ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் இத்திரைப்படத்தைத் தயாரித்து நாயகனாகவும் நடித்துள்ளார்.
இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், வடிவுக்கரசி, பூ ராமு, ஷாஜி, வசுந்த்ரா, சர்வன் சக்தி, தீப்பெட்டி கணேசன், அம்பானி சங்கர், ப்ரியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இசை – யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு – என்.கே.ஏகாம்பரம், கலை இயக்கம் – விஜய் தென்னரசு, படத் தொகுப்பு – காசி விஸ்வநாதன், பாடல்கள் – வைரமுத்து, ஒலிப்பதிவு – டி.உதயக்குமார், சண்டை இயக்கம் – விஜய் ஜாகுவார், ஸ்டில்ஸ் – சுரேந்தர், நடன இயக்கம் – ராதிகா, போஸ்டர் டிசைன்ஸ் – சிந்து கிராபிக்ஸ் பவன்குமார், மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, தயாரிப்பு நிர்வாகம் – ஈ.ஆறுமுகம், இணை தயாரிப்பு – எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜூன் துரை, தயாரிப்பு – உதயநிதி ஸ்டாலின், எழுத்து, இயக்கம் – சீனு ராமசாமி.
“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.”
இப்படிச் சொல்லியிருக்கும் காதலுக்கு உதாரணமாய்த் திகழும் காதலர்கள், கல்யாணமான பின்பும் அதே தீராய்க் காதலில் காதலர்களாய் வாழ்ந்தார்களா இல்லையா என்பதைச் சொல்லும் படம்தான் இது.
சோழவந்தானை வாழ்விடமாகக் கொண்ட கமலக்கண்ணன் என்னும் உதயநிதி ஸ்டாலின் பி.எஸ்.ஸி. விவசாயம் படித்துவிட்டு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். இயற்கை விவசாயத்தைத் தயார் செய்யும் தொழிலையும் செய்து வருகிறார்.
5 வயதிலேயே தனது தாயை இழந்ததால் தந்தை ‘பூ’ ராமு மற்றும் பாட்டியான வடிவுக்கரசியால் வளர்க்கப்பட்டவர். இதனாலேயே இவர்களின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவராகவே வளர்ந்திருக்கிறார் உதயநிதி.
அதே ஊரில் இருக்கும் ஒரு வங்கியில் புதிய மேலாளராகப் பணி புரிய வருகிறார் பாரதி என்னும் தமன்னா. இவரது தாய்க்கு கண் பார்வையில்லை. ஒரேயொரு தம்பி மட்டும்தான். ஊரிலேயே வீடு எடுத்து தங்கியிருக்கிறார்.
பணிக்கு வந்தவுடன் விவசாய கடன்களை வாங்கிவிட்டு கட்டாமல் இருப்பவர்களின் லிஸ்ட்டை எடுக்கச் சொல்கிறார் தமன்னா. அதில் முதலிடத்தில் இருப்பது உதயநிதி. மாடுகள் வாங்க பல முறை லோன் வாங்கியிருக்கிறார் உதயநிதி. ஆனால் இதுவரையிலும் அசலை முழுமையாகக் கட்டவில்லை.
இதனால் உதயநிதியின் வீடு தேடி வந்து பணத்தைக் கட்டச் சொல்கிறார் தமன்னா. இதனை அவமரியாதையாக எடுத்துக் கொள்ளும் உதயநிதி, பாதிப் பணத்தை அடுத்த நாளே கட்டிவிடுகிறார். மீதியைக் கட்டுவதற்கு அவகாசமும் கேட்கிறார்.
உதயநிதி மாடுகள் வாங்க லோன் கேட்டதெல்லாம் தனக்காக இல்லை. ஊரில் இருக்கும் ஏழை மக்களுக்காக என்பதை அறியும் தமன்னாவுக்கு அவரை அறியாமல் அவர் மீது காதல் பிறக்கிறது. உதயநிதிக்கும் தமன்னாவின் அப்ரோச்மெண்ட் பிடித்துவிட இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கிறோம் என்பது தெரியாமலேயே பழகுகிறார்கள். பின்பு ஒரு கட்டத்தில் உண்மை தெரிந்து காதலர்களாகவும் மாறுகிறார்கள்.
உதயநிதியின் பாட்டி வடிவுக்கரசி தனக்கு தமன்னாவையும், அவரது குடும்பத்தையும் பிடிக்கவில்லை என்கிறார். இதனால் இந்தக் கல்யாணப் பேச்சையே எடுக்க வேண்டாம் என்கிறார். பாட்டி சொல்லைத் தட்டாத உதயநிதியும் மெளனமாகி தமன்னாவுடன் பேசுவதையும், பழகுவதையும் நிறுத்திக் கொள்கிறார்.
ஆனால் உள்ளுக்குள் காதலால் மருகிக் கொண்டிருக்கிறார். காதல் நோய் அவரைப் பிடித்தாட்ட.. சரியாகச் சாப்பிடாமல் இருக்கிறார் உதயநிதி. இதனால் ஒரு நாள் வயக்காட்டில் மயக்கம் போட்டு விழுக.. அப்போதுதான் உதயநிதி கொண்டிருக்கும் காதலின் தீவிரம் அவரது அப்பாவான ‘பூ’ ராமுக்குத் தெரிகிறது.
