ஆர்ட் அப் ட்ரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி (ARTUPTRIANGLES FILM KAMPANY) சார்பில் தயாராகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் தமிழ் தயாளன் இயக்கியுள்ளார்.
கதாநாயகனாக நடிகர் ஆதவன் அறிமுகமாகிறார். ‘டூ லெட்’, ‘மண்டேலா’ புகழ் நடிகை ஷீலா கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய் டிவி ஜாக்குலின், சார்லஸ் வினோத், சிதம்பரம், தர்மதுரை ஜீவா, விவேக் மோகன் மற்றும் உமர் ஃபரூக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாலசுப்பிரமணியம் இசையில் கவிஞர் வைரமுத்து மற்றும் யுகபாரதி பாடல்களை எழுதியுள்ளனர்.
‘கெவி’ என்றால் ‘அடிவாரம்’ அல்லது ‘பள்ளம்’ என்று பொருள். மலை எப்போதுமே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அதன் இருண்ட பக்கங்கள் யாரும் அறியாதது. இத்தனை ஆண்டு காலத் தமிழக வரலாற்றில் எத்தனையோ ஆட்சிகள் மாறினாலும் எத்தனையோ மலைக் கிராம மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னமும் கிடைக்கவில்லை. அப்படிப்பட்ட ஒரு கிராமம்தான் ‘கெவி’.
கொடைக்கானல் அருகேயிருக்கும் இந்த மலைக் கிராமத்தின் கதையைத்தான் மிக யதார்த்தமாகப் படமாக்கியிருக்கிறார் இயக்குநர். இதற்காக 3 வருடங்களாக இந்த மலைக் கிராம மக்களுடன் வாழ்ந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார். அந்த மக்கள் மனதில் உள்ள வலி, வேதனைகளை சொல்லி இருக்கிறார். ஒரு தரமான படைப்பை கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
டெல்லி சுல்தான்கள் ஆட்சி காலத்தில் மதுரை மற்றும் அதை சுற்றி இருந்த பகுதிகளில் குடியிருந்த மக்களுக்கு மிக அதிகமாக வரி போடப்பட்டது. அந்த வரிச் சுமையை தாங்க முடியாத அந்த மக்கள் அங்கிருந்து கொஞ்சம், கொஞ்சமாக நகர்ந்து யாரும் கண்டுபிடிக்க முடியாத ஒரு பிரதேசத்திற்கு இடம் மாறினார்கள்.
தங்களுடைய புதிய இருப்பிடத்திற்கு வந்த அந்த மக்கள், அந்தப் பகுதியை ஒரு விவசாய விளைநிலமாக மாற்றி தங்களுடைய வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு அந்தக் காலத்திய வாழ்க்கை முறைகளுக்கு ஏற்படவும் வாழ துவங்கி விட்டார்கள்.
ராஜாக்கள் ஆட்சி போய் பிரிட்டிஷார் ஆட்சி காலம் வந்தவுடன் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு வந்திருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு இந்தியாவின் அப்போதைய வெப்ப நிலை ஒத்துக் கொள்ளவில்லை.
சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிப்பதற்காக தமிழகத்தில் பிரிட்டனைப் போல குளிர் பிரதேசம் எங்கே இருக்கிறது என்று தேடினார்கள். அப்படியே அவர்கள் தேடி அலைந்து சென்ற இடம்தான் அந்தக் கிராமத்து மக்கள் இருந்த வெள்ளகெவி என்ற கிராமம்.
அந்தக் கிராமத்தில் இருந்தும் திருப்தி அடையாத பிரிட்டிஷ் அதிகாரிகள் அந்த மக்களினுடைய உதவியினால் அவர்கள் தங்களுடைய டோலியில் அரசரைப் போல பிரிட்டிஷ் அதிகாரிகளை தூக்கிக்கொண்டு மலை மீது ஏற ஏற,,, சமதளமான ஒரு இடத்தை கண்டுபிடித்தார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். அப்படி கண்டுபிடிக்கப்பட்ட அந்த இடம்தான் இன்றைய கொடைக்கானல்.
