full screen background image

கருமேகங்கள் கலைகின்றன – சினிமா விமர்சனம்

கருமேகங்கள் கலைகின்றன – சினிமா விமர்சனம்

வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில், தயாரிப்பாளர் வீரசக்தி இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

இதில் பாரதிராஜா, கவுதம் மேனன், யோகிபாபு, அதிதி பாலன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஆர்.வி.உதயகுமார், டெல்லி கணேஷ், பிரமிட் நடராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

நியாயமான நீதீமானாக இருந்து பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் நீதியரசர் ராமநாதன். இவரது மகன் கோமகன். புகழ் பெற்ற கிரிமினல் வக்கீல். அப்பாவுக்கு நேரெதிர்.

ஒரு வழக்கில் அரசியல் புள்ளியான பிரமிட் நடராஜனுக்குக் தண்டனை கொடுக்கிறார் ராமநாதன். ஆனால் அதை மேல் கோர்ட்டில் அப்பீல் செய்து வழக்கை உடைத்து பிரமிட் நட்ராஜனை காப்பாற்றுகிறார் கோமகன். இதனால் மன வேதனைப்படும் ராமநாதன், ஒரே வீட்டில் இருந்தாலும் கோமகனுடன் பேசுவதில்லை.

வருடங்கள் பல ஓடிய நிலையில் ராமநாதனின் 75-வது பிறந்த தின கொண்டாட்டத்தன்று கோமகன் வெளியூர் போக வேண்டிய கட்டாயம். அதே நாளில் ராமநாதனுக்கு வரும் ஒரு கடிதம் அவர் சின்ன வயதில் செய்த ஒரு தவறின் விளைவையும், தற்போதைய நிலைமையையும் சொல்கிறது.

அதிர்ச்சியும், பதட்டமும் அடையும் ராமநாதன் அந்தக் கடிதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டாரிடம்கூட சொல்லாமல் மானாமதுரைக்கு வண்டியேறுகிறார்.

இன்னொரு பக்கம் தான் அடைக்கலம் கொடுத்து காப்பாற்றியிருந்த குழந்தை மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் யோகிபாபு, அந்தக் குழந்தையைக் கடத்திக் கொண்டு செல்கிறார்.

ராமேஸ்வரத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த அதிதி பாலன், போலி என்கவுண்ட்டர் செய்தது உறுதியாகி சிறை தண்டனை பெற்று தண்டனையையும் அனுபவித்துவிட்டு வந்து தற்போது சமூக சேவை செய்து வருகிறார்.

இவர்கள் மூவரையும் காலம் ஒரு புள்ளியில் இணைத்துப் பார்க்கிறது. இவர்கள் மூவருக்குமான தொடர்பு என்ன..? ராமநாதனுக்கு வந்த கடிதத்தில் இருந்த செய்தி என்ன..? என்பதுதான் இந்த ‘கருமேகங்கள் கலைகின்றன’ படத்தின் கதைச் சுருக்கம்.

இயக்குநர் தங்கர்பச்சான் பல ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய ‘கருமேகங்கள் ஏன் கலைகின்றன’ என்ற சிறுகதையின் திரை வடிவம்தான் இத்திரைப்படம்.

ஓய்வு பெற்ற நீதிபதியான ‘ராமநாதன்’ என்ற கதாபாத்திரத்திற்கு பாரதிராஜா சாலப் பொருத்தம். அவருடைய தற்போதைய உடல் தோற்றமும் இந்தக் கதாப்பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது.

மகனுடன் கோபத்தில் பேசாமல் இருந்தாலும் மகன் மீது அவர் வைத்திருக்கும் பாசமும், குடும்பத்தினர், நண்பர்கள் மீது வைத்திருக்கும் மரியாதையையும் அவர் காட்டும்விதம் இயல்பானது.

தான் செய்த குற்றத்தினால் விளைந்த விபரீதங்களை நினைத்து.. கடிதம் எழுதியவரைத் தேடி அவர் ஊர், ஊராக அலையும் காட்சிகளில் ஒரு பரிதாப உணர்வைக் காட்டுகிறார் பாரதிராஜா.

முதலில் அதிதியை பார்க்க முடியாமல் தவித்து ஓடி ஒளியும் அந்த நடிப்பும், கடைசியில் அதிதி பாலனின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும் காட்சியிலும் ஐயோ பாவம் என்ற உணர்வை நம்மிடமிருந்து வரவழைத்துவிட்டார் பாரதிராஜா. 

