full screen background image

கோடியில் ஒருவன் – சினிமா விமர்சனம்

கோடியில் ஒருவன் – சினிமா விமர்சனம்

செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் T.D.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். 

இந்தப் படத்தில் விஜய் ஆன்டனி கதாநாயகனாக நடித்திருக்கிறார். இத்திரைப்படம் விஜய் ஆண்டனியின் 14-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்மீகா நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் திவ்ய பிரபா, ‘பூ’ ராம், ராமச்சந்திர ராஜூ, சச்சின் கெடேகர், சூப்பர் சுப்பராயன், பிரபாகர், ஆதித்ய கதிர், சூரஜ் பாப் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – N.S.உதயகுமார், இசை – நிவாஸ் கே.பிரசன்னா, படத் தொகுப்பு – விஜய் ஆண்டனி, கலை இயக்கம் – சி.உதயகுமார், பின்னணி இசை – ஹரீஷ் அர்ஜூன், சண்டை இயக்கம் – மகேஷ் மாத்யூ, பாடல்கள் – மோகன்ராஜன், அருண் பாரதி, சுப்பு, நடனம் – ஹரிஹரன், உடைகள் வடிவமைப்பு – செளபர்ணிகா, உடைகள் – ஆர்.குமார், ஒப்பனை – ஆர்.மாரியப்பன், தயாரிப்பு நிர்வாகம் – பி.பாண்டியன், ஒலிப்பதிவு – சரத் சந்திரசேகர், ஒலிக்கலவை – ரஹமதுல்லா, ஒலி வடிவமைப்பு – விஜய் ரத்தினம், தயாரிப்பு மேலாளர் – மாரியப்பன் கணபதி, புகைப்படங்கள் – ஆர்.எஸ்.ராஜா, தயாரிப்பு – T.D.ராஜா, இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே.அஹமது. மெட்ரோ’ படத்தை இயக்கியவரான இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க  Dr.தனஞ்செயன் இப்படத்தை வெளியிட்டுள்ளார்.

தேனி மாவட்டத்தில் கோம்பை அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் வசிக்கும் விஜய் ஆண்டனிக்கு, தன் அம்மாவின் கட்டளையை ஏற்று  ஐ.ஏ.எஸ். படித்து மாவட்ட ஆட்சியர் ஆகி மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் இலட்சியம்.

அதற்காகச் சென்னை வருகிறார். வருகிற இடத்தில் அவருக்கு உள்ளூர் ரவுடி முதல் ஆளும்கட்சி அரசியல்வாதிகள்வரை பலருடனும் அவருக்கு மோதல்கள் உருவாகிறது. இந்த மோதலினால் ஐ.ஏ.எஸ். தேர்வின் நேர்முகத் தேர்வுக்கு இவரால் டெல்லிக்குச் செல்ல முடியாமல் போகிறது.

இதனால் அந்த அரசியல் ரவுடிகளை இவர் எதிர்க்க.. கடைசியில் இவரே அரசியலில் சிக்கிக் கொள்கிறார். அந்த வார்டின் கவுன்சிலர் தேர்தலில் நின்று ஜெயிக்கிறார்.

மாநகராட்சியில் கவுன்சிலர்கள் அடிக்கும் கூட்டுக் கொள்ளைகள்.. அக்கிரமங்கள்.. அநியாயங்கள்.. அராஜகங்கள்.. சட்ட மீறல்கள்.. இதையெல்லாம் தனியொரு மனிதனாக எதிர்த்து நின்று கேள்வி கேட்கிறார்.

இது அவருக்கு பல முனைகளில் இருந்தும் சிக்கல்களை உருவாக்க.. அவரது உயிருக்கே ஆபத்தாகிறது. இறுதியில் அவர் என்னவாகிறார் என்பதுதான் இந்தக் கோடியில் ஒருவன்’ படத்தின் கதை.

மக்கள் சேவை செய்யும் நாயகன் என்று கதை அமைந்துவிட்டதால், பாடல் காட்சிகளிலிருந்து எல்லாவற்றிலும் யாருக்காவது உதவி செய்து கொண்டேயிருக்கிறார் விஜய் ஆண்டனி.

சென்னையின் அரசாங்கக் குடியிருப்புகளில் ஒன்றில் தங்கும் அவர் அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளும் அதில் கிடைக்கும் வெற்றியும் மக்களுக்கு ஒரு பாடமாக அமைகிறது.

பள்ளிக்கே போகாமல் ஊர் சுற்றி வரும் சிறுவர்களுக்கு டியூஷன் எடுத்து அவர்களைப் படிக்க வைத்து தேர்வில் பெற வைக்கிறார். எதைவிட்டாலும் கல்வியை மட்டும் விடவே கூடாது என்னும் அந்தக் கொள்கையை உணர்த்தியமைக்கு நன்றி.

ஆனால் கடைசிவரையிலும் ஒரே மாதிரியான முக பாவனைகளுடன் விஜய் ஆண்டனி வலம் வருவது மட்டும்தான் பார்வையாளர்களை பெரிதும் சோதிக்கிறது. இதனாலேயே இவரது நடிப்பு பற்றி எதையும் சொல்ல முடியவில்லை.

