ஸ்ரீகணபதி பிலிம்ஸ் சார்பில் MY INDIA மாணிக்கம் தயாரிப்பில், பிரபல இயக்குநர் K.ரங்கராஜ் இயக்கத்தில், ஸ்ரீகாந்த், புஜிதா பொன்னாடா நடிப்பில் ஒரு அழகான காதல் படமாக உருவாகியுள்ளது இந்த “கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல்” திரைப்படம்.
இந்தப் படத்தின் கதாநாயகனாக ஸ்ரீகாந்த் நடிக்க, கதாநாயகியாக புஜிதா பொன்னாடா நடித்துள்ளார். இரண்டாவது நாயகனாக பரதன் நடித்துள்ளார். இரண்டாவது நாயகியாக நிமி இமானுவேல் நடித்துள்ளார்.
மற்றும் பார்கவ், நம்பிராஜன், கே.ஆர்.விஜயா, டெல்லி கணேஷ், சச்சு, நளினி, பருத்திவீரன் சுஜாதா, சிங்கம் புலி, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், அனுமோகன், வினோதினி, கவியரசன், மாஸ்டர் விஷ்னவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் மை இண்டியா மாணிக்கம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வசனம் – P.N.C.கிருஷ்ணா, ஒளிப்பதிவு – தாமோதரன்.T., இசை – R.K.சுந்தர், எடிட்டிங் – கே.கே., பாடல்கள் – காதல்மதி, கலை – விஜய் ஆனந்த், நடனம் – சந்துரு, ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ், ஸ்டில்ஸ் – தேனி சீனு, மக்கள் தொடர்பு – மணவை புவன், தயாரிப்பு – MY INDIA மாணிக்கம், கதை, திரைக்கதை, இயக்கம் – K.ரங்கராஜ்.
‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘உதய கீதம்’, ‘உயிரே உனக்காக’, ‘நினைவே ஒரு சங்கீதம்’ போன்ற சில்வர் ஜூப்லி திரைப்படங்களை இயக்கிய வெற்றி இயக்குநரான K.ரங்கராஜ், இந்தப் படத்தை கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார்.
வாழ்க்கையில் பணம் மட்டும் பிரதானமல்ல என்பதை உணர்த்தும் வகையில் வித்தியாசமாக இருவேறு கோணங்களில் இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
1985-களில் வெளிவந்த திரைப்படங்களின் கதை, திரைக்கதை, வசனத்தைக் கொண்டு உருவாகி இருக்கும் இத்திரைப்படம் இந்தக் காலத்தில் பார்ப்பதற்கும் பரவாயில்லையே கடைசி வரைக்கும் பார்க்க வைத்திருக்கிறார் என்று சொல்ல வைத்திருக்கிறது.
ஹீரோ ஸ்ரீகாந்த் ஒரு மிகப்பெரிய தொழிலதிபரிடம் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். ஒரு நாள் தற்செயலாக விமான நிலையத்தில் தான் அழைத்துச் செல்ல வந்த ஒரு பெண்ணுக்கு பதிலாக ஹீரோயின் பூஜிதா பொன்னாடை காரில் அழைத்து வந்து விடுகிறார்.
இதனால் ஏற்பட்ட குழப்பத்தினால் ஹீரோயின் மீது இவர் கோவப்பட்டு பேசிவிட ஹீரோயினும் பதிலுக்கு ஹீரோவை தட்டி விடுகிறார். இந்த சம்பவத்திற்கு பிறகு இவர்கள் இருவருக்கும் இடையில் ஒரு நட்புணர்வு ஏற்படுகிறது.
ஹீரோயினான பூஜிதா பொன்னாடா மிகப் பெரிய பணக்கார பெண்மணியான சச்சுவின் வீட்டில் அவருக்கு மேனேஜராக இருக்கிறார். பூஜிதாவுக்கு ஒரு மிகப் பெரிய தொழிலதிபரை கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஒரு ஆசை. இதேபோல் ஹீரோ ஸ்ரீகாந்துக்கும் ஒரு மிகப் பெரிய பணக்கார பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஒரு ஆசை.
இவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் மிகப் பெரிய பணக்காரர்கள்.. கோடீஸ்வரர்கள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அந்த நினைப்பின்படியே ஹீரோ ஸ்ரீகாந்தும், ஹீரோயின் பூஜிதாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள்.
தங்களது குடும்பத்தினரிடமும் காதலைச் சொல்லி ஒருவர் வீட்டுக்கு ஒருவர் அழைத்து வந்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். அந்த நேரத்தில் ஸ்ரீகாந்தின் முதலாளியினால் இந்த்த் திருமண குழப்பத்திற்கு தீர்வு கிடைக்க… இருவருமே ஒருவரை ஒருவர் ஏமாற்றி இருப்பது தெரிய வருகிறது.
இப்பொழுது பரம எதிரிகளான ஹீரோவும், ஹீரோயினும் ஒருவருக்கொருவர் சவால் விட்டுக் கொள்கிறார்கள். “உன்னைவிட மிகப் பெரிய பணக்காரன் / பணக்காரியை நாம் திருமணம் செய்து கொள்வோம்” என்று இருவரும் சவால் விட்டு பிரிகிறார்கள்.
