தமிழக – கேரள எல்லையில் நடக்கும் தண்ணீர் பிரச்சினையை மையமாக வைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கேணி’.
ப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் தயாரிப்பில், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளுமே தயாரித்து வெளியான இந்தப் படத்தில் பார்த்திபன், ஜெயப்பிரதா, ரேவதி, அனுஹாசன், ரேகா, நாசர், ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில், தண்ணீருக்கு யார் சொந்தக்காரன்? நிலம், ஆகாயம், காற்று போல தண்ணீரும் எல்லாருக்கும் பொதுவானதுதானே? அதை எப்படி தனி மனிதன் சொந்தம் கொண்டாட முடியும்.. என்ற நியாயமான கேள்விகளை முன் வைத்திருந்தார் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்.
கிட்டத்தட்ட முல்லைப் பெரியாறு பிரச்சினை போலவே இருந்த கதையை மிகவும் கவனமுடன் கையாண்டிருந்தார் இயக்குநர். தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களின் பாராட்டு மழையில் நனைந்த போதிலும், தமிழகத்திற்கு ஆதரவான கருத்துக்கள் இப்படத்தில் நிறைந்திருந்ததால் கேரளத்தில் சில இடங்களில் எதிர்ப்பு நிலவியது.
எல்லோரது பாராட்டுக்களையும் பெற்ற இப்படத்திற்கு, தற்போது கேரள அரசு விருது வழங்கி கௌரவித்துள்ளது. இப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.நிஷாத்திற்கு சிறந்த கதை ஆசிரியருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கான நீதியை தனது திரைப்படத்தின் வாயிலாக பேசிய ஒரு இயக்குநருக்கு எதிர்ப்புகளை மீறி கேரள அரசு விருது அறிவித்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது.