‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம் 

‘கன்னி மாடம்’ – சினிமா விமர்சனம் 

ரூபி பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஹஷீர் இப்படத்தை தயாரித்துள்ளார்.

ஸ்ரீராம் மற்றும் காயத்ரி இருவரும் இப்படத்தின் மூலம் நாயகன், நாயகியாக அறிமுகமாகிறார்கள். மேலும் இப்படத்தில் ‘ஆடுகளம்’ முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்சஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹரிஷ் J.இனியன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ரிஷல் ஜெய்னி படத் தொகுப்பு செய்துள்ளார். ஹரிஷ் சாய் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கலை இயக்கத்தை சிவ ஷங்கர் செய்துள்ளார். விவேகா பாடல்களை எழுதியுள்ளார். ரோபோ ஷங்கர் மற்றும் அந்தோணி தாசன் இருவரும் இப்படத்தில் பாடல்கள் பாடியிருப்பது இப்படத்தின் கூடுதல் சிறப்பு. தினேஷ் சுப்புராயன் சண்டை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

பிரபல நடிகர் போஸ் வெங்கட் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார். இது இவரது முதல் திரைப்படமாகும். நேரம் : 2 மணி 12 நிமிடங்கள்.

மதுரை அருகேயிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலர் மற்றும் கதிர் என்ற காதலர்கள். இதில் மலர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். கதிர் உயர் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜாதியால் இவர்களது காதலில் பிரச்சினை உண்டாகிறது.

மலரின் குடும்பத்தினரை தீ வைத்துக் கொளுத்தப் பார்க்கிறார் கதிரின் அப்பா. இதைப் பார்த்து பயந்துபோன மலரும், கதிரும் ஊரிலேயே ரகசியத் திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு சென்னைக்கு ஓடி வருகிறார்கள்.

வந்தவர்கள் சூளைமேடு அருகே ஒரு ஒண்டிக்குடித்தன வீட்டில் குடியேறுகிறார்கள். இவர்களுக்குப் பக்கத்து வீட்டில் ஆட்டோ ஓட்டுநர்களான ஸ்ரீராமும், ஆடுகளம் முருகதாஸும் இருக்கிறார்கள். ஸ்ரீராமின் ஆட்டோவில்தான் கதிரும், மலரும் சூளைமேட்டுக்கு வந்து சேர்ந்தார்கள் என்பதால் இருவருக்குள்ளும் பழக்கம் ஏற்படுகிறது.

இதே நேரம் கதிரின் தாய் மாமன் தனது ஆட்களுடன் சென்னைக்கு வந்து காதலர்களைத் தேடுகிறார். கிடைத்தால் படுகொலை செய்யவும் தயங்காமல் காத்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து ஸ்ரீராம் இவர்களைக் காப்பாற்றுகிறார்.

ஸ்ரீராமை ஆட்டோ ஓட்டும் வலீனா பிரின்சஸ் ஒருதலையாய் காதலிக்கிறார். அந்தக் காதலை உணர்ந்தாலும் ஸ்ரீராமுக்கு அதில் விருப்பமில்லாமல் இருக்கிறது.

இந்த நேரத்தில் திடீரென்று ஒரு விபத்தில் கதிர் இறந்துபோய்விட.. மலர் தனித்துவிடப்படுகிறாள். மலரைக் காப்பாற்ற வேண்டி அவளைத் தனது மனைவி என்று சொல்லி ஒரு வீட்டில் குடி வைக்கிறான் ஸ்ரீராம்.

