கே.ஜி.எஃப். – சினிமா விமர்சனம்

கே.ஜி.எஃப். – சினிமா விமர்சனம்

ஹோம்பேல் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிப்பில் 80 கோடி செலவில் கன்னடத்தில் உருவாகியிருக்கும் மெகா பட்ஜெட் திரைப்படம் இது.

கன்னடத் திரையுலகில் மிக அதிக பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் திரைப்படமும் இப்போதைக்கு இதுதான்..!

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், ஆனந்த் நாக், வசிஸ்டா என்.சிம்ஹா, அச்யூத் குமார், மாளவிகா அவினாஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – பிரசாந்த் நீல், விநியோகஸ்தர் – விஷால், விநியோக நிறுவனம் – விஷால் பிலிம் பேக்டரி, தயாரிப்பாளர் – விஜய் கிரகண்டூர், தயாரிப்பு நிறுவனம் – ஹோம்பேல் பிலிம்ஸ், ஒளிப்பதிவு – புவன் கவுடா, பாடல் இசை, பின்னணி இசை, ஒலி வடிவமைப்பு – ரவி பஸ்ரூர், படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த், நடன இயக்கம் – ஜனி சைக் மோகன், ஒலிக் கலவை – V.G.ராஜன், டப்பிங் பணிகள் – Y.S.ஆனந்த், வசனம் – எம்.சந்திரமெளலி, எம்.வினய் ஷிவகங்கே, பிரசாந்த் நீல், கே.ஜி.ஆர்.அசோக், பாடல்கள் – கபிலன், மதுரகவி, கணேஷ் ராஜா, இணை இயக்கம் – அபி, பி.திம்மே கவுடா, உடைகள் வடிவமைப்பு – யோகி ஜி.ராஜ், சானியா சர்தாரியா.

இந்தப் படத்தின் இயக்குநரான பிரசாந்த் நீல், 2014-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான ‘உக்ரம்’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்திற்காக சிறந்த அறிமுக இயக்குநருக்கான தேசிய விருதினையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ‘கே.ஜி.எஃப்.’ இவர் இயக்கும் இரண்டாவது படமாகும்.

கன்னடத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.

தமிழில் இந்த படத்தை நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷால் பிலிம்’ பேக்டரி மூலம் வெளியிட்டுள்ளார்.

2014-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ‘கேங்ஸ் ஆஃப் வாஸிபர்’ திரைப்படம் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் பிரிட்டிஷ் காலத்திலிருந்தே சுரங்கத் தொழில்சாலைகள் மெல்ல, மெல்ல வளர்ந்து அரசியல் கட்சிகளையும் வளர்த்து, அரசியல்வாதிகளையும் வளர்த்து, குண்டர் படையினரையும் வளர்த்தெடுத்தது என்பதை தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இதேபோல் இத்திரைப்படமும் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கோலாரில் தங்கம் இருப்பதை அறிந்து அங்கே தங்கச் சுரங்கம் அமைக்கப்பட்டு, கோலார் பகுதியே வளம் பெற்றதையும், இதைத் தொடர்ந்து அங்கே நடைபெற்ற அரசியல் கொலைகள், ரவுடியிஸத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது.

படத்திற்குள் செல்வதற்கு முன் கோலார் தங்கச் சுரங்கத்தின் ஆதிமூலத்தை சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

கர்நாடகாவில் இருக்கும் ஒரு மாவட்டம் கோலார். இந்த மாவட்டத்தில் பங்காருபேட்டை தாலுகாவில் உள்ள ஒரு நகராட்சிதான் கோலார் நகரம். ஆங்கிலேயர் காலத்திலேயே இந்தப் பகுதியில் தங்கங்கள் கிடைப்பது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கே 1800-களில் ஆங்கிலேயர்கள் தங்கச் சுரங்கத்தை நிறுவினார்கள்.

