இப்படியொரு செய்தியும் இன்று காலை முதல் கோடம்பாக்கத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.
இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடிக்க இருக்கிறாராம் சிவகார்த்திகேயன். பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, ஐ பட மேக்கப்மேன் எனப் பெரிய பட்டாளத்தை இந்தப் படத்தில் களமிறக்கும் தயாரிப்பாளர் தரப்பு, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என பயங்கர தேடுதல் வேட்டை நடத்தி வந்திருக்கிறது.
சென்னை தொடங்கி மும்பைவரை ஹீரோயின் தேடி அலைந்த தயாரிப்பு தரப்பு அலியா பட் உள்ளிட்ட முன்னணி பாலிவுட் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்திப் பார்த்தது. ஆனாலும், அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் போனதால் மறுபடியும் கோடம்பாக்கத்திற்கே வந்து இங்கே இப்போது யார் டாப்பான நடிகை என்று அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
பி.சி.ஸ்ரீராம் கமலஹாசனின் மகள் ஸ்ருதியின் பெயரைச் சொல்ல, சிவகார்த்திகேயனும் அதற்கு சம்மதம் தெரிவித்தாராம். ஸ்ருதிக்கு மேக்கப் டெஸ்ட் எடுத்துப் பார்க்கப்பட்டு அட்வான்ஸ் உள்ளிட்ட விஷயங்களையும் அவரிடத்தில் பேசிய நிலையில்தான் மதுரையில் சிவகார்த்திகேயன் மீது கமல் ரசிகர்கள் தாக்குதல் நடத்தி சம்பவம் நடந்தது.
அதனால், ஸ்ருதிக்கு மாற்றாக வேறு நடிகையை சிவகார்த்திகேயன் முடிவு செய்யப் போவதாக பீதியுடன் ஒரு செய்தி கிளம்பியது. ஆனால், அந்த மதுரை மோதல் சம்பவத்தைப் பெரிதுபடுத்தாமல் ஸ்ருதிதான் எனக்கு ஜோடி என உறுதியாகச் சொல்லிவிட்டாராம் சிவா.
விரைவில் படப்பிடிப்பைத் தொடங்க இருக்கிறது சிவா டீம்!