ஒரு நல்ல திரைப்படத்திற்கு மொழிகள் கடந்து, எல்லை கடந்து வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ‘டங்கல்’ மற்றும் ‘பாகுபலி’ போன்ற இந்திய படங்களுக்கு சீனாவின் சினிமா சந்தையில் மிகுந்த வரவேற்பு இருந்தது.
அதேபோன்று தமிழ் திரைப்படத் துறைக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பும், எப்போதும் முன்மாதிரியாக விளங்கும் என்ற உண்மை ‘Content is King’ என்பதன் மூலம் நிரூபணமாகியிருக்கிறது.
இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘கென்னடி கிளப்’ என்கிற தமிழ்த் திரைப்படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்படவுள்ளது. இப்படத்தின் டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது என்பது தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய சாதனையாகும்..!
நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தில் மூத்த இயக்குநர் பாரதிராஜா மற்றும் சசிகுமார் இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மேலும், சமுத்திரக்கனி, சூரி, முனீஷ்காந்த், ‘புதுவரவு’ மீனாக்ஷி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் இதில் நடிக்கின்றனர்.
R.B.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு D.இமான் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கம் – B.சேகர்.
பாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகும் இப்படத்திற்கு தமிழ் திரையுலகம் மட்டுமல்லாது சர்வதேச சந்தையிலும் மிகுந்த எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.
இத்திரைப்படம் நிஜ வாழ்க்கையில் பெண்களுக்கான கபடி போட்டியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு, தடைகளை முறியடிப்பது, சாதனைகள் புரிவது, போன்ற கதையம்சம் உள்ள படங்கள் உலக மக்கள் அனைவரையும் ஈர்க்கும். அப்படி ஈர்க்கப்பட்டுத்தான் சீனாவில் இவ்வளவு பெரிய தொகைக்கு படம் விற்பனையாகியுள்ளது.
இத்திரைப்படம் 2019-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டு அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.