இந்தச் சுரங்கங்களில் வேலை பார்க்க தமிழ்நாட்டு எல்லையில் இருந்த வடஆற்காடு, தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழகத்து மக்கள் வலுக்கட்டாயமாக ஆங்கிலேயர்களால் இட மாற்றம் செய்யப்பட்டனர்.

கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்கள் அனைவருமே இந்தத் தங்கச் சுரங்கத்தில் பணியமர்த்தப்பட்டனர். இப்படி மூன்று தலைமுறைக்கு முன்பேயே தமிழர்கள் அந்தப் பகுதியில் வாழ ஆரம்பித்துள்ளனர்.

1950-களில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு நடந்த அரசியல் மாற்றத்தின் காரணமாக அந்தக் கோலார் தங்கச் சுரங்கம் அரசியல்வாதிகள் மற்றும் குண்டர்கள் கைகளுக்குச் சென்றது.

இடையில் சுரங்கங்களில் வேலை வாய்ப்பு குறைய ஆரம்பித்தபோது பல தமிழர்கள் கூட்டம், கூட்டமாக பெங்களூருக்கு குடி பெயர்ந்தனர். இதனால்தான் பெங்களூரில் மட்டும் தமிழர்கள் இன்றைக்கும் லட்சக்கணக்கானோர் குடியிருக்கிறார்கள்.

கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கங்கள் கிடைப்பது குறைந்து கொண்டே வந்ததால் வேலை வாய்ப்பும் குறையத் துவங்கியது. கடைசியாக 2000-ம் ஆண்டில் சுரங்கத்தை மூட மத்திய, மாநில அரசுகள் முடிவெடுத்ததையடுத்து அங்கே வேலை பார்த்த தமிழர்களுக்கு வேலையில்லாமல் போனது.

இதையடுத்து அதுவரையிலும் 3 லட்சம் பேர் குடியிருந்த கோலார் பகுதியில் இப்போது ஒன்றரை லட்சம் பேர் மட்டுமே வாழ்கின்றனர். மீதி பேர் கர்நாடகாவில் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்.

1978-ல் ஈரானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்த பனிப் போரால் அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்குமான பகை அதிகமாகியது. ஆப்கானிஸ்தானை அமெரிக்கா ஆதரிக்க.. ஈரானை ரஷ்யா ஆதரிக்கத் துவங்கியது.

இதன் பாதிப்பு அப்போது மொத்த உலகத்தையும் ஆட்டி படைத்தது. OIL, COFFEE, STEEL, COTTON இவற்றுடன் சேர்ந்து தங்கத்தின் விலையும் அந்த நேரத்தில் விண்ணைத் தொட்டது.

இதன் தொடர்ச்சியாய் 1970-களின் இறுதி மற்றும் 1980-களின் தொடக்கங்களில்   கோலார் தங்கச் சுரங்கத்தில் கிடைக்கும் தங்கத்தால் அந்த இடத்தை கைப்பற்ற மாஃபியாக்கள் இடையே பெரிய போட்டி நடந்தது.

அரசியல் தலைவர்கள், பன்னாட்டு பெரும் புள்ளிகள், மாஃபியாக்கள், இடையே நடந்த இந்தப் போட்டியில் எந்த பின்புலமின்று சுயம்புவாக உருவாகியவர் படத்தின் ஹீரோவான ராக்கி என்னும் யாஷ்.

எண்ணற்ற சூழ்ச்சிகளுக்கும், கட்டுக்கடங்காத இரத்தக் கறைகளுக்கும் இடையே போராடி அங்கேயிருந்த அடிமைகளை மீட்டெடுத்து அந்தக் கோலார் தங்கச் சுரங்கத்தில் யாஷ் தனது சாம்ராஜ்யத்தை நிலைநிறுத்துவதுதான் இந்தக் கோலார் தங்கச் சுரங்கம் பாகம்-1-ன் கதைக் கரு.

இது உண்மைக் கதை என்று படத்தில் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் உண்மையாக பிரதமர் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் 1972 முதல் 1980-களில் அந்தச் சுரங்கத்தின் நிர்வாகத்திலும், கோலார் நகரத்திலும் நடந்து கொண்டிருந்த ரவுடிகள் ராஜ்ஜியத்தைப் பற்றித்தான் மறைமுகமாக படத்தில் சொல்லியிருக்கிறார்கள்.

