இந்த இயக்குநருக்காகவே படத்தைப் பார்க்க வேண்டும் என்று தமிழ் ரசிகர்கள் நினைக்கக் கூடிய ஒரு இயக்குநராகிவிட்டார் பிரபு சாலமன். படம் பற்றிய எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே போஸ்டரில் அவருடைய பெயரைப் பார்த்துவிட்டு தியேட்டரில் கூட்டம் இப்போதும் அள்ளுகிறது.
‘மைனா’, ‘கும்கி’ என்ற தனது கவன ஈர்ப்பு கொண்ட பிரமாதமான படத்திற்கு பிறகு தன்னிடமிருந்து வரும் படைப்புகளுக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை ஊகித்துதான் மறுபடியும் ஒரு ‘காதல்’ படத்தையே சமர்ப்பித்திருக்கிறார்.
கண் பார்வையற்ற தனது தந்தையின் விருப்பத்தற்கிணங்க இந்த உலகத்தையே சுற்றி வர வேண்டும் என்கிற ஆசையில் இருக்கிறார் ஹீரோ சந்திரன். துணைக்கு அவரது நண்பர் சாக்ரடீஸ் என்ற வின்சென்ட். ‘காடு ஆறு மாதம். நாடு ஆறு மாதம்’ என்கிற ரீதியில் ஆறு மாதங்கள் உழைத்துச் சம்பாதிக்கும் பணத்தில் அடுத்த ஆறு மாதங்களில் உலகைச் சுற்றிப் பார்க்க கிளம்பிவிடுவார்கள் நண்பர்கள்.
அப்படியொரு சமயம் கன்னியாகுமரி நோக்கி பயணம் செய்யும்போது வழியில் ஓரிடத்தில் காதலர்கள் எங்கோ தப்பிச் செல்வதை பார்க்கிறார்கள். அவர்கள் நழுவவிட்ட பையை எடுத்த நண்பர்கள், கஷ்டப்பட்டு அந்த காதலர்கள் டீமை பிடித்து அவர்களிடத்தில் ஒப்படைத்து அவர்களை அனுப்பி வைக்கிறார்கள்.
இதனை பார்க்கும் காதலியின் குடும்பத்து ஆள், இவர்கள்தான் அந்தக் காதலுக்கு உதவியிருக்கிறார்களோ என்று நினைத்து காதலியின் குடும்பத்திடம் காட்டிக் கொடுக்க இவர்களை அழைத்துச் சென்று காதலியின் இருப்பிடம் கேட்டு மொத்தி எடுக்கிறார்கள் ஓடிப் போன காதலியின் குடும்பத்தினர்.
அதே வீட்டில் சிறு வயதில் இருந்தே வேலைக்காரியாக இருக்கும் கயல் என்னும் ஆனந்தி இவர்களைப் பார்க்கிறாள். காதல் திருமணம்தான் செய்ய வேண்டும் என்கிற கொள்கையில் இருக்கும் ஹீரோ சந்திரனுக்கு, சினிமா காதல் போலவே கயலை பார்த்தவுடன் காதல் வந்துவிடுகிறது.
அந்த வீட்டில் இருந்து தப்பிக்க நினைத்து தங்களை டார்ச்சர் செய்தவர்களிடம் “எனக்கு கயலை பிடிச்சிருக்கு. அதுக்காகத்தான் இங்க தானா வந்து மாட்டினேன்..” என்று உளறி வைக்கிறான் சந்திரன். “இருக்கிற பிரச்சினையே போதாதுன்னு இப்போ எங்க வீட்டுப் பொண்ணு வேற உனக்குக் கேக்குதா?”ன்னு ஹீரோவை பெட்ரோல் ஊற்றி கொளுத்த நினைக்கிறது சாதி வெறி பிடித்த அந்தக் கூட்டம். அதற்குள்ளாக ஓடிப் போன அந்த ஜமீன் குடும்பத்து பெண் திரும்பி வர.. இவர்களை வீட்டில் இருந்து வெளியேற்றுகிறார்கள் குடும்பத்தினர்.