இந்த நேரத்தில் இரட்டைக் கொலைகளைச் செய்தமைக்காக சிறையில் இருக்கும் ஸ்ரீராமின் அப்பாவான கஜராஜ் பரோலில் வெளியில் வருகிறார். வந்தவர் ஸ்ரீராமின் வீட்டுக்கு வர.. அப்போது அதே வீட்டில் தன் மகன் ஸ்ரீராமின் மனைவியாய் மலர் வாழ்ந்து வருவதை அறிகிறார். இதைத் தொடர்ந்து அந்த வீட்டில் ஒரு விபரீதம் நடைபெறகிறது.. அது என்ன என்பதும்.. கடைசியில் மலரின் கதி என்னவாகிறது என்பதும்தான் இந்தப் படத்தின் சுவையான திரைக்கதை.

தனது முதல் படத்திலேயே இப்படியொரு சமூக சிந்தனையோட்டத்துடன் கூடிய கதையைத் தேர்வு செய்திருக்கும் இயக்குநர் போஸ் வெங்கட்டை மனதாரப் பாராட்டுகிறோம்.

அதேபோல் ஒரு புதுமுக இயக்குநரால் இப்படியொரு சென்சிட்டிவ் மேட்டரை திரைப்படமாக உருவாக்க முடியுமா என்கிற சந்தேகமே இல்லாமல் அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் ஹஸீருக்கும் நமது பாராட்டுக்கள்.

படத்தில் நடித்த நடிகர், நடிகையர்கள் அனைவரும் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு புதுமுக இயக்குநரின் இயக்கத்தில் சிறிய பிசிறு கூட இல்லாமல் நடிப்பதென்பது மிகப் பெரிய விஷயம். அந்தச் சாதனையை தனது முதல் படத்திலேயே சிறந்த இயக்குநர் என்னும் பெயரை தமிழ்ச் சினிமாவில் வலிமையாகப் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் போஸ் வெங்கட்.

இந்தப் படத்தில் நடிகையாக அறிமுகமாகியிருக்கும் சாயா தேவிக்கு நமது முதல் பாராட்டுக்கள். புதுமுக நடிகை என்பதே தெரியாத அளவுக்கு தனது உடல் மொழியாலும், நடிப்பாலும் கவர்ந்திழுத்திருக்கிறார். அவருடைய கேமிராவுக்கேற்ற முகத்தை அத்தனை அழகாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

“பசிக்குதுடா கதிரு…” என்று பாதி அழுகையும், பாதி கேவலுமாக அவர் சொல்லும் காட்சியில் தியேட்டரே அமைதியாகிறது. அந்த ஒரு நொடி அமைதிதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முதல் படி. இதற்கடுத்து சாயா தேவி என்ன பேசினாலும், அழுதாலும் அது ரசிகர்களையும் பாதிக்கவே செய்திருக்கிறது.

பல காட்சிகளில் கதையுடன் ஒன்றிப் போய் நடித்திருக்கிறார் சாயா தேவி. மருத்துவமனையில் அவர் கதறுகின்ற கதறல் பலருக்கும் கண்ணீரை வரவழைத்துவிட்டது. பொதுவாக இது போன்ற எமோஷனல் காட்சிகளில் வலுக்கட்டாயமாக சோகத்தைத் திணிப்பார்கள். ஆனால் இந்தப் படத்தில் அத்தனையும் நிஜமாகவே தெரிந்தன. சிறந்த புதுமுக நடிகைக்கான விருது நிச்சயமாக மலர் என்னும் இந்த சாயா தேவிக்குத்தான். வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

கதிராக நடித்திருக்கும் விஷ்ணு.. அந்த வயதுக்கேற்ற காதலனாக.. சீரியஸ் தெரியாத கணவனாக.. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாத அப்பாவியாக நடித்திருக்கிறார். பாராட்டுக்கள்..!

ஸ்ரீராம்தான் படத்தின் தூணாக இருந்து திரைக்கதையை நகர்த்துகிறார். இவருக்கும் ஒரு பிளாஷ்பேக் கதை இருக்கிறது. அந்தக் கதையும் மலர்-கதிர் கதை போலவே அமைந்துவிடவே.. அந்தச் சோகம் மற்றவர்களுக்கும் நடக்கக் கூடாது என்று ஸ்ரீராம் நினைக்கும் அந்தத் தருணமே இந்தப் படத்தின் டர்னிங் பாயிண்ட்.

