full screen background image

பரபரப்பான இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் தயாராகி வரும் ‘கென்னடி கிளப்’

பரபரப்பான இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் தயாராகி வரும் ‘கென்னடி கிளப்’

பாரதிராஜா – சசிகுமார் – சுசீந்திரன் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’.

இப்படத்தில் பாரதிராஜா, சசிகுமாரைத் தவிர, சமுத்திரக்கனி, சூரி, முனீஸ்காந்த்,  மீனாட்சி, காயத்ரி, நீது, சௌம்யா, ஸ்ம்ரிதி, சௌந்தர்யா மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

டி.இமானின் இசையில், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை பி.சேகர் செய்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

இத்திரைப்படம் பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாவதால் இந்தியா முழுவதும் எங்கெல்லாம் கபடி போட்டி நடக்கிறதோ அங்கேயெல்லாம் நேரில் சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் சேலம், ஈரோடு, மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 5 இடங்களில் நடைபெற்ற நிஜ போட்டிகள் நடக்கும் களத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது. இது தவிர, மும்பை அஹமதாபாத் போன்ற இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெற்றது.

ஒவ்வொரு இடத்திற்கு செல்லும் போதும் இரவு பகல் பாராமல் பயணம் மேற்கொள்ள வேண்டும். நிஜ கபடி போட்டி நடக்கும் களம் என்பதால் 10 நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். அதுமட்டுமில்லாமல், ஒவ்வொருவரையும் திரட்டுவதற்கு 3 நாட்கள் ஆகும். மேலும், மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நான்கு கேமராக்களை வைத்து எடுப்பது என்பது சவாலாகவே இருக்கிறது. செலவுகள் கூடுதலாக இருப்பினும், அதைப் பொருட்படுத்தாமல் படம் தரமானதாக வரவேண்டும் என்ற நோக்கத்தோடு மட்டுமே எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இறுதிக் கட்ட படப்பிடிப்பிற்காக படக் குழுவினர் மகாராஷ்டிரா சென்றுள்ளனர். மும்பையிலிருந்து சுமார் 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இசாத்பூர் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.  இதற்காக 25 ஆயிரம் பேர் பார்க்கக் கூடிய வகையில் பிரம்மாண்டமாக ‘செட்’ அமைத்து மைதானத்தை தயார் செய்துள்ளார்கள். இங்கு விளையாட்டு வீரர்களின் காட்சிகளைப் படமாக்கவுள்ளார்களாம்.

இதன் பிறகு, பஞ்சாப் ஹரியானாவில் நடக்கும் கபடி போட்டிகளுக்கிடையில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. இங்கு 600 பெண்கள் கபடி குழுக்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக பெண்கள் கபடி குழுக்களைக் கொண்ட மாநிலம் இதுதான்.

கதாநாயகனும் பாரதிராஜாவும் இந்த இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். அந்தக் காட்சிகளின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் அதற்கென பிரத்யேக ‘செட்’ அமைத்து நடக்கும். அதேபோல, பயிற்சியாளருக்கான படப்பிடிப்பும் இங்குதான் நடைபெறுமாம்.

இந்தப் படத்தின் சீன மொழிக்கான டப்பிங் உரிமம் 2 கோடி ரூபாய்க்கு படம் வெளியாவதற்கு முன்பே விற்பனையாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் எதிர்பார்ப்பு உள்ள  நிலையில், இறுதிக் கட்டத்திற்கு நகர்ந்துள்ள இத்திரைப்படம் வரும் தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகவுள்ளது.

Our Score