புதிய தொழில் நுட்பம் மற்றும் இயக்குதல் டீமுடன் களத்தில் இறங்கியிருக்கிறது ‘கிருமி’ படக் குழு.
இப்போது தமிழ்ச் சினிமாவில் புதியவர்களின் வருகையினால் பல புதிய படைப்புகள் புதிய வடிவத்தில் வெளிவந்து ரசிகர்களை தியேட்டர்கள் பக்கம் இழுத்து வந்து கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் இந்த ‘கிருமி’ படத்தையும் அதன் தயாரிப்பு குழு மிக வித்தியாசமாக தயாரித்து வருகிறது.
‘மதயானைக் கூட்டம்’ படத்தில் நடித்த கதிர், ரேஷ்மி மேன்ன் இதில் ஹீரோ, ஹீரோயினாக நடித்திருக்கின்றனர். மேலும் சார்லி, வனிதா, டேவிட் சாலமன் ஆகியோரும் உள்ளனர்.
படம் பற்றி பேசும் நடிகர் கதிர், “இந்த ‘கிருமி’ திரைப்படம் சமூக நலனை முன்னிறுத்தி இயற்கை வளங்களை நாசப்படுத்தும் மனித கிருமிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது. இதுவொரு யதார்த்தவகையான படம். இன்றைய இளைய சமுதாயத்தினர் திடீரென்று எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினையை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை கண்கூடாக நிகழ்த்தி காட்டுகிறது..” என்கிறார்.
படம் பற்றி பேசும் நாயகி ரேஷ்மி மேனன், “எனக்கு முதல்லேயே சந்தேகம் இருந்துச்சு.. இந்த கேரக்டரை என்னால செய்ய முடியுமான்னு..? ஆனால் படக்குழு என்னை ரொம்ப உற்சாகப்படுத்தி இந்தக் கேரக்டரோட ஒன்ற வைச்சுட்டாங்க.. இப்போ நினைச்சுப் பார்த்தா நான் நல்லாவே செஞ்சிருக்கேன்னு தோணுது..” என்கிறார்.
புதுமுக இயக்குநரான அனு சரண் இந்தப் படத்தில்தான் தமிழ்த் திரையுலகத்திற்கு அறிமுகமாகிறார். இவர் இதற்கு முன்பு பி.சி.ஸ்ரீராமிடம் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் மேலும் இசையமைப்பாளர் கே-விடமும் இசை பயின்றவராம்.. பிறந்து வளர்ந்து ஆஸ்திரேலியா என்பதோடு பல குறும்படங்களை இயக்கிய அனுபவஸ்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
“தற்போதைய சூழலுக்கு ஏற்றாற்போல் புதுமையான ஒரு விஷயத்தை சைக்காலஜிக்கல் திரில்லராக இந்த ‘கிருமி’ படத்தில் சொல்லியிருக்கிறேன்..” என்கிறார் இயக்குநர் அனு சரண்.
படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ஒரு பக்கம் போஸ்ட் புரொடெக்சன் வேலைகளும் நடந்து வரும் வேளையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பிற்கான ஆயத்தங்களும் செய்யப்பட்டு வருகின்றனவாம்..
ஜே.பி.ஆர். பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் கே.ஜெயராம், எல்.பிருத்விராஜ், எம்.ஜெயராமன், எஸ்.ராஜேந்திரன் ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கின்றனர். மிக விரைவில் திரைக்க வர காத்திருக்கிறது இந்த ‘கிருமி’ திரைப்படம்.