சிதைந்து போயிருக்கும் தனது குடும்பத்திற்காக ஆட்டோ ஓட்டி பாரத்தைச் சுமக்கும் அந்த வலியை பெரிதாக சுமந்திருக்கிறார் ஸ்ரீராம். வீட்டு ஓனரம்மாவின் மிரட்டல்.. அரட்டலுக்கெல்லாம் பயந்து போய் அவர் காட்டும் நடிப்புகளில் எல்லாம் போலித்தனமில்லை. அசலாகவே தெரிகிறார் ஸ்ரீராம்.

கிளைமாக்ஸ் காட்சியில் அவர் இதைத்தான் செய்யப் போகிறார் என்பதை அவருடைய அப்பாவின் வருகையே லேசுபாசாக உணர்த்துகிறது. ஆனால் அது இத்தனை அழுத்தமாய் நம் மனசை அழுத்தும் என்று எதிர்பார்க்கவில்லை. மிகச் சிறந்த இயக்கமே இதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.

வீட்டு ஓனரம்மாவாக நடித்திருக்கும் பிரியங்கா தமிழுக்கு புது வரவு. உருவத்தை வைத்து எடை போடக் கூடாது என்பதுபோல் அவருடைய கேரக்டர் ஸ்கெட்ச் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படத்தின் இடைவேளையில் இவரும் முருகதாஸூம் போடும் சண்டைகளே கொஞ்சம் நகைச்சுவையைக் கூட்டுகின்றன.

ஸ்ரீராமின் அப்பாவாக நடித்திருக்கும் கஜராஜின் சாதி வெறி நடிப்பும், குடும்பப் பாசத்திற்கான நடிப்பும் வெகு இயல்பு. எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட சாதி என்றவுடன் பெண் தர மறுத்து ஆத்திரப்படும் காட்சியில் ஒரு சாதி வெறியரே நம் கண்களில் தெரிகிறார். குடும்பப் பாசத்தில் சிக்கி ஜெயிலுக்குள் அவர் அழும் அழுகையினால் பாவமாகத் தெரிகிறார். இருந்தும் கிளைமாக்ஸில் தனது நிஜ குணத்தினால் அவர் செய்யும் கொடூரத்தினால் நமது ஒட்டு மொத்த வெறுப்பையும் சம்பாதித்துக் கொள்கிறார். இதில்தான் அவரது கேரக்டரின் வெற்றியே அடங்கியிருக்கிறது.

‘சூப்பர் குட்’ சுப்ரமணிக்கு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு செமத்தியான வேடம். மனிதர் பின்னியெடுத்திருக்கிறார். அதிலும் தங்கப்பதக்கம் படத்தில் சிவாஜி வேடத்தில் நடிக்க என்னைத்தான் முதல்ல கூப்பிட்டாங்க என்று எந்த சங்கோஜமும் இல்லாமல் அவர் சொல்லும் காட்சியில் தியேட்டரே அதிர்கிறது. அதேபோல் மலருக்கு நேரும் ஒரு துன்பத்தைப் பார்த்துவிட்டு மனம் திருந்து தனது பிள்ளைகளைப் பார்க்க கிளம்பும் காட்சி உருக்கத்தை அளிக்கிறது.

‘ஆடுகளம்’ முருகதாஸூக்கு பெயர் சொல்லும் அளவுக்கான ஒரு கேரக்டர் இந்தப் படத்தில் கிடைத்திருக்கிறது. இடையிடையே அவருடைய டைமிங்சென்ஸ் வசனங்களால் சிரிக்க முடிந்திருக்கிறது. இதேபோல் வலீனா பிரின்சஸின் வெற்றி பெறாத காதலும் அது தொடர்பான காட்சிகளும் கொஞ்சம் மனதை வருடுகிறது. வலீனாவின் திருமணக் காட்சியில் ஸ்ரீராம் பங்கெடுக்கும் காட்சிகள் மனதைத் தொடுகின்றன. திரைக்கதையாக்கம் இப்படியாக பல இடங்களில் அடடே போட வைத்திருக்கிறது.

