வெறும் எட்டே நாள் ஷூட்டிங்கிலேயே ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெயரே வித்தியாசமாக உள்ளது. ‘கிரிங் கிரிங்’ என்ற பெயருள்ள இத்திரைப்படம் ஒரு கிரைம் அண்ட் திரில்லர் கலந்த படமாம்.
இந்தப் படத்தின் நாயகனாக ரோஹன் நடித்திருக்கிறார் இவர் ஏற்கெனவே சில படங்களில் நடித்த அனுபவம் கொண்டவர். கதாநாயகியாக காவ்யா நடித்துள்ளார்.
ஒளிப்பதிவு – துவாரகேஷ், இசை – ஜூடு, படத்தொகுப்பு – சிவ தர்மா. ஆர்.பி.எம். சினிமாஸ் சார்பில் இந்தப் படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ராகுல். இவர் வின்சென்ட் செல்வாவின் மாணவர். படத்தில் நடித்துள்ள நாயகன் ரோஹன் உள்பட பெரும்பாலான நடிகர்கள் கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள்.
இது ஒரு முழு நீள க்ரைம் த்ரில்லர். ஒரே இரவில் நடக்கும் கதை. செய்யாத கொலைக் குற்றத்தில் சிக்கிக் கொள்கிற நாயகன் அதிலிருந்து மீளப் போராடுகிறான். அதிலிருந்து வெளியே வர அவன் தவிக்கிற தவிப்பும், எதிர்கொள்ளும் பதற்றமும். போராட்டமும்தான் கதை. சென்னை, தூத்துக்குடி போன்ற இடங்களில் எண்ணி எட்டே நாட்களில் படப்பிடிப்பை முடித்திருக்கிறார் இயக்குநர் ராகுல்.
இப்போதெல்லாம் நிறைய குற்றங்களில் துப்பு துலங்கி குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவியாக இருப்பது மொபைல் போன்தான். மொபைல் போனின் ‘கிரிங் கிரிங்’ ஒலி இந்தப் படத்தின் திரைக்கதையில் பெரிய திருப்பங்களுக்கு வழி வகுப்பதால்தான் படத்துக்கு இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.
“எட்டே நாளில் ஒரு படமா..? அவசரக் கோலமாக இருந்து விடாதா..?” என்று இயக்குநர் ராகுலிடம் கேட்டபோது, “நன்றாகத் திட்டமிட்டால் எதையும் செய்ய முடியும். இது ஒரே இரவில் நடக்கும் கதை. இதன் பின்னால் சரியான திட்டமிடலும் பலரது உழைப்பும் இருந்தது. அதனால் எட்டே நாட்களில் எடுத்து முடித்தோம்.
இது அவசரமாக எடுக்கப்பட்ட படமல்ல. விறுவிறுப்பான திரைக்கதை இருக்கும். எனவே பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது. படத்தின் பரபரப்புக்கு வேகத் தடையாக இருக்குமென்று படத்தில் பாடல்களே இல்லை.
இன்று 2 கோடி முதல் 10 கோடிவரையிலும் பணம் இல்லாமல் ஒரு படத்தினை தயாரிக்க முடியாதென்று பேசுகிறார்கள். ஆனால் இப்போதெல்லாம் படத்தின் தயாரிப்புச் செலவைக் காட்டி வியாபாரம் செய்ய முடியாது. படத்தில் ஏதாவது புதுமை இருக்கவேண்டும். கதை சொல்லும் விதத்தில் வித்தியாசம் காட்டவேண்டும். அப்படி எடுக்கப்படுகிற படத்துக்குத்தான் வியாபாரிகள் வருவார்கள். வியாபாரம் நடக்கும். எனக்கு இயக்கத்துடன் தயாரிப்புத் திறமையும் இருப்பதால்தான் இந்தப் படத்தைத் துணிந்து தயாரித்தேன்…” என்றார்.
இந்த ‘கிரிங் கிரிங்’ திரைப்பபடம் வரும் நவம்பர் 6, வெள்ளிக்கிழமையன்று திரைக்கு வருகிறது.










