full screen background image

“திட்டமிட்டுப் படமெடுத்தால் நஷ்டம் வராது…” – மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் அட்வைஸ்

“திட்டமிட்டுப் படமெடுத்தால் நஷ்டம் வராது…” – மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமனின் அட்வைஸ்

ஜே.பி.ஆர். பிலிம்ஸ் கோவை வழங்கும் ‘கிருமி’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று காலை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ்.தாணு ,துணைத் தலைவர்கள் பி.எல் தேனப்பன், கதிரேசன். தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சார்லி, படத்தின் நாயகன் கதிர், நாயகி ரேஷ்மி மேனன், நடிகை வனிதா, பாடகர் கானாபாலா, இசையமைப்பாளர் கே, ‘காக்கா முட்டை’ மணிகண்டன், ‘கிருமி’ யை இயக்கியுள்ள அனுசரண், ஒனிப்பதிவாளர் அருள் வின்சென்ட், பாடலாசிரியர் ஞானகரவேல், தயாரிப்பாளர்கள் ரஜினி ஜெயராமன், கோவை ஜெயராமன், பிருத்விராஜ், ராஜேந்திரன் ஆகியோரும்  கலந்து கொண்டார்கள்.

IMG_9952

வரவேற்புரையாற்றிய தயாரிப்பாளர் ‘ரஜினி’ ஜெயராமன், ”நான் இன்று இந்த இடத்தில் இந்த மேடையில் இப்படி ஒரு தயாரிப்பாளராக நிற்கிறேன் என்றால் அதற்கு காரணம் சூப்ப ஸ்டார் அண்ணன் ரஜினிதான். அவர் இல்லாமல் நான் இல்லை. அவர் இன்று இங்கே வர முடியாவிட்டாலும் மனமார வாழ்த்தி இருக்கிறார்…” என்றார்.

பாடகர் கானா பாலா பேசும்போது, ”நான் இதுவரை வேலை செய்த படங்களிலேயே அதிக சம்பளம் வாங்கியது இந்தப் படத்துக்குதான். திருப்தியாகக் கொடுத்தார்கள். தயாரிப்பாளர்கள் ராஜேந்திரனும் ரஜினி ஜெயராமனும் மிக கண்ணியமாக நடந்துகொண்டனர்..” என்றார்.

இசைத் தட்டை வெளியிட்ட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் படக் குழுவினரை வாழ்த்திப் பேசினார்.

IMG_9926

அவர் பேசும்போது, “இந்தக் ‘கிருமி’ படத்தைத் தயாரித்திருக்கும் ரஜினி ஜெயராமன் என்னை கண்டிப்பாக வர வேண்டும் என்று அழைத்தார். அவர் சூப்பர் ஸ்டாருடன் நீண்ட காலம் உதவியாளராக இருந்தவர் 

நான் இயக்கிய 25 படங்களில் 20 படங்களில் ரஜினிக்கு உதவியாளராக இருந்தவர் இந்த ஜெயராமன்தான். நானும் சூப்பர் ஸ்டாரை வைத்து படங்கள் இயக்கியவன் என்கிற முறையில் அவரை உரிமையோடு வாழ்த்துகிறேன்.

அவர் சரியாக சம்பளம் கொடுத்ததாக எல்லாரும் கூறினார்கள். அப்போது எனக்கு ஏவி.எம்,  நாகிரெட்டி, ஜெமினி எஸ்.எஸ்.வாசன், மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம் என  எல்லாரும் நினைவுக்கு வந்தார்கள். அந்த நேர்மையான தயாரிப்பாளர்கள் வரிசையில் ஜெயராமனும் சேர வாழ்த்துகிறேன்.

இங்கே சார்லி நன்றாகப் பேசினார். ஒரு காலத்தில் அவர் பாலசந்தரிடம் பேசவே பயந்து கொண்டு இருந்ததைப் பார்த்திருக்கிறேன். இப்போது தைரியமாகப் பேசுகிறார். வளர்ந்து இருக்கிறார்.

இங்கே இருக்கிற நடிகை வனிதா மிகவும் தைரியசாலி. ஒரு முறை என் படத்தின் படப்பிடிப்பு ஒன்று குற்றாலம் மலையில் நடந்தது. அதில் நடிக்கும் ஒய். ஜி. மகேந்திரன் மலையின் மேலே போகப் பயந்தார். எப்படிப் போவது என்று அவர் பயந்தபோது அவருக்கும் முன்பாக வயதான லட்சுமி நாராயணன் என்பவரை மலையின் மீது ஏற வைத்தேன். அவரை மேலே கொண்டு சேர்த்தது யார் தெரியுமா..? இந்த வனிதாதான். அப்புறம்தான் ஒய்.ஜி.மகேந்திரன் மலையில் ஏறினார். அந்த அளவுக்கு மிகவும் துணிச்சலான நடிகை இந்த வனிதா.  படப்பிடிப்பின்போது மட்டும்தான் எங்கள் குழுவினர் பரபரப்பாக இயங்குவார்கள். படப்பிடிப்பு முடிந்ததும் எல்லோரும் நண்பர்களைப் போல மாறி விடுவோம்.

இயக்குனர் அனு சரணே இப்படத்திற்கு படத் தொகுப்பாளராகவும் இருக்கிறார். இயக்குநரே படத் தொகுப்பாளராகவும் இருக்கும்போது திட்டமிட்டு தேவையான காட்சிகளை மட்டுமே எடுக்க முடியும். தேவை இல்லாமல் பணம் வீணாகாது.

பீம்சிங் முதற்கொண்டு நான்வரை அப்படி எடிட்டிங் தெரிந்த இயக்குநராக இருந்ததால்தான் தயாரிப்பாளர்களை காப்பாற்றும் இயக்குநர்களாக இருந்தோம். அந்த வரிசையில் அனுசரணும் வர வேண்டும்.

நான் எழுபது படங்கள் இயக்கி இருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து 25 படங்கள், கமலை வைத்து 10 படங்கள், நடிகர் திலகத்தை வைத்து 3 படங்கள் இயக்கியிருக்கிறேன். இவை எப்படி முடிந்தது..? அந்தப் படங்கள் எல்லாம் எஸ்.பி முத்துராமன் என்கிற தனிப்பட்ட நபரின் வெற்றியல்ல எல்லாமே எஸ்.பி.எம். என்கிற படக் குழுவின் வெற்றி.  நன்கு திட்டமிட்டு எடுத்ததால்தான் முடிந்தது. திட்டமிட்டு படமெடுத்தால் நஷ்டம் வராது, வெற்றி நிச்சயம். இதை எல்லாருக்கும் சொல்லிக் கொள்கிறேன்.

இந்தப் படத்தின் கதை ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் கதை என்றார்கள். அவர் நமது பெருமையை உயர்த்தும்படி படம் எடுத்து இன்று பாராட்டைப் பெற்று வருகிறார். அவரது கதையை இயக்கியுள்ள அனுசரணையும் என்னையும் மிஞ்சி வாழ்க என வாழ்த்துகிறேன்…” என்றார்.

Our Score