜமாகவே நமக்கு காமெடியை கொடுத்துவிட்டது. அவருடைய விசாரணை முறையே காமெடியாகத்தான் இருக்கிறது. இப்படி நாகரீகமாக எந்த போலீஸ் ஸ்டேஷனில் விசாரிக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை. ஆனால், இப்படி விசாரித்தால் அதுதான் மனிதநேயமான விசாரணை என்ற இயக்குநர் சொல்வதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

ஏதோ ஒரு பொறி இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே இருக்கும்பொழுது குமரவேலின் மரணத்தை அதற்கான உண்மை காரணத்தை ஒன்றுமே இல்லாமல் முடித்து வைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை.

முதல் பாதியில் இருந்த பல கதாபாத்திரங்களை அப்படியே இரண்டாம் பாதியில் அழகாக கொண்டு வந்து கோர்த்துவிட்டிருக்கும் திரைக்கதைக்காக இயக்குநருக்கு மேலும் ஒரு பாராட்டு.

மற்றபடி, சிரிப்புக்கு பஞ்சம் இல்லாத இந்தப் படத்தை அவசியம் தியேட்டர்களில் சென்று பார்த்து ரசித்து மகிழுங்கள்.

RATING : 3.5 / 5

Our Score