கொடைக்கானல் அதற்கு பின்பு ஒரு கோடை வாசஸ்தலம் ஆகவும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஓய்வெடுப்பதற்காக ஒரு மலை வாசஸ்தலமாகவும் மாறியது.
இப்போது கொடைக்கானல் தமிழகம் மட்டுமல்ல… பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மிடில் கிளாஸ் மக்கள் தங்களுடைய கோடைகால சுற்றுலாவிற்கு வருவதற்கு ஏற்ற தளமாக இருக்கிறது. கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் ஒரு சுற்றுலா தளமாக இன்றைக்கு கொடைக்கானல் விளங்கி வருகிறது.
ஆனால் அந்தக் கொடைக்கானலை கண்டுபிடிப்பதற்காக உதவிய வெள்ளகேவி கிராமத்து மக்களின் நிலைமை இன்றைக்கும் பரிதாபமாகத்தான் இருக்கிறது.
அந்தக் கிராமத்திற்கு செல்வதற்கான சாலை வசதி இன்றுவரையில் இல்லை. சாலை வசதி இருந்தால்தான் மருத்துவ வசதி செய்து தரப்படும் என்பதால் அதுவும் இல்லை. அந்த மக்கள் போராடி போராடி களைத்துப்போய் விட்டார்கள்.
பல தலைமுறைகளாக போராடி வந்த மக்கள் இன்றைக்குத்தான் ரேஷன் கார்டுகளை வாங்கி ரேஷன் கடையையே திறந்து இருக்கிறார்கள். இந்த 2025-ம் ஆண்டில்தான் அவர்களுக்கு ரேஷன் கடையை கிடைத்திருக்கிறது என்றால் இதற்கு முன்பு அவர்கள் எப்படி வாழ்ந்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.
அந்த வெள்ளக்கெவி கிராமத்து மக்களின் வாழ்க்கை கதைதான் இந்தக் கெவி என்ற திரைப்படம்.
அந்த வெள்ளைக்கெவி கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு பிரசவ வலி ஏற்பட்டாலோ அல்லது யாருக்கேனும் நோய் ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி வந்தாலோ அவர்களை டோலியில் வைத்து தூக்கி கொண்டு கிட்டத்தட்ட 23 கிலோ மீட்டர் தூரம் அந்த கிராமத்து மக்கள் மழையில் இருந்து கீழே இறங்கி ஓடி வந்து மருத்துவமனையில் சேர்ப்பார்கள். அதற்குள்ளாக பல உயிர்கள் பறி போய் இருக்கும். ஆனாலும் வேறு வழி இல்லை. அந்த இடத்தில் சாலை போட வசதியில்லை என்று மாறி, மாறி ஆட்சிக்கு வரும் அரசுகள் இப்போது வரையில் மறுத்து வருகின்றன.
அப்படிப்பட்ட இன்றைய சூழலில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அந்த ஊரைச் சேர்ந்த ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவரை டோலியில் வைத்துத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கி ஓடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில் சட்டமன்றத் தேர்தல் வருவதால் தேர்தல் பிரச்சாரத்திற்காக லோக்கல் எம்.எல்.ஏ.வும் தன்னுடைய படை பரிவாரங்களுடன் பாதுகாப்புக்கு போலீஸூடனும் அதே ஒத்தையடிப் பாதையில் வந்து கொண்டிருக்கிறார்.
இரு தரப்பினரும் சந்திக்கிறார்கள். ஊர் மக்கள் சார்பாக பேசும் ஹீரோ மலையன் “எங்களுக்கு இத்தனை வருடமாக சாலை வசதி, மருத்துவ வசதி கேட்டு நாயாய் அழைந்துவிட்டோம். நீங்கள் செய்யவில்லை ஆனால் ஓட்டு மட்டும் கேட்க வருகிறீர்கள்..” என்று கோபத்தில் சீறுகிறான்.
