full screen background image

‘நட்டி’ நட்ராஜ் நடிக்கும் ‘கூராய்வு’ படம் இன்று துவங்கியது

‘நட்டி’ நட்ராஜ் நடிக்கும் ‘கூராய்வு’ படம் இன்று துவங்கியது

ரெட் கிரீன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் முருகானந்தம் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கூராய்வு’.

பரபரப்பான கிரைம் திரில்லர் திரைப்படமான இந்தக் ‘கூராய்வு’ படத்தில் ‘நட்டி’ நட்ராஜ் நாயகனாக நடிக்கிறார்.

‘முந்திரிக்காடு’ படத்தில் நாயகியாக நடித்த சுபபிரியா மலர் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் மனோபாலா, இளவரசு, போஸ் வெங்கட், ரவிமரியா உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவாளராக கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக நாக உதயன், படத் தொகுப்பாளராக முத்து முனியசாமி ஆகியோர் பணியாற்ற உள்ளனர். இயக்குநர் ஆண்டனி சாமி இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘சாயம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தக் ‘கூராய்வு’ படம் இன்று காலை சென்னை லீ மெரிடியன் ஹோட்டலில் பூஜையுடன் தொடங்கியது.

இந்த பூஜை நிகழ்வில் இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், பேரரசு, எழில்,  மனோபாலா, மனோஜ் குமார், சரவண சுப்பையா, போஸ் வெங்கட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூராய்வு’ படம் பற்றி இயக்குநர் ஆண்டனி சாமி பேசும்போது, “2018-ம் ஆண்டு நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

போஸ்ட்மார்ட்டம் எனப்படும் உடல் கூராய்வை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் பார்வையாளர்களை அவர்களின் இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் என்று நான் நம்புகிறேன். படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் படத்தில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. இது நிச்சயமாக ரசிகர்களை ஆச்சரியப்பட வைக்கும்” என்றார்.

“வரும் ஜூலை 13-ம் தேதி தொடங்கி ஒரே ஷெட்யூலில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நடத்தி முடிக்கப்படும்” என்றும் இயக்குநர் ஆண்டனி சாமி தெரிவித்தார்.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் காரைக்குடி, புதுக்கோட்டை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் படமாக்கப்பட உள்ளன.

Our Score