படத்தின் துவக்கத்தில்கூட ஒரு பெண் பிரதமர்.. அவரது முகத்தைத் தெளிவாகக் காட்டவில்லை. ஒரு இந்திய பிரஜை ஒருவனை இந்திய ராணுவம் தேடிப் பிடித்துக் கொலை செய்ய வேண்டும் என்று உத்தரவிடும் ஒரு கோப்பில் கையெழுத்திடுகிறார்.

ஒரு நாட்டின் பிரதம மந்திரியே ராணுவத்தை அனுப்பி ஆளைத் தேடி கொலை செய்யும் அளவுக்கு அந்த நபர் பெரிய ஆளா..? யார் அவர்..? அவர் செய்த செயல் என்ன..? – இப்படித்தான் ஒரு கேள்விக்குறியுடன் இந்தப் படம் துவங்குகிறது.

இது உண்மையாகவே நடந்த கதைதான் என்று அரசியல் ஆய்வாளர்கள் இப்போது சொல்கின்றனர். முகம் காட்டப்படாத அந்தப் பெண் பிரதமர் இந்திரா காந்திதான் என்றும் “1980-களில் கோலார் தங்கச் சுரங்கப் பகுதிகளில் ஆளும் கட்சியை எதிர்த்தும், போலீஸை எதிர்த்தும் தனி சாம்ராஜ்யத்தை நடத்தி வந்த ராக்கி என்பவனை ராணுவம்தான் விரட்டிப் பிடித்துச் சுட்டுத் தீர்த்தது. அந்தக் கதைதான் இது…” என்கிறார்கள். ஆனால் படக் குழுவினர் ‘இது நிஜக் கதை அல்ல’ என்று படத்தின் டைட்டிலியே சொல்லி கதையை முடித்துவிட்டார்கள்.

இனி படத்திற்குள் செல்வோம்..

இதுவரையிலும் வெளிவராத ஒரு புத்தகம் ஒரு பிரபலமான பத்திரிகை ஆசிரியரான மாளவிகா அவினாஷ் கைகளில் சிக்குகிறது. அந்தப் புத்தகம் மத்திய மற்றும் மாநில அரசுகளால் தடை செய்யப்பட்ட புத்தகம் என்பதால் அதன் பிரதி எங்கேயுமே கிடைக்காமல் இருந்து, இந்த ஒரேயொரு பிரதி மட்டுமே கிடைத்திருப்பதாக அறிகிறார் மாளவிகா.

“இந்தப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை ஆராய்ந்தால் நமக்கு நிறைய விஷயங்கள் கிடைக்கும்…” என்கிறார் பத்திரிகையின் அதிபர். இதனால் அந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியரான ஆனந்த் நாக்கை அழைத்து விசாரிக்கிறார் மாளவிகா. அப்போது ஆனந்த் நாக் கதையாகச் சொல்வதுதான் திரைப்படத்தில் காட்சிகளாக விரிகிறது.

கர்நாடகாவின் ஒரு பகுதியில் தந்தை யார் என்றே தெரியாத நிலையில் பிறக்கிறார் ஹீரோ யாஷ். அவருடைய தாயார் அவரைக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கி வருகிறார்.

”உனக்கு பின்னாடி ஆயிரம் பேர் இருக்காங்குற தைரியம் இருந்துச்சின்னா உன்னால ஒரு போர்லதான் ஜெயிக்க முடியும். ஆனா அதே ஆயிரம் பேருக்கு நீ முன்னாடி இருக்கேங்குற தைரியம் இருந்துச்சினா இந்த உலகத்தையே ஜெயிக்கலாம்…”  என்று அந்தச் சின்ன வயதிலேயே அவரது தாய் அவருக்கு போதனையூட்டுகிறார்.