நண்பர்கள் கன்னியாகுமரிக்குச் செல்ல.. இங்கே வீட்டில் கயலுக்கு சந்திரனின் நினைப்பாகவே இருக்கிறது. சந்திரனை தேடி கன்னியாகுமரிக்கு செல்ல முடிவெடுக்கிறாள் கயல். அங்கே கன்னியாகுமரியில் இருக்கும் சந்திரனுக்கும் கயல் நினைப்பாகவே இருக்க.. அவர்கள் இருவரும் திரும்பவும் அதே ஊருக்கு வர எத்தனிக்கிறார்கள். கடைசியில் என்ன ஆனது..? காதலர்கள் சந்திக்க முடிந்ததா..? காதல் ஜெயித்ததா.. இல்லையா.. என்பதுதான் படம்..!
ஒரு வித்தியாசமான கதைக் களனுடன் துவங்கும் படம், காதலுக்குள் நுழைந்தவுடன் இடைவேளைக்கு பின்பு ஒரு சராசரி படமாகவே ஆகிவிட்டது. இந்தப் படத்திற்கு எதற்கு சுனாமி பின்னணி என்று தெரியவில்லை. சுனாமி காட்சிகளை மிக அழகாக கிராபிக்ஸில் கொண்டு வந்திருந்தாலும்.. சுனாமி காட்சிகளை தத்ரூபமாக இருப்பதுபோல படமாக்கியிருந்தாலும் கதையுடன் ஒன்ற முடியாத அளவுக்கு அந்த நேரத்திலும் காதல் கெடுக்கிறதே..? கவனிக்கவில்லையா இயக்குநர் ஸார்..?
நூற்றுக்கணக்கான மக்கள் செத்துக் கிடக்கையில் காதலர்கள் இருவருக்கும் தாங்கள் இணைந்தது மட்டும்தான் பெரிய விஷயமாக தெரியுமா..? அல்லது மனித இழப்புகளை நினைத்து பயப்படுவார்களா..? கவலைப்படுவார்களா..? காதலையும், மனித நேயத்தையும், மனித இயல்பையும் ஒரு சேர மோதவிட்டு வேடிக்கை பார்த்திருக்கிறார் இயக்குநர். மொத்தப் படத்தின் கடைசிப் புள்ளியும் இப்படி கோரமானது இப்படத்தின் துரதிருஷ்டம்தான்..
அதிலும் கயல் தான் சந்திரனை தேடி கன்னியாகுமரிக்கு போகப் போவதாகச் சொன்னவுடன் அவருடைய பாட்டி கையில பணத்தைக் கொடுத்து அனுப்பிவிடும் காட்சிதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய மைனஸ் பாயிண்ட். கிழிந்த சட்டையின் ஒரு துண்டு பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு அவ்வளவு பெரிய கன்னியாகுமரியில் சந்திரனை எப்படி கண்டுபிடிக்க முடியும் என்று அந்தப் பாட்டியாவது யோசித்திருக்க வேண்டும்..? எந்த வீட்டிலாவது யாராவது செய்வார்களா இதை..? பாட்டியையும் மீறி கயல் சென்றதாக வைத்திருந்தால்கூட ஒப்புக் கொள்ளலாம். மிகப் பெரிய சறுக்கலான திரைக்கதை இது. ‘பில்டிங் ஸ்டிராங். பேஸ்மண்ட் வீக்..’ என்பார்களே.. அது இந்த ஒரு காட்சிதான்..
இயக்கம் என்ற வகையில் ஒரு சதவிகிதம்கூட குறை சொல்ல முடியவில்லை. அந்த அளவுக்கு அற்புதமாக இயக்கியிருக்கிறார் இயக்குநர். புதுமுகங்களான ஆனந்தியும், சந்திரனும், வின்சென்டும் ஏறக்குறைய ஒரு வருடமாக பயிற்சி எடுத்தது போல தெரிகிறது..
