”இன்றைய தலைமுறைக்குத் தேவையான நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம். அதனால்தான் ‘காந்தி ஜெயந்தி’யை முன்னிட்டு ‘கத்துக்குட்டி’ படத்தை வெளியிடுகிறோமே தவிர, ‘புலி’ படத்துடன் மோதும் நோக்கம் இல்லை…!” என சமீபத்தில் நடந்த பிரஸ்மீட்டில் ‘கத்துக்குட்டி’ படக் குழுவினர் தெரிவித்தனர்.
ஆனால், “உண்மை அதுவல்ல. வேண்டுமென்றே திட்டமிட்டுத்தான் ‘புலி’யுடன் மோதுகிறது ‘கத்துக்குட்டி’..” என்கிற தகவல் தற்போது கசிந்திருக்கிறது. காரணம், ‘கத்துக்குட்டி’ படத்தில் ஹீரோவான நரேன் ‘தல’ அஜீத்குமாரின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறாராம்.
அஜீத்குமார் நடித்த படங்களை விரும்பிப் பார்க்கும் தீவிர ரசிகராகவும் அஜீத் திரையில் பேசிய வசனங்களைச் சொல்லி அசத்துபவராகவும் நடித்திருக்கிறார் நரேன். படத்தின் ஆரம்பத்திலும் அஜீத்குமார் பெயருடனேயே கிராமியக் காட்சிகள் ஆரம்பிப்பதாகவும் உறுதியான தகவல்கள் சொல்கின்றன.
குறிப்பாக ‘வீரம்’ படத்தில் விவசாயத்துக்கும், கூலித் தொழிலாளர்களுக்கும் ஆதரவாக அஜீத் பேசுகிற வசனங்கள் ‘கத்துக்குட்டி’ படத்தின் திருப்புமுனை காட்சியாக அமைந்திருக்கின்றன.
‘ருத்ரமா தேவி’, ‘மாப்ள சிங்கம்’ உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் படங்களே ‘புலி’க்கு எதிராகப் போட்டியில் குதிக்காத நிலையில், கத்துக்குட்டியான இந்த ‘கத்துக்குட்டி’ படம் எப்படி தைரியமாகக் களமிறங்கியது என்கிற கேள்வி பலமாக அலையடித்தது.
அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளையும், வசனங்களையும் படத்தில் முன்னிறுத்தி இருப்பதாலேயே திட்டமிட்டு ‘புலி’ படத்துடன் ‘கத்துக்குட்டி’ களமிறக்கப்படுகிறது என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
‘புலி’யை எதிர்த்து தில்லுடன் களமிறங்கியிருக்கும் ‘கத்துக்குட்டி’ டீமின் நெஞ்சுரத்தை பாராட்டியே தீர வேண்டும்..