கொரோனா இரண்டாவது பரவலைத் தடுக்கும் பொருட்டு இன்று காலை மீண்டும் புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.
அதில் தியேட்டர்களில் 50 சதவிகிதம்தான் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால் நாளை வெளியாகும் திரைப்படங்களுக்கு நிச்சயமாக பெரும் பாதிப்பு ஏற்படும் என்று தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘கர்ணன்’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
இந்த 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அரசின் விதிமுறையால் ‘கர்ணன்’ திரைப்படம் பாதிக்கப்படுமே என்னும் சந்தேகம் திரையுலகத்தினருக்கு எழுந்தது.
காரணம் ‘கர்ணன்’ மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் ஒரு படம். தியேட்டரிலேயே 50 சதவிகிதம்தான் அனுமதி என்றால் இப்போதைய நிலவரப்படி அந்தப் படம் அனைத்துத் தியேட்டர்களிலும் 30 நாட்கள் தொடர்ந்து ஓடினால்தான் வெற்றிக் கிட்டும் என்ற சூழல் உலவுகிறது.
ஆனால், படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு சற்று நேரத்திற்கு முன்பாக வெளியிட்ட டிவீட்டர் செய்தியில், “கர்ணன்’ திட்டமிட்டபடி வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், “சொன்னது சொன்னபடி ‘கர்ணன்’ திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், #Karnan திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்…” என்று தெரிவித்துள்ளார்.