ஆனந்தியின் முகத்தின் புருவம்கூட நடித்திருக்கிறது. ‘காதல் படுத்தும் பாடு’ என்றுகூட இந்தப் படத்திற்கு தலைப்பு வைத்திருக்கலாம்.. அவ்வளவு பெரிய ஜமீன் வீட்டில் கேட்ரபாரற்று கிடந்த தன்னை பார்த்து ஒருவன் விரும்புகிறான் என்று சொல்லியும், காதலிப்பதாகச் சொல்லியும் கேட்ட பின்பு ஒரு அபலைப் பெண்ணுக்கு என்ன நேருமோ அதைத்தான் கயல் என்னும் ஆனந்தியின் மூலம் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.
ஆனால் ஆனந்தியின் தோற்றம்தான் நமக்கு பகீரென்றாகிறது.. சின்ன வயது. அதிகபட்சம் பள்ளி படிப்பு படிக்கும் வயது. இந்த வயதுப் பெண்ணுக்கே உரித்தான குணம் இதுவென்றாலும் ஜீரணிக்கத்தான் முடியவில்லை.
ஓடிப் போன பெண்ணின் சித்தப்பாவாக வரும் அண்ணன் தேவராஜுக்கு இது முக்கியமான படமாகிவிட்டது. மிக அழுத்தமான கேரக்டர். யார், என்ன என்பதை காட்டிக் கொள்ளாமல் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரிப்பதும், வழியில் பேசுபவர்களிடத்தில் கவுரவம் குறையாமல் பேசுவதும்.. வீட்டுப் பிரச்சினையை ஒவ்வொருவரிடமும் சமாளிப்பதும்.. கடைசியாக “நாசமா போ..” என்று கயலிடம் பணத்தைக் கொடுத்து வெறுப்புடன் அனுப்பி வைப்பதிலும் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார் தேவராஜ் அண்ணன்.
நண்பனாக வரும் சாக்ரடீஸ் பேசும் ஒவ்வொரு வசனமும் கவனிக்கத்தக்கது. படத்தின் முதல் பாதியில் சற்று கலகலப்பை கூட்டியது அவரது மோனோ ஆக்டிங்தான். போலீஸிடம் சிக்கிய பின்பு நண்பர்கள் பேசுகின்ற பேச்சுகள் சற்று அயர்ச்சியை கொடுத்தாலும் வாழ்க்கை குறித்த ஒருவித தெளிவை பார்வையாளர்களுக்குள் புகுத்துகின்றன என்பதில் ஐயமில்லை.
ஜமீன் தாத்தாவாக வருபவரின் அலப்பறைகள் ரசிக்கக் கூடியவை.. தொண, தொணவென்று பேசும் கேரக்டர் என்றாலும் இயல்பான பேச்சிலேயே நகைச்சுவையை கொடுத்திருக்கிறார். அதிலும் “உங்களுக்கு இந்த சுடிதார் நல்லாயிருக்கு தாத்தா..” என்ற வசனம் சிடுமூஞ்சிகளைக்கூட சிரிக்க வைத்துவிடும்..!
‘ஜெமினி’ ராஜேஸ்வரியின் அந்த மெளனப் பேச்சுகூட ரசிக்க வைக்கிறது. பெரைராவின் அப்பா வேஷம், ஓடிப் போன பெண்களின் அப்பாமார்களின் படபடப்பை காட்டியிருக்கிறது.
படத்தின் ஒவ்வொரு கேரக்டர் ஸ்கெட்ச்சையும் பார்த்து பார்த்து செய்திருக்கிறார் இயக்குநர். போலிஸ் ஏ.சி.யாக வரும் இயக்குநர் ‘யார்’ கண்ணன், தொழிலதிபராக வரும் நடிகர் பிரபு, முதலில் பயமுறுத்தி பின்பு நல்லவராக காட்சியளிக்கும் டிரக் டிரைவர்.. பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், கல்லூரி பேராசிரியராக வரும் ஆர்த்தி.. பேராசிரியருக்கு வராத பொறுப்புணர்ச்சியோடு ஆனந்தியை காதலனோடு சேர்த்து வைக்க நினைக்கும் கல்லூரி மாணவிகள்.. என்று பலரது பங்களிப்பும் படத்திற்கு உயிரைக் கொடுத்திருக்கின்றன.