நாயகியாக ஆத்மிகா. நல்ல அழகு. மிக அழகாக தமிழ் பேசுகிறார். நாயகனுக்கு கடைசிவரையிலும் உதவியாக இருக்கிறார். ஆனால் இவருக்கு காதல் வரும் தருணம் மட்டும் காமெடியாக இருக்கிறது. கதையுடன் ஒட்டவில்லை என்பது உண்மை. ஆனால் பாடல் காட்சிகளில் பரவசம் காட்டிவிட்டு கடைசிவரையிலும் விஜய் ஆண்டனியோடு வலம் வருகிறார்.

விஜய் ஆண்டனியின் அம்மாவாக நடித்திருக்கும் திவ்ய பிரபா நிச்சயமாகக் கவனிக்க வைக்கிறார். உணர்ச்சியமான காட்சிகளில் குளோஸப்பில் முகமே நடிப்பைக் காட்டுகிறது.

கருடா ராம், சூப்பர் சுப்பராயன் உட்பட படத்தில் நிறைய பேர் வில்லன்கள். இதில் கிராமத்து வில்லனான பூ ராம் தனது தனி ஸ்டைல் நடிப்பால் கவர்ந்திழுக்கிறார். மாவட்டச் செயலாளர் கேரக்டரில் நடித்திருக்கும் வில்லனுக்கு அந்தக் கேரக்டர் ஸ்கெட்ச் ஒட்டவில்லை என்பது மட்டும் உண்மை.

நிவாஸ் கே.பிரசன்னாவின் இசையில் பாடல்கள் கதைக்கேற்ப அமைந்துள்ளன. ஆனால் திரும்பத் திரும்பக் கேட்கும் லெவலில் இல்லை. பின்னணி இசை எந்தப் பார்வையையும் திருப்பவில்லை.

ஒளிப்பதிவாளர் என்.எஸ்.உதயகுமாரின் கேமிராவில் அடிக்கடி காட்டப்படும் அந்தக் குடியிருப்பு மட்டுமே அழகாக இருக்கிறது. முதலில்,  அசுத்தமான இடங்களை காட்டிவிட்டு, பின்பு சுத்தமாக காட்டும்போது நமக்கே பரவசமாக இருக்கிறது. எல்லா இடங்களும் இப்படியிருந்தால் எப்படியிருக்கும்..?

படத் தொகுப்பாளர் இன்னும் கொஞ்சம் கத்திரி போட்டு இறுக்கியிருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

இத்திரைப்படம் கதையை நாயகனாக வைக்காமல் விஜய் ஆண்டனியின் நாயக பிம்பத்தை உயர்த்த முயலும் படமாக அமைந்துவிட்டது.

மக்கள் சேவைத் திட்டங்கள் பற்றிய வரவு செலவுக் கணக்குகளை அந்தந்தப் பகுதி மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று இயக்குநர் சொல்லியிருக்கும் கருத்து வரவேற்க வேண்டிய கருத்து.

லஞ்சமும், ஊழலும் மாநகராட்சியில் எப்படி நடக்கிறது என்பதை படத்தில் புட்டுப் புட்டு வைத்திருக்கிறார்கள். அதிகார பலத்தை கண்டு பயந்துபோய் அடங்கிப் போகக் கூடாது. எதிர்த்து நிற்க வேண்டும் என்பதை அறிவுறுத்துகிறது. மாநகராட்சி மக்கள் மன்றத்தில் விஜய் ஆண்டனி பேசும் அந்த 5 நிமிட பேச்சு அபாரம்.

மைனஸ் விஷயங்களாகப் பார்த்தால் அந்த ரவுடியே கோச்சிங் சென்டரில் படிப்பது என்பது நம்ப முடியாததாக இருக்கிறது. அவர்தான் கஞ்சா பிஸினஸில் கொடி கட்டிப் பறக்கிறாரே.. பின்பு எதற்கு இந்தப் படிப்பு..?

திரும்பத் திரும்ப கார்ப்பரேஷன், கான்ட்ராக்ட் சம்பந்தமான காட்சிகள் தொடர்ந்து வருவது அலுப்பைத் தட்டுகிறது. கவர்னர் வீடு தேடி வந்து விசாரிப்பது. தைரியம் கொடுப்பதெல்லாம் நிகழ் காலத்தை மனதில் வைத்து எழுதப்பட்டதாக தோன்றுகிறது.

இதேபோல். விஜய் ஆண்டனி தனக்கு நேர்ந்த ஆபத்துக் காலத்தில் கவர்னரிடம் உதவி கேட்பதை போல கதையை மாற்றியிருக்கலாம். ஆனால் ஹீரோயிஸ படமாக முடிவு செய்துவிட்டதால் கதை நாயகனே தன் பிரச்சினையை முடித்துக் கொள்வான் என்பதுபோல  அமைந்திருக்கிறது.

இத்தனை ஆவேசமாக மக்கள் பணியாற்றுபவர் அம்மாவின் நலனுக்காக ஒரு நிமிடத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் என்பதை எப்படி ஏற்பது..?

திரைக்கதை ஆசிரியருக்கேற்றாற்போல தேர்தல்களையும், தேர்தல் முடிவையும் அமைத்திருக்கிறார்கள். எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சர் பதவியை விஜய் ஆண்டனி கேட்பதும், ஆளும் கட்சி அதை ஒத்துக் கொள்வதும் காமெடியான விஷயம். 2-ம் பாகத்துக்கு இந்தக் கிளைமாக்ஸ்தான் லீட் என்றால் அதுவும் ஓகேதான்…!

Rating : 3.5/5

 
Our Score