படிக்காத மேதையாக இருக்கும் ‘புரோட்டா மாஸ்டர்’ வீரமணி என்ற தனது கதாபாத்திரத்தில் யோகிபாபு வாழ்ந்திருக்கிறார். தன்னை நாடி வந்த பெண்ணுக்கு அடைக்கலம் கொடுத்து காப்பாற்றி வைத்திருந்து அவளுக்கு வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கும்போது சபாஷ் போட வைக்கிறது அவரது நடிப்பு.

குழந்தையை பிரிய முடியாமல் தவிக்கும் காட்சிகளில் தனி கவனம் செலுத்தி நடித்து தனது குணச்சித்திர நடிப்பை குறையில்லாமல் கொடுத்திருக்கிறார் யோகி. மற்றபடி படத்தில் பல இடங்களில் ஒன் லைன் காமெடியையும் செய்திருக்கிறார் யோகி.

ஒரு பெண்ணாக தன் மனதுக்கு சரியென்று பட்டதை சமூக நோக்கத்திற்காக செய்துவிட்டு, அதற்காக சிறை தண்டனையையும் அனுபவித்துவிட்டு தற்போது சமூக சேவை செய்யும் ஒரு பெண்ணாக அதிதி பாலன் ஜமாய்த்திருக்கிறார். இளம் வயது இன்ஸ்பெக்டரைவிடவும், நடுத்தர வயது அதிதி பாலன் அழகோ அழகு.

இறுதிக் காட்சியில் இவருக்கும், பாரதிராஜாவுக்கும் இடையில் நடக்கும் உணர்ச்சிப் போராட்டம் சிறப்பு. குத்தூசியான வசனங்கள் மூலமாக அதில் இருக்கும் ருசிகரமான டுவிஸ்ட் நிச்சயமாக பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைக்கும்.

மகனாக நடித்திருக்கும் இயக்குநர் கௌதம் மேனன் தனது அளவான, சிறப்பான, துடிப்பான நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அப்பாவுடன் ஒரு வார்த்தை பேச நினைத்து அவர் நிற்குமிடத்தில் “அட.. பேசித்தான் தொலையேம்பா..” என்று நம்மையும் சொல்ல வைத்திருக்கிறார். அப்பாவைத் தேடி அலையும்போதும், தன் மீதான தவறுகளை நினைத்து வருந்தும்போதும் ஒரு மகனாக நம் கண் முன்னே தெரிகிறார் கெளதம் மேனன்.

பாரதிராஜாவின் தோஸ்த்துகளாக டெல்லி கணேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர் இருவரின் கேரக்டர் ஸ்கெட்ச்சும் ஓகே, குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கும் சிறுமியும் நம் மனம் கவர்கிறார்.

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு படம் நெடிகிலும் கண்களுக்கு குளிர்ச்சியைத்தான் தந்திருக்கிறது. ராமேஸ்வரம் காட்சிகளின் விஸ்தாரம் படத்தையும் ரசிக்க வைக்கிறது.

ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு. பாடல்கள் அனைத்துமே கேட்கும் ரகமாக இருப்பது தனி சிறப்பு. ‘மன்னிக்க சொன்னேன்’ பாடல் வரிகள் மிக எளிமையாக நம் காதில் விழுந்து கதையைச் சொல்கிறது.

சிறு வயதில் ஒரு வேகத்தில் செய்துவிடும் சில தவறுகளை அப்போதே சரி செய்யாவிடில் அது மீள முடியாத வேதனையையும், சோகத்தையும் முதிர்ந்த வயதில் நமக்குத் திருப்பிக் கொடுக்கும் என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார் கதாசிரியர் தங்கர்பச்சான்.

மனித உணர்வுகளின் அளப்பரிய வேகத்தையும், வீரியத்தையும் அழகியலாக இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் தங்கர்பச்சான். மனிதர்கள் சக மனிதர்களுக்கு செய்யும் மிகப் பெரிய உதவியே அவரால் அடைந்த துன்பங்களுக்காக அவரை மன்னிப்பதுதான் என்ற உயர்ந்த நெறியை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார் தங்கர்பச்சான்.

தொடர்ந்து சமூகத்திற்குத் தேவையான விஷயங்களையே முன்னிறுத்தி தமிழ்த் திரையுலகத்தில் தனித்துவமாய் இயங்கி வரும் இயக்குநர் தங்கர்பச்சானுக்கு மட்டுமல்ல.. தமிழ் சினிமாவுக்கும் பெருமைமிக்க படமாக அமைந்துள்ளது இந்தக் கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படம்.

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்! மிஸ் பண்ணிராதீங்க..!!

RATING : 3.5 / 5

Our Score