full screen background image

‘சமைஞ்சது எப்படி’ பாடலுக்காக கவிஞர் வாலியிடம் கண்டனம் தெரிவித்த கவிஞர் பிறைசூடன்

‘சமைஞ்சது எப்படி’ பாடலுக்காக கவிஞர் வாலியிடம் கண்டனம் தெரிவித்த கவிஞர் பிறைசூடன்

‘கவியரசு’ கண்ணதாசனுக்குப் பிறகு தமிழ்த் திரையுலகத்தில் மாபெரும் பாடலாசிரியராகவும், கவிஞராகவும் போற்றப்பட்டவர் வித்தகக் கவிஞரான வாலி.

1994-ம் ஆண்டு பிரபுதேவா, ரோஜா நடிப்பில் வெளியான ‘இந்து’ என்ற திரைப்படத்தில் ‘எப்படி எப்படி சமைஞ்சது எப்படி’ என்ற பாடலை கவிஞர் வாலி எழுதியிருந்தார். இது அன்றைக்கே தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இவ்வளவு புகழ் வாய்ந்த வாலி இப்படியெழுதலாமா என்று கேட்டு அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந்த நேரத்தில் இது தொடர்பாக வாலியிடம் தானும் கேள்வி கேட்ட சம்பவத்தைச் ‘சாய் வித் சித்ரா’ பேட்டியில் சொல்லியிருக்கிறார் கவிஞர் பிறைசூடன்.

இது பற்றி அவர் சொல்லும்போது, “நான் ஒரு நாள் தேவாவின் ரிக்கார்டிங் ஸ்டூடியோவில் அமர்ந்து பாடல் எழுதிக் கொண்டிருந்தேன். அப்போது அங்கே வாலி வந்தார். அவர் எப்போதும் என்னை ‘வோய்’ என்றுதான் அழைப்பார். அப்போதும் ‘வோய்’ என்றுதான் கூப்பிட்டார்.

“என்ன வோய்.. ஊரே என்னைப் பத்திப் பேசிக்கிட்டிருக்கு..? நீர் ஒண்ணுமே சொல்ல மாட்டேன்றீர்..” என்றார். நான் பாடலை எழுதிக் கொண்டே “என்ன ஸார் விஷயம்..?” என்றேன். “அதான் சமைஞ்சது எப்படி பாட்டு எழுதினதுக்கு என்னை எல்லாரும் கழுவி ஊத்திட்டு இருக்காளே…” என்றார்.

எனக்குள்ளும் அந்தக் கோபம் இருந்தது. பட்டென்று தலையைத் தூக்கி, “உங்களுக்கு பொம்பளை புள்ளை இருக்கா ஸார்…?” என்று கேட்டேன். அவர் ஒரு கணம் ஸ்தம்பித்துவிட்டார். “வயித்துக்குப் பாட்டெழுதுற நான் எழுதினால்கூட பரவாயில்லை. பெருமைக்குப் பாட்டெழுதுற நீங்கபோய் இதை எழுதலாமா..?” என்று நறுக்கென்று கேட்டுவிட்டேன்.

வாலி எதுவுமே பேசவில்லை. அப்படியே அமர்ந்திருந்தார். நானும் என் பாடலை எழுதிக் கொண்டேயிருந்தேன். திடீரென்று வாலி எழுந்து வெளியேறிவிட்டார். நானும் அவர் போன பிறகு சில நிமிடங்கள் கழித்து தேவாவிடம் பாடலை ஒப்படைத்துவிட்டு ஸ்டூடியோவைவிட்டு கீழே இறங்கி வந்தேன்.

சாலையில் தன்னுடைய காரில் சாய்ந்து நின்றபடியே இருந்தார் வாலி. நான் அவரைப் பார்த்தும் பார்க்காததுபோல போனபோது, “வொய்..” என்று அழைத்தார் வாலி.

நான் அவரருகில் போய் “என்ன ஸார்..?” என்றேன். என்னை அருகில் அழைத்து இறுக அணைத்து என் நெற்றியில் முத்தமிட்டு, “உன் கருத்தை பளிச்சின்னு சொல்லிட்ட பாரு. இதுதான் எனக்குப் பிடிச்சது..” என்றார்.

வாலி என்னைவிடமும் நான் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கான ஒரு மிகப் பெரிய கவிஞர். ஆனால் உள்ளத்தில் குழந்தை மாதிரி. சூதும், வாதுமாக எதுவுமே அவருக்குப் பேசத் தெரியாது. அவருடன் பழகிய நாட்களில் இந்தச் சம்பவம் எனக்கு இன்றைக்கும் மறக்க முடியாதது..” என்று சொல்லியிருக்கிறார் கவிஞர் பிறைசூடன்.

Our Score