யாஷூக்கு எட்டு வயதாக இருக்கும்போதே அவருடைய அம்மா நோய்வாய்ப்பட்டு இறக்கிறார். சாகும் தருவாயில் யாஷின் அம்மா, “நீ சாகும்போது பெரிய பணக்காரனாகத்தான் சாகணும்..” என்று சொல்லி சத்தியம் வாங்குகிறார்.

இதையடுத்து யாஷுக்கு சின்ன வயதில் இருந்தே பெரிய பணக்காரனாக வேண்டும் என்ற ஆசை உந்தித் தள்ளுகிறது. இந்த வெறியுடன் மும்பைக்கு வந்து கால் பதிக்கிறார் யாஷ். துவக்கத்தில் ஒரு அடியாள் கும்பலிடம் வேலைக்கு சேர்ந்து ஷூவுக்கு பாலீஸ் போடுகிறார் யாஷ்.

இப்படியே இருந்தால் பெரிய ஆளாக முடியாது என்பதை உணர்ந்து ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அடித்துக் காயப்படுத்துகிறார். இதனால் அடியாள் கும்பலில் இவருக்கு பெயர் கிடைத்து அதன் பயனாய் அடியாள் டிரெயினிங்கில் சேர்கிறார். பின்பு அடியாளாகவே உருவாக்கப்படுகிறார்.

அப்போது மும்பையை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இரண்டு குரூப்களும் தங்கக் கடத்தலைத்தான் முக்கிய வேலையாகச் செய்து கொண்டிருக்கின்றன. கடத்தல் வேலையில் ஏற்படும் மோதலில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டும், சுட்டுக் கொண்டும் சாகின்றனர்.

இந்த நிலைமையில் மும்பையில் தனிக்காட்டு ராஜாவாக வாழ விரும்பும் ராக்கி என்னும் யாஷ்.. அந்த குரூப்புகளையும் மீறி தனது தனித்தன்மையைக் காட்ட விரும்புகிறார். இந்த நேரத்தில் மும்பையின் இப்போதைய பெரிய டான் யாஷிடம் ஒரு பெரிய வேலையைக் கொடுக்கிறார்.

கர்நாடகாவில் இருக்கும் கே.ஜி.எஃப். எனப்படும் கோலார் தங்க வயல் பகுதியை ஆண்டு கொண்டிருக்கும் மிகப் பெரிய டானை யாஷ் கொலை செய்ய வேண்டும். அப்படி செய்தால் மும்பையை யாஷிடம் ஒப்படைப்பதாகத் சொல்கிறார் அவர்.

எப்படியோ மும்பை தன் கைக்கு வந்தாக வேண்டும் என்று துடிக்கும் யாஷ், இந்த டீலுக்கு ஒத்துக் கொள்கிறார். வேலையைக் கச்சிதமாக முடித்துவிட்டு வருவதாக சவால்விட்டுவிட்டு பெங்களூர் வருகிறார் யாஷ்.

வந்த இடத்தில் தனது பிறந்த நாளுக்காக நடுரோட்டில் பீர் அடித்துக் கொண்டு, நண்பர்களுடன் கொட்டமடிக்கும் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டியின் அடியாட்களுடன் யாஷூக்கு மோதல் ஏற்படுகிறது.

ஸ்ரீநிதி ஷெட்டி தனது அப்பாவிடம் சொல்லி யாஷை கொலை செய்ய முயற்சிக்க.. யாஷோ வந்தவர்களையும் அடித்து வீழ்த்திவிட்டு ஸ்ரீநிதியை தனக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், தான் அவளைக் காதலிப்பதாகவும் சொல்கிறார்.

இடையில் வந்த வேலையும் யாஷை அழைக்க.. கோலார் தங்க வயலுக்குள் கால் வைக்கிறார் யாஷ். அங்கே அது ஒரு மர்ம தேசமாக இருக்கிறது. அக்கம்பக்கம் இருக்கும் கிராமங்களில் வசித்து வந்த மக்கள் மொத்தமாக இங்கே தூக்கி வரப்பட்டு சுரங்க வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதை நேரில் காண்கிறார் யாஷ்.

