அடுத்த மாதத்தில் தனிக் கட்சித் துவங்கப் போவதாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அறிவித்திருந்தாலும் இன்னமும் பல பேர் இதையும் சந்தேகமாகவே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயக்குநரும், நடிகருமான கரு.பழனியப்பன் தன் பங்குக்கு ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று சொல்லியே காலம் கடத்தியதை கண்டித்திருக்கிறார்.
இது குறித்து கரு.பழனியப்பன் பேசும்போது, “நான் ரஜினியை அரசியலுக்கு வர வேண்டாம்ன்னு சொல்லலை. வாங்க.. ஆனால் சீக்கிரமா வாங்க.. ‘சொல்லிட்டே இருக்காதீங்க’ன்னுதான் சொல்றேன்.

கமல் திடீர்ன்னு அரசியலுக்கு வரப் போவதாகச் சொன்னார். சொன்னது போலவே உடனேயே கட்சியை ஆரம்பித்துவிட்டார். ஆரம்பித்த வேகத்தில் ஒரு தேர்தலிலும் நின்று காட்டிவிட்டார். ரஜினியும் இது மாதிரி எப்பவோ செய்திருக்கலாமே..
எதுக்கு வர்றேன்.. வர்றேன்னு.. சொல்லி இழுத்துக்கிட்டேயிருக்கணும். மக்கள் எல்லாரும் சிரிக்கிறாங்க.. இந்தப் படம் ஓடி முடிஞ்சிருச்சுப்பான்னு கிண்டல் செய்றாங்க.. ரஜினிக்கு இது தேவையா..
திரைப்படத்தில் நடிப்பதைவிடவும் அரசியலுக்கு நிறைய உடல் உழைப்பு தேவை. 24 மணி நேரமும் உழைக்கணும். இப்போது அவரது ரசிகர்களுக்கும் அவரது வயது இல்லைன்னா அவரைவிட பத்து வயது குறைவா இருக்கும்.
சட்டமன்றத் தேர்தல் சித்திரை மாதம்.. மொட்டை வெயில்ல நடக்கப் போகுது.. ஊர், ஊரா அலையணும்… அவங்களால முடியுமா.. எல்லாருமே 50 வயதைக் கடந்தவர்களாகத்தான் இருப்பார்கள். மற்றக் கட்சிகளின் தொண்டர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் இளைஞராக இருந்தபோதே இந்த தேர்தல் வேலைகளைப் பார்த்திருப்பார்கள். உடல் உழைப்பு செய்து அவர்களுக்கு அனுபவம் இருக்கும். 2 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலை சந்தித்து வருகிறார்கள். சமாளித்துவிடுவார்கள். ரஜினி ரசிகர்களால் இது முடியுமா..
இதனால்தான் சொல்றேன்.. ரஜினி முன்னாடியே வந்திருக்கணும். இப்போ வர்றது லேட்டுதான். ஆனாலும் இந்தத் தடவைதான் கடைசியா சொல்லியிருக்காருன்னு நம்புறேன். ரஜினி இப்போது கட்சியை ஆரம்பித்துவிட்டால் சந்தோஷம்தான்..” என்று சொல்லியிருக்கிறார்.