இது தொடர்பாக இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் நடந்து அது கடைசியில் மோதலாக உருவாகிறது. இந்த நேரத்தில் தற்செயலாக மலையனின் கால் செருப்பு போலீஸ் இன்ஸ்பெக்டரை தொட்டுவிட அவர் அதை மிகப் பெரிய அவமானமாக எடுத்துக் கொள்கிறார்.
மலையனை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்று துடிக்கிறார் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வினோத். எம்.எல்.ஏ.வோ இதை ஒரு சாதாரண விஷயமாக எடுத்துக் கொண்டு போக இன்னமும் வெறியாகிறார் சார்லஸ்.
அதே நேரத்தில் மலையனின் மனைவி ஷீலா என்ற மந்தாரை நிறை மாத கர்ப்பிணியாக இருக்கிறார். நள்ளிரவில், அவருக்கு திடீரென்று பிரசவ வலி வந்துவிடுகிறது.
கிராமத்து மக்கள் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு போன் செய்து தகவலை சொல்ல அங்கிருக்கும் மருத்துவர் காயத்ரி மிகவும் அலட்சியமாக, “அங்கிருந்து கொண்டு வருவதற்குள் உயிர் இருந்தா நாங்க காப்பாத்துறோம். இல்லாட்டி அப்படியே திருப்பி கொடுத்துவிடுகிறோம் கொண்டு போயிருங்க..” என்று அலட்சியமாக சொல்லிவிட்டுப் போகிறார்.
அந்த மருத்துவமனையில் பணியாற்றுபவர்கள் வேறு யாரும் இல்லாததால் மந்தாரையைத் தூக்கிக் கொண்டு கீழே இறங்க வேண்டிய கட்டாயம் அந்தக் கிராமத்து மக்களுக்கு ஏற்படுகிறது.
அதே நேரம் பெரியகுளம் வந்து வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மலையேற முயன்ற மலையனை இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் அனைவரும் கடத்திச் சென்று அடித்து துன்புறுத்துகிறார்கள்.
கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் புதிய இளம் மருத்துவராக சேர்ந்து இருக்கும் ஜாக்குலின் இளகிய மனம் கொண்டவராக இருப்பதால் இந்தப் பிரச்சினையை அறிந்து அதே மருத்துவமனையில் நர்சாக வேலை பார்க்கும் ஜீவாவை அழைத்துக்கொண்டு டிரைவருடன் மந்தாரையைப் பார்க்க ஓடுகிறார்.
மந்தாரையை மலையில் இருந்து மக்கள் இறக்கிக் கொண்டு வரும் பொழுது பணிக்குடமும் உடைந்து நீரும் வெளியில் வந்து மிகவும் சிக்கலான ஒரு உயிருக்கு போராடும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார் மந்தாரை.
இன்னொரு பக்கம் மலையன் போலீஸிடம் இருந்து தப்பித்து தப்பித்து சென்றாலும் அவர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டே இருக்கிறார். மூன்றாவதாக மருத்துவர் ஜாக்குலினும் அவருடைய அணியினரும் மந்தாரையைப் பார்க்க சென்று கொண்டிருக்கின்றனர்.
போலீஸிடமிருந்து தப்பிக்க முடியாமல் மலையன் தவித்துக் கொண்டிருக்க… குழந்தையின் தொப்புள் கொடி சுற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஷீலா அங்கே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். இந்த இருவரின் போராட்டமும் என்னவானது என்பதுதான் இந்தப் படத்தின் திரைக்கதை.
இப்படி ஒரு படத்தைக் கொடுத்த இயக்கநர் தமிழ் தயாளனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.
இந்தப் படத்தை மூன்று வருடங்களாக தயாரித்தார்களாம். நிச்சயமாக இந்தப் படத்தை தயாரிப்பதற்கும் ஒரு தைரியம் வேண்டும். அதைவிட இந்தப் படத்தில் பணியாற்றிய அத்தனை பேருக்கும் பாதம் தொட்டு வணங்கி பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.
அந்த இரவு நேர காட்சிகள் அனைத்தையும் எப்படித்தான் படம் ஆக்கினார்களோ தெரியவில்லை. அந்த காட்டுப் பகுதியில், மலைப் பகுதியில் குறுகலான அந்த இடத்தில் டோலியைத் தூக்கி கொண்டு அந்தக் காட்சிக்காக எவ்வளவு சிரமப்பட்டு இருப்பார்கள் என்பதை நினைத்தால் நம் கண்களில் கண்ணீர் வருகிறது.
உயிரைக் கொடுத்து நடித்தேன் என்று யாராவது சொல்வார்கள். ஆனால், உண்மையாகவே உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார்கள் இந்தப் படத்தின் நடிகர், நடிகைகள்.
நாயகனாக நடித்திருக்கும் மலையன் பிரமாதமான நடிப்பினைக் காண்பித்திருக்கிறார். காவல்துறையினரிடம் அடிபட்டு சித்திரவதை படுகின்ற காட்சிகளில் எல்லாம் அவருடைய நடிப்பு ஐயோ பாவம் என்ற நிலைமைக்கு நம்மை கொண்டு சென்றுவிட்டது.
அவருடைய அந்த பதட்டம் தவிப்பு மனைவியை பார்க்க வேண்டும் என்கிற துடிப்பு… குழந்தையை பார்க்க வேண்டும் என்கின்ற ஆவல்… கடைசியாக அந்த குழந்தையை பார்க்கும்பொழுது அவர் படுகின்ற துயரம்… அனைத்திலும் ஒரு மிகச் சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருக்கிறார். இப்படி ஒரு நடிப்பை காட்டிய இவருக்கு மிகச் சிறந்த விருதுகள் இந்த வருடம் நிச்சயமாக கிடைக்க வேண்டும்.
இவருக்கு இணையாக மிகச் சிறந்த நடிப்பை காண்பித்து இருக்கிறார் ஷீலா ராஜ்குமார். கர்ப்பிணி பெண்ணுக்கான ஆசுவாசம், ஓய்வு, பயிற்சி, இயலாமை என்று அத்தனையும் முதல் சில காட்சிகளில் காட்டிவிடும் ஷீலா அதற்கு பின்பு குழந்தை வயிற்றில் இருந்து வெளியில் வருவதில் சிக்கல் இருப்பதால் அதில் அதை தன்னுடைய முகத்திலேயே பல்வேறு விதமான முக பாவனைகள் மூலமாக அந்த கொடூர நடிப்பை நமக்கு காண்பித்திருக்கிறார். பார்க்கும்பொழுதே நமக்கு பரிதாபத்தை வரவழைக்கிறது.
இந்தக் காட்சிகளை பார்க்கின்றவர்கள் யாரும் அம்மா என்கின்ற அந்த வார்த்தையை இனிமேல் நிச்சயம் ஒரு கௌரவமாகவும், மரியாதையாகவும் அழைப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. அம்மா என்ற வார்த்தைக்கு ஒரு கௌரவத்தையும், மரியாதையையும் கொடுத்த மந்தாரையான ஷீலா ராஜ்குமாருக்கு நமது மனமார்ந்த பாராட்டுக்கள்.
இறுதிக் காட்சியில் ஷீலாவும் மலை எனும் கட்டிப் பிடித்துக் கதறுகின்ற அந்தக் காட்சி உண்மையாகவே நம் மனதைத் தொட்டுவிட்டது. அந்தக் கதறல் சாதாரணமான ஒரு இந்திய குடிமகனின் கதறல். ஆனால், அது இன்றைய தமிழக குறுநில மன்னர்களுக்கும், டில்லியை ஆளும் இன்றைய சுல்தான்களுக்கும் என்றைக்கும் எட்டாது என்பதுதான் துயரமான ஒரு உண்மை.