வயதானவர்கள், கண் பார்வையில்லாதவர்கள், நோயாளிகளெல்லாம் தயவு தாட்சண்யமே இல்லாமல் சுட்டுக் கொல்லப்படுவதும், அந்த இடத்திலிருந்து யாரும் வெளியே போகவே முடியாத சூழல் இருப்பதையும் உணர்கிறார் யாஷ்.

அவருக்குக் கிடைக்கும் சமிக்ஞையின்படி அந்தப் பகுதியை ஆட்டிப் படைத்துக் கொண்டிருப்பவரை கொலை செய்யும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் யாஷ். அந்த முயற்சியில் வெற்றி பெற்றாரா..? இல்லையா…? என்பதுதான் இந்த முதல் பாகத்தின் கதை.

யாஷ் தனி ஒரு மனிதனாக மொத்தப் படத்தையும் தன் தோள் மேல் சுமந்திருக்கிறார். யாருக்கும் பயப்படாதவராக, பயம் என்றாலே அறியாதவராக.. ஒரு மாஸ் ஹீரோவாக படம் முழுவதும் பரபரத்திருக்கிறார்.

அலட்சியமான உடல் மொழி, திமிரான பார்வை, எதையும் தைரியமாக செய்யத் துணியும் வீரம், யாருக்கும் பயப்படாத தன்மை… இதுதான் யாஷ் ஏற்றிருக்கும் ‘ராக்கி’ கதாபாத்திரம். இதனை அவர் மிகக் கச்சிதமாக செய்திருக்கிறார்.

அவருடைய உடல் மொழியும், நடிப்பும்.. அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச்சான யாருக்கும் அஞ்சாதவன் என்பதற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறது. இந்தப் பாத்திரப் படைப்பு சற்று அதீதமாக இருந்தாலும் அதை ரசிகர்களை நம்ப வைப்பது போலவே அவரது நடிப்பும். வசனங்களும் அமைந்திருக்கின்றன.

ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியிருக்கிறார் யாஷ். அவரது ஒவ்வொரு அடியும், எதிராளி மீது இடி மாதிரி விழுகிறது. ஹெல்குலிஸ் போன்ற உடலமைப்பை அவர் கொண்டிருப்பதால், எத்தனை பேரை எப்படி அடித்தாலும் பார்வையாளர்களுக்கு அதில் சந்தேகம் ஏற்படாத அளவுக்கு அப்படி படமாக்கியிருக்கிறார்கள்.

கூடவே, காதல் காட்சிகளிலும் ரசிகர்களைக் கவர்ந்திழுக்கிறார். ஆனால் எப்போதும் முகத்தை இறுக்கமாக வைத்திருப்பதும், காட்சிக்குக் காட்சி ஸ்டைலாக நடப்பதும்தான் ஓவர் டோஸாக தெரிகிறது.

ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டிக்கு பணக்கார வீட்டு, திமிர் பிடித்த பெண் கதாபாத்திரம். அதற்குச் சரியாக பொருந்தியிருக்கிறார் ஸ்ரீநிதி. யாஷை சீண்டி சண்டைக்கு இழுப்பது, அவரை நினைத்து உருகுவது என தனது பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்.

படத்தில் வில்லன்கள் பலர் நடித்திருக்கிறார்கள். அவர்களின் பெயர்கள்கூட வித்தியாசமாகவும், உச்சரிப்புக்கு கஷ்டமாகவும் இருக்க… நினைவுக்கு வர மறுக்கின்றன. இருந்தும் அனைவரிடத்திலும் வித்தியாசமாகத் தெரிகிறார் வசிஷ்ட சிம்ஹா. கருடாவாக நடித்திருப்பவரும் தனது நடிப்பால் மிரட்டியிருக்கிகிறார். மற்றபடி படத்தில் யாஷின் ராஜ்ஜியம் மட்டும்தான்.

