full screen background image

‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லரக்கல் நடித்து வரும் ‘கொண்டல்’ திரைப்படம்

‘டான்ஸிங் ரோஸ்’ ஷபீர் கல்லரக்கல் நடித்து வரும் ‘கொண்டல்’ திரைப்படம்

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸா’க பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். அதன் பிறகு துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோத்தா’ மற்றும் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நாகர்ஜூனாவின் ‘நா சாமி ரங்கா’ ஆகிய ஹிட் படங்களிலும் ஷபீர் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தென்னிந்தியாவின் மிக முக்கிய நட்சத்திர நடிகர்களான பெப்பே, ராஜ் பி.ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘கொண்டல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் ஷபீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 80% நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷபீர், “இந்தப் படம் சவாலாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. தினமும் காலையில், நாங்கள் நடுக்கடலுக்குப் புறப்படுவோம். அது கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் எடுக்கும். படகில் படப்பிடிப்பு முடித்துவிட்டு மதிய உணவுக்காக கரைக்கு திரும்புவோம்.

உணவு சாப்பிட்டுவிட்டு, அதே இடத்திற்குச் சென்று மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குவோம். இதில் பலருக்கும் கடல் ஒவ்வாமை ஏற்பட்டது. ஆனாலும், அதை எல்லாம் பெரிதுபடுத்தாமல் படப்பிடிப்பை சரியாக முடித்தோம்.

தயாரிப்பாளர்கள் எங்கள் அனைவரையும் தங்கள் குடும்பமாக கருதியதால், ஒட்டு மொத்த படக் குழுவினருக்கும் தேவையான வசதிகளை சிறப்பாக செய்து கொடுத்தனர். என் சினிமா பயணத்தில் இந்தப் படம் நிச்சயம் சிறப்பான ஒன்றாக இருக்கும். என்னுடைய கம்ஃபோர்ட் ஸோனில் இருந்து என்னை வெளியே கொண்டு வந்து சிறப்பான நடிப்பை இயக்குநர் வாங்கியுள்ளார்” என்றார்.

இந்தப் படத்தைத் தவிர, ஷபீருக்கு தமிழில் ஏ.ஆர்.முருகதாஸின் படம் மற்றும் இயக்குநர் பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தண்ட காரண்யம்’ ஆகிய படங்கள் கைவசம் உள்ளது.  இதைத் தொடர்ந்து பெயரிடப்படாத ஒரு தெலுங்கு திரைப்படம்  மற்றும் சிவராஜ்குமாரின் கன்னடப் படமான ‘பைரதி ரணகை’ ஆகிய இரண்டு படங்கள் உள்ளன.

Our Score