இன்றைய சினிமா சூழலில் அனைத்து பெரிய திரையரங்குகளையும் பெரிய படங்களே ஆக்கிரமித்துக் கொள்வதால் சின்ன படங்கள் மட்டுமல்ல… சில நேரம் சிறப்பான, தரமான படங்கள்கூட வெளியிட முடியாமல் சிக்கலுக்குள்ளாகி தவிக்கின்றன. தரமான பல படங்கள் குறைந்த அளவிலேயே திரையரங்குகள் கிடைத்து, இதன் காரணமாய் மக்களிடையே அடையாளம் பெற முடியாமல் போய் விடுகின்றன.
‘கோடை மழை’யும் அப்படியான ஒரு படம்தான். கிராமத்துக் கதையான அந்தப் படம், இந்த வருடம் மார்ச் 11-ம் தேதி வெளியானது. அப்போது ஊடகங்களில் பெரிதும் வரவேற்கப்பட்டது இந்தப் படம்.
யாழ் தமிழ்த்திரை சார்பில் தயாரிப்பாளர்களான கு.சுரேஷ்குமார். த.அலெக்ஸாண்டர் இருவரும் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தனர். கண்ணன், ஸ்ரீபிரியங்கா என்ற ஸ்ரீஜா இருவரும் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருந்தனர். இமான் அண்ணாச்சியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இசை – சாம்பசிவம். பின்னணி இசை – பவன். அறிமுக இயக்குநரான கதிரவன், இந்தப் படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்கியிருந்தார். இவர் பிரபுதேவா உள்ளிட்ட பலரிடம் உதவியாளராக இருந்து சினிமா கற்றவர்.
அப்போதைய சூழலில் திரையரங்குகள் அதிகமாகக் கிடைக்காத பிரச்சினையால் இந்தப் படமும் பாதிக்கப்பட்டது. மூன்று நாட்களிலேயே பெருவாரியான தியேட்டர்களில் படம் தூக்கப்பட்டதால், படம் வந்ததே யாருக்கும் தெரியவில்லை. இருந்தாலும், இப்போது அப்படத்துக்கு மறு ஜென்மம் கிடைத்திருக்கிறது.
எங்கிருந்தோ வரும் ஒருவரால்தான் எல்லாவற்றிற்கும் விடிவு பிறக்கும் என்பார்கள். அப்படி வந்தவர்தான் தயாரிப்பாளர் ஸ்டுடியோ-9 சுரேஷ், அவர் இப்படத்துக்கு நேர்ந்த கதியை அறிந்து, “படத்தைப் பார்க்கலாமே…?” என்று விருப்பம் தெரிவித்திருக்கிறார்.
படத்தைப் பார்த்தவர் ஆச்சரியப்பட்டு, “படம் இந்தளவுக்கு இருக்கும் என்று நான் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. இதை எல்லாரிடமும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். நல்லபடியாக இந்தப் படத்தைக் கொண்டு சேர்த்தால் ஓடும். நானே இதனை வெளியிடுகிறேன்..” என்று சொல்லி படக் குழுவினருக்கு உற்சாகம் அளித்துள்ளார்.
அவர் அளித்த வாக்குறுதிப்படியே ‘கோடை மழை’ படம் வருகிற வெள்ளிக்கிழமை மீண்டும் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் கதிரவன் பேசும்போது, “பேரன்பு என்பது பெருங்கோபத்தைவிட ஆபத்தானது’ என்பதைச் சொல்கிற கதை இது. படத்தில் வில்லன் என்று யாருமே கிடையாது. சூழல்தான் எல்லாரையும் மாற்றுகிறது.
அதிக அன்பு கொண்ட அண்ணனும், தங்கையும்தான் படத்தின் பிரதானம் என்றாலும் கதையில் காதலும் உள்ளது. இதில் நாயகனாக நடித்துள்ள கண்ணன், நடிகர் தனுஷின் சொந்த சித்தப்பா மகன். தனுஷுக்கு தம்பி உறவு. நாயகியாக வரும் ஸ்ரீபிரியங்காதான் தங்கை. அண்ணனாக இயக்குநர் மு.களஞ்சியம் நடித்திருக்கிறார்.
முழுப் படமும் சங்கரன் கோவிலில் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாதி படம் கோடைக் காலத்திலும் மறுபாதி படம் மழைக் காலத்திலும் எடுக்கப்பட்டுள்ளது.
இதில் கவிஞர் வைரமுத்து மெட்டுக்கு மட்டுமல்ல, எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்தும் பாடல்கள் எழுதியுள்ளது புதிய முயற்சி. படத்திலுள்ள நான்கு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.
இப்படம் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் வெளியாகவே இல்லை. சில ஊர்களில் சனி. ஞாயிறு காலைக் காட்சி மட்டுமே என்று சுருங்கிப் போனது. மறுபிறவி எடுத்துள்ள இப்படம் இப்போது சில திருத்தங்களுடன் புது அவதாரம் எடுத்து வெளிவருகிறது.
எங்களுடைய இந்த கோடை மழை படத்தை மரித்ததை உயிர்ப்பிப்பதைப் போல மறு பிறவி எடுக்க வைத்துள்ளர் ஸ்டுடியோ-9 சுரேஷ் சார். இதன் பெருமைகள் அனைத்தும் அவரையே சேரும்..” என்கிறார் இயக்குநர் கதிரவன்.