இந்த சவாலில் இவர்கள் ஜெயித்தர்களா..? இல்லையா?.. என்பதுதான் இடைவேளைக்கு பின்னான இந்தப் படத்தின் திரைக்கதை.
1985-களில் ஹிட் திரைப்படங்களை கொடுத்துக் கொண்டிருந்த இயக்குநர் கே.ரங்கராஜ் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்கி இருக்கும் திரைப்படம் இது என்பதாலேயே 1985-ம் வருட காலத்திய படங்களின் கதை, திரைக்கதை, ஆக்கம் இந்த திரைப்படத்தில் இருப்பது கண்கூடாக தெரிகிறது.
ஹீரோ ஸ்ரீகாந்துக்கு இந்தப் படம் ஒரு ஜாலியாக திரைப்படமாகத்தான் அமைந்திருக்கிறது. எந்தக் கவலையும் இல்லாமல், எந்தக் கஷ்டமும் படாமல்… ஜாலியாக கேமரா முன்பாக நின்று நிதானமாக வசனம் பேசி, பாடி, சண்டையிட்டு நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்.
ஹீரோயின் புஜிதா பொன்னாடா தமிழுக்கு ஒரு அழகான வரவு. அழகான முகம். எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவரை ரசிக்கலாம். நடிப்பும் சிறப்பாகவே வந்திருக்கிறது. இன்னும் சிறந்த திரைப்படங்கள் இவருக்கு கிடைத்தால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கோபப்பட்டு, ஆத்திரப்பட்டு வேறு ஒகுவரை மணக்க சம்மதித்துவிட்டு, கடைசியாக பணக்காரனாகவே இருந்தாலும் மற்றவர்களை மதிக்காத தன்மையுடன் அவர் இருப்பதையுணர்ந்து, தன் மனதுக்கு பிடிக்காதவனாக ஹீரோ மட்டுமே இருப்பதை உணர்ந்து மெல்ல மெல்ல ஸ்ரீகாந்தை நெருங்கும் காட்சிகளில் மிகச் சிறப்பாக தனது நடிப்பை காண்பித்திருக்கிறார் பூஜிதா பொன்னாடா.
இவருடைய பெற்றோர்களாக நடித்திருக்கும் அனுமோகன், நளினி, பருத்தி வீரன் சுஜாதா, ரமேஷ் கண்ணா, சாம்ஸ், வினோதினி மற்றும் இவர்களுடைய கூட்டு ரகளைகள், இவர்களுடைய காமெடிகள், பேசும் வசனங்கள் எல்லாமே படத்தை கொஞ்சம் கலகலப்பாக வைத்திருக்கிறது.
இந்தப் படத்தில் கே.ஆர்.விஜயாவுமாவும், டெல்லி கணேஷ் ஸாரும் தம்பதிகளாக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களின் கதாப்பாத்திரமும் கொஞ்சம் மனதை தொடுவது போல அமைந்திருப்பது பாராட்டுக்குரியது.
படத்தின் பாடல்களும், இசையும் மிகவும் ரம்மியம். 1985 காலக்கட்டத்திய பாடல்களைக் கேட்பதுபோலவே இந்த பாடல்களும் அமைந்துள்ளது. அதைபோல் பாடல் காட்சிகளை படமாக்கிய விதமும் இந்தக் காலத்து யூத்தான இயக்குநர்களுக்கு சவால் விடும் வகையில் அமைத்திருக்கிறார் இயக்குநருக்கு ரங்கராஜ். இதற்காகவே இவருக்கு இன்னொரு பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது படுத்தின் இறுதிக் காட்சியில் வரும் அந்த சின்ன விமான பயணம்தான். யாருக்கும் தோன்றாத ஒரு விஷயம் இந்த இயக்குநருக்கு தோன்றி இருக்கிறது. மிக அழகாக அந்த காட்சியை கதையோடு பொருந்தி போவதைப்போல மிக அழகாக படமாக்கியுள்ளார்கள். படத் தொகுப்பாளர் மிக அழகாக அந்தக் கட்சியை கத்தரித்து கொடுத்திருக்கிறார். அந்த வகையில் அந்த கிளைமாக்ஸ் கட்சி நிச்சயம் பாராட்டுக்குரியது.
இதுபோன்று படம் பார்க்கும் ரசிகர்களுக்கு எந்த ஒரு பாதிப்பையும் தராத வகையில் ஒரு அழகான குடும்பக் கதையை அழகாக கொடுத்து அந்தக் கதையில்கூட நாட்டு மக்களுக்கு தேவையான ஒரு சப்ஜெக்டை அறிவுரையாக சொல்லி முடித்திருப்பது சிறப்பானது. பாராட்டுக்குரியது.
அந்த வகையில் இந்தப் படத்தின் இயக்குநரான கே.ரங்கராஜனை மனதாரப் பாராட்டுகிறோம். இப்படியொரு படத்தை இந்தக் காலத்தில் கொண்டு வந்து கொடுத்ததற்காக அவருக்கு நம்முடைய நன்றிகள்.
இந்தப் படத்தை நிச்சயமாக தியேட்டரில் குடும்பத்துடன் சென்று பார்த்து ரசிக்கலாம்.
RATING : 3.5 / 5









