தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில், 1950-60-களில் தமிழ், தெலுங்குலகதில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கதாநாயகியான நடிகையர் திலகம் சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் படமாக்கவுள்ளனர்.
31 வருடங்கள் திரைத்துறையில் இருந்த சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் மொத்தம் 263 படங்களில் நடித்துள்ளார். இன்றளவிலும் நடிகைகளில் தலை சிறந்த நடிப்புத் திறனை வெளிக்காட்டியவர் என்று இவரை மட்டுமே குறிப்பிட்டு சொல்கிறார்கள் திரைத்துறையினர்.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை இப்போது திரைப்படமாக உருவாக்குகிறார்கள். வைஜெயந்தி மூவிஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா ஆகிய நிறுவனங்கள் இந்தப் படத்தை இணைந்து தயாரிக்கின்றனர்.
படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் நடிக்க, சமந்தா முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கவுள்ளார். மற்ற நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
வலுவான திரைக்கதையுடன் உருவாகும் ‘நடிகையர் திலகம்’, தமிழ் சினிமாவின் குறிப்பிடத்தக்க படமாக மாறும் அத்தனை அம்சங்களையும் கொண்டுள்ளது. மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு மரியாதை செலுத்தும்விதமாக, படக் குழு, ‘நடிகையர் திலகம்’ படத்தின் சிறப்பு போஸ்டர் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளனர்.