full screen background image

பாரதிராஜாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

பாரதிராஜாவுக்கு கேரள உயர்நீதிமன்றம் நோட்டீஸ்..!

தமிழ்நாட்டு சினிமாக்காரர்கள் போல அமைதியாக இருப்பார்கள் என்று கேரள சினிமாக்காரர்களை பற்றி தப்புக் கணக்குப் போட்டுவிட்டார் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இந்த அலட்சியம் இப்போது அவரை கோர்ட்வரைக்கும் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது.

2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், தேர்வுக் குழு தலைவராக இருந்த இயக்குநர் பாரதிராஜா உள்பட 10 பேருக்கு கேரள உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

2013-ம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி அறிவிக்கப்பட்டது. சிறந்த படமாக 2013-ம் ஆண்டில் வெளியான சுதேவன் இயக்கிய ‘சி.ஆர்.நம்பர் 89’ திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகர்களாக 2 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ‘ஆர்டிஸ்டு’, ‘நார்த் 24 காதம்’ படத்தில் நடித்த பகத் பாசில், அயாள் மற்றும் ‘சக்கரியாயுடெ கர்ப்பிணிகள்’ படத்தில் நடித்த லால் ஆகியோரும், சிறந்த நடிகையாக ‘ஆர்டிஸ்டு’ படத்தில் நடித்த ஆன் அகஸ்டினும் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.

இந்த நேரத்தில் தேர்வுக் குழுவின் தலைவராக இருந்த நமது இயக்குநர் இமயம் பாரதிராஜாவிற்காக கேரள அரசு செலவு செய்த கணக்கை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற ஒருவர், அதில் இருந்த உண்மைச் செய்திகளை அறிந்து அதிர்ந்து போய் அதனை பகிரங்கமாக வெளியிட்டுவிட்டார்.

பாரதிராஜா மூன்று நாட்கள் மட்டுமே திருவனந்தபுரத்தில் இருந்து படங்களை பார்த்ததாகவும், அந்த மூன்று நாட்களுக்கு மட்டுமே அவருக்குரிய ஹோட்டல் பில் செலுத்தப்பட்டதும் அதன் மூலம் தெரிய வந்தது..

இதையடுத்து தேர்வுக் குழுவின் தலைவரே அனைத்து படங்களையும் பார்க்காத நிலையில் இந்த தேர்வுக் குழு தேர்வு செய்த விருதுகள் தரமற்றவை என்று கேரள சினிமாவுலகில் கூக்குரல்கள் எழுந்தன.

உடனேயே இந்த 2013-ம் ஆண்டின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி தேசிய விருது பெற்ற மலையாள படமான ‘பேரறியாதவர்’ என்ற படத்தின் தயாரிப்பாளர் அனில்குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ‘‘தேர்ந்தெடுக்கப்பட்ட 85 திரைப்படங்களையும் தேர்வுக் குழு தலைவராக இருந்த பாரதிராஜா மற்றும் உறுப்பினர்கள் முழுமையாக பார்க்காமல் அவசர கோலத்தில் சிறந்த படங்களையும், நடிகர்-நடிகைகளையும் தேர்வு செய்துள்ளனர். எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும்’’ என்று அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.

அவர் மனு மீதான விசாரணை நேற்று நீதிபதி முஸ்தாக் அகம்மது தலைமையில் நடைபெற்றது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘‘தேர்வுக் குழு தலைவர் பாரதிராஜா, நடிகையும் தேர்வுக் குழுவின் உறுப்பினருமான ஜலஜா உள்பட 7 உறுப்பினர்கள் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் பிரியதர்ஷன், செயலாளர் எஸ்.ராஜேந்திரன்நாயர், கலாசார துறை செயலாளர் ஆகியோருக்கு 10 தினங்களுக்குள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Our Score