கொடூரமான இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சார்லஸ் வினோத் அந்தக் கொடூரத்தனத்தை தனது முகத்திலும், நடிப்பிலும், பேசும் வசனத்திலும் வெளிக்காட்டி இருக்கிறார்.
ஒரு பக்கம் “அக்காவை எப்படியாவது காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள்” என்று துடியாய் துடிக்கும் ஷீலாவின் தம்பியாக நடித்த விவேக் மோகனும் தன்னுடைய நடிப்பில் நம்மை கவர்ந்திருக்கிறார்.
கெட்டவர்கள் இருக்கும் இடத்தில் நல்லவர்களும் இருப்பார்கள் என்பது உதாரணமாக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் புதிய இளம் மருத்துவராக நடித்திருக்கும் ஜாக்குலினும், ஜீவா சுப்பிரமணியனும் அந்த ஒரு நிமிடம் தன்னுடைய குடும்பத்தை நினைத்துப் பார்த்து மனம் மாறும் அந்த டிரைவருமாக ஒரு நம்பிக்கை வெளிச்சத்தை காண்பித்து இருக்கிறார்கள்.
அரசு மருத்துவர்களில் மிக மோசமான மருத்துவர்களும் இருப்பார்கள். அந்த ஒரு சிலரின் அடையாளமாக இந்தப் படத்தில் நடித்திருக்கும் டாக்டர் காயத்ரி அந்தக் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். அவருடைய இயல்பான நடிப்புக்கும், பேச்சுக்குமே இந்தக் கேரக்டர் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜெகன் ஜெயசூர்யா அற்புதமான உழைப்பை கொடுத்திருக்கிறார். அந்த அடர்ந்த காடும், காட்டுப் பிரதேசமும், காட்டு வழியும் சாலையில்லாத குறுகலான இடத்திலும் பெரும் கை விளக்கு வெளிச்சத்திலேயே டோலியைத் தோளில் தூக்கி வரும் அந்த காட்சிகளையும் அனைவரின் பரிதவிப்பையும், நடிப்பையும், இயலாமையையும் அவ்வளவு அழகாக படம் எடுத்திருக்கிறார்.
இந்த மலை உச்சியில் இருந்து பல்வேறு இடங்களில் இரவு நேர காட்சிகளை காண்பிக்கும் பொழுது இப்படியும் சில ஊர்கள் இருக்கின்றன… இப்படியும் சில மக்கள் நமக்கு தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது நமக்கே இப்போதுதான் தெரிகிறது.
மலையனுக்கு நடக்கும் சித்ரவதை காட்சிகளையும், மலையன் தப்பித்து செல்லும் காட்சிகளையும்… அந்த வேக, வேகமான ஓட்டங்களையும் கேமராவில் பதிவு செய்திருக்கும்விதத்தைப் பார்த்தால் கேமராமேனும் அவ்வளவு தூரம் ஓடி இருப்பார் என்றுதான் தோன்றுகிறது. ஹாட்ஸ்அப் டூ ஜெகன் ஜெயசூர்யா.
படத்தின் பின்னணி இசை அவ்வளவு அபாரம் என்று சொல்லலாம். படத்தின் காட்சிகளுக்கு ஏற்ப அளவில் பின்னணி இசை அமைத்து… தடதடக்கும் வகையில் நம்மையும் அவர்களுடனே ஓடுவது போல ஒரு தோற்றத்தை, மாய சித்திரத்தை உருவாக்கி படத்தில் நம்மையும் ஒரு கதாபாத்திரமாகவே ஆக்கி, அதைப் பார்க்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர்.