ஹரீஷ் ஜெ.இனியனின் ஒளிப்பதிவில் இரவு நேரக் காட்சிகளின் குளுமையும், பகல் நேரங்களின் வெப்பத்தையும் உணர முடிகிறது. சென்னைக்கு ஒரு பின்னரவில் வந்து இறங்கும் அவர்களது வாழ்க்கை ஒரு பகலில் அநீதியாக முடிக்கப்படுவதுபோல காட்சிகளை அடுக்கடுக்காகக் கொண்டு போயிருக்கிறார்கள். ஒரு இரவு.. ஒரு பகல் என்று திட்டமிட்டு காட்சிகளை நகர்த்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. வீட்டுக்குள் நடக்கும் காட்சிகளை குறைவான இருட்டில் நிறைவாக படமாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். பாராட்டுக்கள்.

ஹரி சாயின் இசையில் ‘மூணு காலு வாகனமும்’, ‘ஓயாத மேகமும்’ ஹிட்டடித்திருக்கின்றன. இதில் ‘ஓயாத மேகம்’ பாடல், ‘இன்று நீ; நாளை நான்’ படத்தின் ‘பொன் வானம் பன்னீர் துாவும்’ மெட்டில் அமைந்திருப்பதால் சர்ச்சை கிளம்பியிருக்கிறது. எப்படியிருப்பினும் ஸ்வேதா மோகனின் குரலில் பாடல் மிக இனிமையாக வந்துள்ளது.

மிகக் குறைந்த நேரத்தில் தவிர்க்க முடியாத காட்சிகளுடன் படத் தொகுப்பாளருக்கு அதிக வேலை கொடுக்காமல் நச்சென்று முடியும்வண்ணம் படத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

கலை இயக்குநருக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டு. இது போன்ற திரைப்படங்களில் கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு ஆனால் திறமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உண்டு. இந்தப் படத்திலும் அவர்களின் பணி சிறப்பாகவே உள்ளது.

படத்தின் கிளைமாக்ஸ் பெரும்பாலானவர்களால் ஏற்க முடியாததுதான். ‘வன்முறைக்கு தீர்வு வன்முறையாகாது’ என்பது உண்மைதான் என்றாலும் இது ஒரு கதையாகச் சொல்லப்பட்டிருப்பதால் இப்படி நடந்த ஒரு கதையை இயக்குநர் அப்படியே எடுத்திருப்பதாக நாம் எடுத்துக் கொண்டால் நிச்சயமாக இத்திரைப்படம் ‘காதல்’ திரைப்படம் தந்த அதே உணர்வை நமக்கும் தரும்.

வரிசையாக சாதி வெறியைச் சாடி திரைப்படங்கள் வந்து கொண்டேயிருந்தாலும் சாதியக் கொடுமைகள் தமிழகத்தில் இன்னமும் நின்றபாடில்லை. அதற்காக நமது படைப்பாளிகள் தங்களது படைப்பை நிறுத்திவிடக் கூடாது. இது போன்ற குத்தூசிகள் தொடர்ந்து கொண்டே இருந்தால்தான் இந்தக் குத்தூசிகளையே தாங்க முடியாதவர்கள் தங்களது சாதிய அடையாளத்தை விட்டொழிப்பாளர்கள்.

புதுமுக இயக்குநராக இருந்தும் இப்படியொரு கதையை தைரியமாகக் கொடுக்க முன் வந்த இயக்குநர் போஸ் வெங்கட்டுக்கும், அவரது தயாரிப்பாளருக்கும் நமது மிகப் பெரிய சல்யூட்.

Our Score