மாளவிகா அவினாஷ், அச்சுகுமார், அனந்த் நாக், அர்ச்சனா ஜோஸ், அய்யப்பா ஷர்மா உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவுவது போல நடித்திருக்கிறார்கள். தமன்னா ஒரேயொரு பாடல் காட்சிக்கு மட்டும் ஆடிவிட்டுப் போகிறார்.

கலை இயக்குநர் ஷிவக்குமாருக்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். அத்தனை பெரிய சுரங்கப் பகுதியை செட் அமைத்துப் படமாக்குவதெல்லாம் சுலபமல்ல. ஆனாலும் பெரும் பொருட்செலவில் படமாக்குவதற்கு ஏதுவாகவும், ரிச்சாகவும் அமைத்திருக்கிறார். தங்கச் சுரங்கம் எப்படியிருக்குமோ அப்படியே அதனை அமைத்திருக்கிறார் ஷிவக்குமார்.

தங்கச் சுரங்கத்தின் அரங்க அமைப்புகள் கோலார் தங்க வயலில் போடப்பட்டு புகை, புழுதி மற்றும் நெருப்புகளுக்கு இடையே 8 மாதங்கள் 4 ஆயிரம் துணை நடிகர்களுடன் படமாக்கப்பட்டதாம். பாராட்டுக்கள்..!

ஒளிப்பதிவாளர் புவன் கவுடாவின் ஒளிப்பதிவில் படத்தின் துவக்கத்தில் இருந்து கடைசிவரையிலும் இது வித்தியாசமான படம் என்பதை அடித்துச் சொல்லியிருக்கிறார்கள்.

எழுபதுகளின் இறுதியிலும், என்பதுகளின் தொடக்கத்தில் இந்தக் கதை நடப்பதால் பிளாக் மற்றும் பிரௌன் கலர்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

படப்பிடிப்பில் சினிமா லைட்டுகளை உபயோகிக்காமல் இயற்கையான லைட் சோர்ஸ்களை மட்டும் பயன்படுத்தியிருக்கிறார்கள். நெருப்பு மற்றும் வத்திக்குச்சிகளால் மட்டுமே பல காட்சிகள் படம் பிடிக்கப்பட்டுள்ளதாம்.

கர்நாடகா கிராமப் பகுதிகள், மும்பை நகரம், கே.ஜி.எஃப் சுரங்கம், வில்லனின் மாளிகை என்று அனைத்தையும் பிரம்மாண்டமாகவே காண்பித்து கண்களை விரிய வைத்து பார்க்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்.

சண்டைக் காட்சிகளில் அன்பறிவ் மாஸ்டர்கள் பெரிய மாஸை காட்டியிருக்கிறார்கள். அனைத்துமே வித்தியாசமாகவும், பார்ப்பதற்கு பிரமிப்பை ஊட்டுவதுபோலவும் இருக்கிறது. மும்பையில் எதிராளிகளிடத்தில் வேண்டுமென்றே மாட்டிக்  கொண்டு அதன் பின்பு மொத்தப் பேரையும் பொலி போடும் சண்டை காட்சி அபாரம். எப்படித்தான் படமாக்கினார்கள் என்று கேட்கத் தோன்றுகிறது..!

இதேபோல் தங்கச் சுரங்கத்திற்குள் நடக்கும் சண்டைக் காட்சிகளும். ஒளிப்பதிவாளரின் துணையுடன் சண்டை இயக்குநர் மிகப் பிரயத்தனப்பட்டு அத்தனை சின்ன இடத்தில் ஸ்டைலாகவும் அதே சமயம் மிரட்டலாகவும் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்கள். நிச்சயமாக சண்டை காட்சிகளுக்காகவே இத்திரைப்படம் வரும் காலத்தில் நிச்சயம் பேசப்படும்.

ரவி பஸ்ரூரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்தான். தமன்னாவுடன் ஆடும் ஆட்டமும் ரசிக்கும் வகையில் உள்ளது. இதையும் தாண்டி பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ரவி. அதனாலேயே யாஷ் மீதான பில்டப்புகள் அதிகமாகிறது. ‘சலாம் ராக்கி’ பாடல் யாஷூக்கான பில்டப்பை கூட்டியிருக்கிறது.