இவ்வளவு காட்சி துணுக்குகளையும், துண்டு துண்டாக எடுக்கப்பட்ட காட்சிகளையும் ஒன்றாக நறுக்கி அதை படம் பார்ப்பவர்கள் அனைவரின் வயிற்றையும் கலக்கும் அளவுக்கு ஒரு மனித வேட்டையை தொகுத்தளித்திருக்கும் படத் தொகுப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள்.
இயக்குநர் தமிழ் தயாளன் மிகச் சிறப்பான ஒரு இயக்குநராக தமிழ் சினிமாவில் இனி வலம் வருவார் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த அளவுக்கு படத்தின் கதை, திரைக்கதை, வசனம், காட்சிப்படுத்துதல் அனைத்திலும் ஒரு புதுமையைப் புகுத்தி இது திரில்லர் படமா, சஸ்பென்ஸ் படமா, அல்லது குடும்ப படமா அல்லது அரசியல் படமா என்று யோசிக்கும் வகையில் அனைத்தையும் கலந்து மிக அழகான கதம்பமாக கொடுத்திருக்கிறார்.
அந்த இடத்தில் மக்கள் என்ன மாதிரியான தமிழில் பேசுவார்களோ அதை போன்ற தமிழையும் அவர்கள் பேசுகின்ற முறையையும்… இந்த மாதிரி டோலியைத் தோளில் தூக்கிக் கொண்டு போகும்போது என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும்… அவர்கள் எப்படி அவர்கள் ஒன்றிணைவார்கள் என்பதை எல்லாம் விவரணைகளோடு சேர்த்து காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.
இந்தக் கிராமத்து மக்களின் கதை உலகத்திற்கே தெரிய வந்தது பல்வேறு பத்திரிகைகளின் மூலமாகத்தான்..! அந்தக் கிராமத்திற்கு செல்லும் பாதையில் சாலை போட முடியாது. மிகவும் குறுகலான இடமாக இருக்கிறது. அதனால், அந்தக் கிராமத்து மக்கள் கீழே இறங்கி கொடைக்கானல் பகுதிகளோ அல்லது அதன் அருகில் இருக்கும் பூம்பாறை பகுதிகளோ அல்லது வேறு சமதள பகுதிக்கு குடி வந்தால் அவர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக அன்றைய தமிழக அரசு கூறியது. ஆனால், இதனை அந்த ஊர் மக்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள்.
இப்பொழுது பிரச்சனையே அதுதான். அரசோ, “அந்த இடத்தில் சாலை போட வசதியே இல்லை..” என்கிறது. அதேபோல் “மருத்துவ வசதிக்காக அந்த இடத்தில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைப்பது என்பதும் சாத்தியமில்லை…” என்கிறது.
ஆனால் அந்தக் கிராமத்து மக்களோ “நாங்கள் பிறந்து வளர்ந்த அந்த இடத்தைவிட்டு வெளியில் வர மாட்டோம். இங்கேதான் இருப்போம்.. நீங்கள் இங்கே வந்து எங்களுக்கு வேண்டியதை செய்து கொடுங்கள்” என்கிறார்கள்.
இப்போது இவர்கள் இருவரின் பிரச்சனையில் இப்படி ஒரு பிரச்சனையில் அரசுதான் விட்டுக் கொடுத்து எப்படியாவது அந்த மக்களுக்கு ஒரு நல்ல வழியை காட்ட வேண்டும் என்பதுதான் படம் பார்த்த பார்க்கும் ரசிகர்களின் ஏகோபித்த குரலாக இருக்கிறது.
இந்தப் படத்தின் விளைவாக அந்த மக்களுக்கு அடிப்படைத் தேவைகளான சாலை வசதி, மருத்துவ வசதி.. இன்ன பிற அரசு கொடுக்கும் சலுகைகள் அனைத்தும் கிடைத்தால் அதன் பெருமை இந்தப் படத்தின் இயக்குநரையே சேரும்.
அரசு மனம் வைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்..!
RATING – 4.5 / 5









