full screen background image

சிபிராஜின்  ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம்

சிபிராஜின்  ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம்

தமிழ் சினிமாவில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்திய திரைப்படம், சிபிராஜ் நடித்த ‘நாய்கள் ஜாக்கிரதை’.

தன்னுடைய மாறுபட்ட கதையம்சத்தினாலும், எதார்த்தமான நடிப்பாலும் மக்களின் மனதில் வேரூன்றி நின்றுவிட்ட சிபிராஜ், சமீபத்தில் வெளியான ‘போக்கிரி ராஜா’ திரைப்படத்தில் நிஜ வாழ்க்கை வில்லனாகவே தோன்றி, ரசிகர்களின் கைத்தட்டல்களை சிபிராஜ் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மீண்டும் இவர் வித்தியாசமான ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளார். புகழ் பெற்ற ‘பாகுபலி’ திரைப்படத்தில் சத்யராஜின் கேரக்டர் பெயர் ‘கட்டப்பா’. இந்தப் பெயரை வைத்து ‘கட்டப்பாவ காணோம்’ என்கிற வித்தியாசமான தலைப்புடைய படத்தில்தான் சிபிராஜ் அடுத்து நடிக்கப் போகிறார்.

இந்தப் படத்தை இயக்குநர் அறிவழகனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்ட மணி செய்யோன் இயக்க, விண்ட் சைம்ஸ் மீடியா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

சிபிராஜ் – ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்க சாந்தினி, காலி வெங்கட், யோகி பாபு, மைம் கோபி, லிவிங்க்ஸ்டன், திருமுருகன், ஜெயகுமார் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

சந்தோஷ் தயாநிதி(இனிமே இப்படித்தான்) இசையிலும், ஆனந்த் ஜீவா(நவீன சரஸ்வதி சபதம்) ஒளிப்பதிவிலும் உருவாகும் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படத்திற்கு படத் தொகுப்பாளராக (இறுதி சுற்று) சதீஷ் சூர்யாவும், கலை இயக்குனராக  லட்சுமி தேவும் பணியாற்றுகின்றனர்.

அது மட்டுமின்றி சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று துடிக்கும் இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கும் நலன் குமாரசாமி, இந்த  ‘கட்டப்பாவ காணோம்’  படத்தில் சிறப்பு கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படி ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் ஒரு ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை மையமாக கொண்டு கதை நகர்ந்ததோ, அதே போல்  ‘கட்டப்பாவ காணோம்’ படத்திலும் ஒரு செல்ல பிராணிதான் படத்தின் கதைக்கு ஆணி வேறாக அமைந்திருக்கிறது. ஆனால் அது நாயோ, பூனையா இல்லை. மாறாக ஒரு மீன் என்பதுதான் செய்தி.

“எனது பள்ளி பருவத்தில் இருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஒரு செல்ல பிராணி மீன்தான். என்னுடைய ஓய்வு நேரத்தை அவைகளுடன் கழிப்பதுதான் எனக்கு பொழுதுபோக்காக இருந்து வந்தது. நாயை போலவே அவைகளுக்கும் மனிதர்களை அடையாளம் கண்டு கொள்ளும் சக்தியும், அவர்களை நன்கு உணர்ந்து கொள்ளும் ஆற்றலும் இருக்கிறது. அவைகளை ஹீரோவாக மக்களுக்கு காட்ட வேண்டும் என்று நான் எடுத்த முயற்சிதான்  இந்த  ‘கட்டப்பாவ காணோம்’.

எப்படி சிபிராஜின் தந்தை சத்யராஜ் சாருக்கு ‘பூவிழி வாசலிலே’ மற்றும் ‘என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு’ திரைப்படங்கள் அமைந்ததோ, அதே போல்  ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் சிபிராஜுக்கு சிறந்ததொரு  மைல் கல்லாக அமையும்…” என்கிறார் படத்தின் இயக்குநரான மணி செய்யோன்.

ஹாலிவுட்டிலும் சரி நமது தமிழ் சினிமாவிலும் சரி. செல்ல பிராணிகளை வைத்து எடுத்த படங்கள் அனைத்தும் மாபெரும் வெற்றியை கண்டவைதான்.

நாய்களையும், பூனைகளையும் தாண்டி மீனை முக்கிய கதாப்பாத்திரமாக வைத்து உருவான படம்தான்   ஃபைண்டிங் நீமோ. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்து, ஹாலிவுட்டில் சக்கைபோடு போட்ட படம் நீமோ.

அந்த வரிசையில் தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக மீனை கதை கருவாக வைத்து உருவாகி கொண்டிருக்கும் இந்த ‘கட்டப்பாவ காணோம்’ திரைப்படம் அடுத்த  ஃபைண்டிங் நீமோவாக உருவெடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Our Score