full screen background image

பிரிவியூ தியேட்டரில் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் நடந்த வில்லங்கம்.. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கம்..!

பிரிவியூ தியேட்டரில் டாக்டர் கிருஷ்ணசாமியுடன் நடந்த வில்லங்கம்.. தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கம்..!

‘கொம்பன்’ திரைப்படத்திற்கெதிராக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் 2 ஓய்வு பெற்ற நீதிபதிகள், டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது 3 வழக்கறிஞர்கள், தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர்கள் 3 பேர் இவர்களெல்லாம் நாளை காலை 8 மணிக்கு படம் பார்க்க வேண்டும்.

நீதிபதிகள் படம் பார்த்துவிட்டு உடனேயே படத்தில் ஏதாவது ஆட்சேபணைக்குரிய விஷயங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு பேக்ஸ் மூலமாகச் செய்தியனுப்ப வேண்டும் என்று இடைக்கால உத்தரவை பிறப்பித்திருந்தார்.

அதன்படி இன்று காலை படம் திரையிட்டபோது மனுதாரரான டாக்டர் கிருஷ்ணசாமியால் தடங்கல் ஏற்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் படத்தைப் பார்க்காமலேயே திரும்பிச் சென்றுவிட்டார்கள்.

இன்று காலையில் பிரிவியூ தியேட்டரில் நடந்தது என்ன என்பது பற்றி இன்று மாலை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா விளக்கமாக கூறினார்.

படத்தைப் பார்க்க 2 நீதிபதிகள் காலை 7.30 மணிக்கே வந்துவிட்டனர். தயாரிப்பாளர் தரப்பிலும் வழக்கறிஞர்கள் மூன்று பேரும் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஆனால் புகார்தாரரான டாக்டர் கிருஷ்ணசாமி மிக மெதுவாக ஒரு மணி நேரம் கழித்தே தன்னுடைய படை, பரிவாரங்களுடன் வந்து சேர்ந்திருக்கிறார்.

வந்தவர் உடனேயே படம் பார்க்க அமரவில்லை. மாறாக தனக்கு படத்தின் ஸ்கிரிப்ட் புத்தகம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதனைக் கொடுக்கச் சொல்லி நீதிபதி உத்தரவிடவில்லை என்பதை தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர்கள் அவரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

இருந்தாலும் கிருஷ்ணசாமியுடன் அவருடன் வந்தவர்களும் ஸகிரிப்ட் புக்கை கேட்டு அடம் பிடித்திருக்கிறார்கள். அது இப்போது கொண்டு வர முடியாது என்கிற யதார்த்தத்தை பலவாறாக எடுத்துச் சொன்ன பிறகு அரை மனதுடன் படம் பார்க்க கிட்டத்தட்ட 10.30 மணிக்குத்தான் தியேட்டருக்குள் நுழைந்திருக்கிறார் கிருஷ்ணசாமி.

படம் துவங்கி 5 நிமிடங்கள் கழித்து கிருஷ்ணசாமியுடன் வந்த வழக்கறிஞர்களில் ஒருவர் அதுவரையில் ஓடிய காட்சியை மீண்டும் திரையிடும்படி கேட்டிருக்கிறார். அவ்வாறு படத்தைத் திரும்பத் திரையிடுவது இப்போதைய டிஜிட்டல் சிஸ்டத்தில் முடியாது என்று தியேட்டர்காரர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கிருஷ்ணசாமி அண்ட் கோ கேட்கவில்லையாம்..

இந்தக் களேபரத்தை பார்த்து எரிச்சலைடந்து போன நீதிபதிகள் படம் பார்க்காமலேயே எழுந்து போய்விட்டார்கள். கிருஷ்ணசாமியும் மற்றவர்களும் தொடர்ந்து வெளியேறிவிட்டார்களாம்.

கடைசியாக நேற்றைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவை மனுதாரரான கிருஷ்ணசாமியே பின்பற்ற முடியாத அளவுக்கு தடங்கலைச் செய்திருக்கிறார்.

இதற்கான காரணம் மிகவும் தெளிவாகத் தெரிகிறது. புரிகிறது.. படத்தில் ஆட்சேபணைக்குரிய செய்தி இல்லையென்றால் கடைசியாக தன்னால் எதையுமே சொல்ல முடியாதே என்கிற பதைபதைப்பில்தான் டாக்டர் கிருஷ்ணசாமி இந்தக் களேபரத்தை செய்து நாடகமாடிவிட்டு சென்றிருக்கிறார்கள் என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

இப்போது வழக்கின் இறுதி விசாரணை நாளை காலை நடைபெற்று நாளை மதியத்திற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாளை காலை ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ள ‘கொம்பன்’ படத்தின் காலை காட்சி மட்டும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. மதியத்திற்குள் தீர்ப்பு வந்துவிட்டால் படம் ரிலீஸாகும். இல்லையேல் மாலை காட்சியிலாவது ரிலீஸாகும் என்று தயாரிப்பாளர் தரப்பு உறுதியாக நம்புகிறது.

Our Score