குழப்பமான திரைக்கதையை தனது தெளிவான படத் தொகுப்பால் நேர்க்கோட்டில் பயணிக்க வைத்திருக்கிறார் படத் தொகுப்பாளர் ஸ்ரீகாந்த்.

கோலார் தங்க வயல் எப்படி கண்டுபிடிக்கப்பட்டது என்பதைக் காட்டும் துவக்கக் காட்சிகளே அழகாக இருக்கின்றன. இதுவே படத்தை ஆழமாக பார்வையாளர்கள் மனதில் பதிவு செய்துவிட்டது.

அந்தச் சுரங்கத்தை ஒரு பெரிய டான் எப்படி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறான் என்பதையும் சொல்லியபடியே, அந்தச் சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்ட அதே நாளிலேயே நாயகன் ‘யாஷ்’ பிறப்பதாகவும் காட்டுவது திரைக்கதைக்கு பொருத்தமாகிவிட்டது.

மும்பையில் யாஷிடம் பிச்சைக்காரர் ஒருவர் சில்லறை கொடுக்க, நோட்டாக தரச் சொல்லி யஷ் கேட்கிறார். “இங்கே கையேந்தினால் சில்லறைதான் கிடைக்கும், கையை ஓங்கினால் நிறையவே கிடைக்கும்…” என்று அந்த பிச்சைக்காரர் சொல்வது யாஷூக்கு நச்சென்று பதிவதுபோல காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

முதல் பாதியைவிடவும் இரண்டாம் பாதியில்தான் படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மிரட்டியிருக்கிறார்கள். கோலார் தங்க சுரங்கம், அதை சுற்றிய கிராமங்கள், கொத்தடிமைகளாக வாடி வதைப்படும் மக்கள், அவர்களின் நம்பிக்கையற்ற வாழ்க்கை என படம் சுவாரஸ்யமாகிவிடுகிறது.

படத்தின் மிகப் பெரிய மைனஸ் யாஷின் ஓவர் ஹீரோயிசம்தான். என்னதான் தைரியமான ஆளாக இருந்தாலும், எதிரில் வருபவர்களை அடிப்பதற்கு ஒரு அளவு இல்லையா…? அத்தனை கொலைகள் செய்யும் யாஷை அப்போதைய காவல்துறை சும்மா விட்டுவைத்ததா என்ன..? இப்படி படத்தில் நிறைய லாஜிக் ஓட்டைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

சில வசனங்கள் இது டப்பிங் படம்தான் என்பதை அடிக்கடி தெளிவுபடுத்துகின்றன. ஆனாலும் மேக்கிங்கில் எதிர்பார்க்காத வகையில் அசத்தியிருக்கிறார்கள்.

படம் விறுவிறுப்பாக நகர்ந்தாலும், ஆங்காங்கு இடம் பெறும் சிற்சில காட்சிகள் படத்தின் வேகத்திற்கு முட்டுக்கட்டை போடுகின்றன. மற்றபடி கன்னட சினிமாவில் இதுவொரு முக்கியமான படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கோடிகளைக் கொட்டித் தயாரிக்கப்படும் நமது மாநில மொழிப் படங்களை ஹாலிவுட் படங்களுக்கு நிகராகச் சொல்வார்கள். ஆனால் நூறு கோடி பட்ஜெட்டுக்குள் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் சர்வ நிச்சயமாக ஹாலிவுட் படங்களுக்கு நிகரான கலை மற்றும், தொழில் நுட்ப மிரட்டலாகவும் உருவாகியிருக்கிறது. இந்த முதல் பகுதியே அடுத்தப் பகுதியை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்திருக்கிறது..!

கே.ஜி.எஃப். – சேப்டர் – 1 – இந்திய சினிமாவில் மிக முக்கியமான ஒரு திரைப்படம்..!

Our Score