ரெதான் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் இந்தர்குமார் ‘குற்றம்-23’, ‘தடம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து, தயாரித்திருக்கும் மூன்றாவது திரைப்படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’.
தன் குருநாதர் சசிகுமாரை நாயகனாக வைத்து, S.R.பிரபாகரன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து, ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கிறது.
படத்தின் நாயகன், நாயகியாக சசிகுமார், மடோனா செபாஸ்டியன் நடிக்க, முக்கிய கதாபாத்திரங்களில் சூரி, இயக்குநர் மகேந்திரன், ஹரீஷ் ஃபெராடி, ‘சுந்தரபாண்டியன்’ துளசி, தீபா ராமனுஜம், சென்றாயன், மற்றும் தயாரிப்பாளர் இந்தர்குமார் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, திபு நைனன் தாமஸ் இசையில், டான் பாஸ்கோ படத் தொகுப்பில், சண்டை காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க, மைக்கேல் ராஜின் கலை இயக்கத்தில், யுகபாரதி, மோகன்ராஜ் மற்றும் அருண்ராஜா காமராஜ் ஆகியோர் பாடல்களை எழுத, மக்கள் தொடர்பு பணிகளை நிகில் முருகன் கவனித்துக் கொள்ள, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் SR.பிரபாகரன். தயாரிப்பு – ‘ரெதான்’ இந்தர்குமார்.
1990 – 1994-ம் ஆண்டு காலகட்டங்களில் தமிழகத்தின் ஒரு சிறு நகரத்தில் நடந்த, பரபரப்பான ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.
சென்ற ஆண்டு நவம்பர் 12-ம் தேதி காரைக்குடியில் துவங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக இடைவிடாமல் பொள்ளாச்சி, பழனி, தென்காசி, கோவில்பட்டி, விருதுநகர், குற்றாலம் பகுதிகளில் நடந்து, பொள்ளாச்சியில் இனிதே நிறைவு பெற்றது.
இத்திரைப்படம் 2019 செப்டம்பரில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் தரப்பு தெரிவித்துள்ளது.