கன்னியாகுமரி சர்ச்சின் மைக்கில் அறிவிக்கும்போதே காதலர்களை சேர்த்து வைத்திருக்கலாம். வாய்ப்புகள் இருந்தன. ஏனோ இயக்குநர் அதை விரும்பவில்லை போலும்.. ‘சுனாமியால் தாக்கப்பட்டால்கூட காதல் அழிவதில்லை. காதலர்கள் ஜெயிப்பார்கள்..’ என்கிற கருத்தைதான் இயக்குநர் சொல்ல வந்திருக்கிறார் போலிருக்கிறது.
வெற்றிவேல் மகேந்திரனின் ஒளிப்பதிவு ஒவ்வொரு காட்சியையும் அழகாக படமாக்கியிருக்கிறது. கன்னியாகுமரியின் அழகையும், ஆரல்வாய்மொழியின் அழகையும் இத்தனை அழகோடு கேமிராவில் பதிவு செய்திருப்பது இந்தப் படத்தில்தான். யாருக்கும் அதிகம் மேக்கப் இல்லாமல்.. அதே சமயம் கருத்த நிறமுடைய மூன்று முக்கிய கேரக்டர்களின் அழகையும் சிதைக்காமல் பதிவாக்கியிருக்கிறார். குறிப்பாக கயல் ஆனந்தியின் அழகு.. சின்னப் பிள்ளைதான் என்றாலும் ரசிக்க வைக்கிறது அவரது முகம்.
என்ன ஆச்சு இமானுக்கு.? நல்ல தமிழ் வார்த்தைகள் தேவைதான். ஆனால் அதையும் தாண்டி நல்ல இசைதான்.. நல்ல வார்த்தைகளை மறுபடியும், மறுபடியும் பாட வைக்கும். இதில் அதுதான் மிஸ்ஸிங்காகிவிட்டது. சுனாமி வரும்போது.. வரும் சூழலை எதிர்கொள்ள வைக்கும் பின்னணி இசையை எதிர்பார்த்து காத்திருந்தோம். அதற்குள்ளாக சுனாமியே வந்துவிட்டது. பின்பு இசை வந்ததும் தெரியவில்லை.. போனதும் தெரியவில்லை.
படத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியது படத்தின் பல இடங்களில் கிறிஸ்துவம் சம்பந்தப்பட்ட பெயர்களும், படங்களும் அதிகமாக வலம் வந்திருப்பதுதான். வருடம் முழுக்க வரும் 99 சதவிகித படங்களின் கேரக்டர்களுக்கு இந்து மதத்தின் பெயர்களே அடையாளமாக வரும்போது, ஒரேயொரு படத்தில் கிறிஸ்துவ மதத்தின் பெயர்கள் இடம் பெற்றால் எதுவும் குறைந்துவிடாது. இன்னும் சொல்லப் போனால் இது போதாதுதான்.. பிரபு சாலமனின் கடவுள் பற்று மற்றவர்களின் கடவுள் பக்திக்கு இணையானதுதானே..? நாம் யார் அதைக் கேள்வி கேட்க..?
படத்தின் இறுதியில் தமிழகமே.. இந்தியாவே.. தெற்காசியாவே, ஏன் உலகமே பார்த்து பதைபதைத்துப் போன சுனாமியை கண் முன் கொண்டு வந்துவிட்டு.. அதற்குள்ளாக காதலையும், காதலர்களையும் காட்டியதில் அந்த பிரமாண்ட சுனாமிக்கு முன்பு காதல் காணாமல் போய்விட்டது என்பதையும், காதலர்களின் சேர்தல் படம் பார்த்த ரசிகனின் மனதில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதும்தான் இயக்குநர் பிரபு சாலமனே எதிர்பார்க்காத முடிவு..!
‘மைனா’ அளவுக்கு ‘கும்கி’ இல்லையென்றார்கள். ஆனால் ‘கும்கி’க்கும் மேலாக ‘கயல்’ இடம் பிடித்திருக்கிறது பிரபு சாலமனின் இயக்க வரலாற்றில்..!
கயல் படக் குழுவினருக்கு எமது பாராட்டுக்களும், வாழ்த்துகளும்..!