தன்னுடைய ஒரே மகனான உதயநிதியின் காதல் நோயைத் தீர்த்து வைக்கத் துடிக்கிறார் ‘பூ’ ராமு. உடனேயே தமன்னா குடும்பத்தினரை வரவழைத்து கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். கல்யாணம் முடிந்த மறுநாளே தமன்னா வேலைக்குச் செல்வது வடிவுக்கரசிக்குப் பிடிக்காமல் போக.. இது சர்ச்சையாகிறது. இதனால் வருத்தப்படும் அப்பா ‘பூ’ ராமு, உதயநிதி-தமன்னாவை அடுத்த நாளே தனிக்குடித்தனம் போக வைக்கிறார்.
எல்லாம் நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் சூழலில் ஒரு நாள் உதயநிதி கந்துவட்டிக்காரனிடம் 3 லட்சம் ரூபாய் கடன் பெற்று அதைத் திருப்பிக் கட்டாத சூழலில் இது அடிதடியாகி ஊருக்கே தெரிந்து பெரும் பிரச்சினையாகிறது.. இது அவர்களது குடும்பத்தினருக்கு தெரிய வந்து அனைவரும் அதிர்ச்சியாக.. குடும்பத்தில் குழப்பம் ஏற்படுகிறது.
உதயநிதி ஏன் கடன் வாங்கினார்.. அது என்ன பிரச்சினை என்பதுதான் படத்தின் முக்கியமான டிவிஸ்ட்டு. இதை தியேட்டரில் படம் பார்த்து தெரிந்து கொள்வது அனைவருக்கும் நல்லது.
படத்தில் உதயநிதிக்கென்று தனியாக கேரக்டர் ஸ்கெட்ச் இல்லை. ஒரு ஹீரோவாக இல்லாமல், சாதாரண கமலக்கண்ணனாகவே நடித்திருக்கிறார். கதையும், திரைக்கதையும் வேகமாகப் போகும்போக்கில் உதயநிதி நமது நண்பர்களில் ஒருவராகவே தெரிகிறார். அப்படித்தான் அவரது நடிப்பும் இருக்கிறது. முடிந்தவரையிலும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளில் பழுதில்லாமல் நடித்திருக்கிறார்.
தமன்னா சீனு ராமசாமியின் படங்களில் மட்டும்தான் சைவப் பட்சிணியாகத் தெரிவார் போலிருக்கிறது. ‘தர்மதுரை’யிலும் இப்படியேதான் இருந்தார். இதிலும் அப்படியே.. அந்த நடிப்பையும்விடாமல் தொடர்வதால்தான் வடக்கத்திய நடிகைகளில் நடிப்பு ஸ்கோப் உள்ள கேரக்டர்கள் தமன்னாவைத் தேடி வருகின்றன. சிறந்த நடிப்பைக் கொடுத்திருக்கிறார் தமன்னா. சந்தேகமில்லை.
‘கடுகடு பாட்டி’யாக வடிவுக்கரசி. தன் எண்ணத்தை வெளியில் சொல்லத் தெரியாதவராக அவரது அப்பாவி குணமே அவரது கேரக்டரை உயர்த்தியிருக்கிறது. “நான் உன்னை வேலைக்குப் போக வேண்டாம்ன்னுதாம்மா சொன்னேன்.. பிடிக்கலைன்னா சொன்னேன்…?” என்று அவர் கேட்கும் பாங்கே ரசிகர்களுக்குப் பிடித்திருக்கிறது.
உரிமையுள்ள அப்பாவாக ‘பூ’ ராமு தனது மகனுக்காக எதையும் விட்டுத் தர முன் வரும் கேரக்டரில் நடித்திருக்கிறார். மகனுக்காக அம்மாவை கண்டித்து “பாட்டியா இரு.. மாமியாரா இருக்கணும்னு நினைக்காத” என்று எச்சரிக்கும்போது ‘அட’ என்று சொல்லவும் வைக்கிறார்.
‘நண்பி’ என்கிற வார்த்தையே கிராமங்களில் பேசப்படாதே என்கிற சூழலில் உதயநிதிக்கு உண்மையான நண்பியாக இருக்கும் அவரது பள்ளிக் காலத் தோழி வசுந்தராவின் நடிப்பும் ஒரு பக்கம் கவர்கிறது. கந்துவட்டிக்காரனிடம் உதயநிதிக்கு சப்போர்ட்டாக அவர் பேசும்பேச்சில் ஒரு புயலடித்து ஓய்கிறது.
உதயநிதியின் நண்பர்களான தீப்பெட்டி கணேசனும், அம்பானி சங்கரும் பேசும் பேச்சுக்கள் படம் முழுவதும் அவ்வப்போது மெல்லிய நகைச்சுவையை அள்ளித் தெளித்துக் கொண்டேயிருக்கின்றன.
“நமக்குப் பிடிச்ச மாதிரி சுவையா சமைச்சுப் போடுற பொண்டாட்டி கிடைக்கறது, மிகப் பெரிய பாக்கியம்டா” என்று ‘பூ’ ராமு, உதயநிதியிடம் சொல்லும் இடத்தில்தான் அரங்கமே அதிர்கிறது. இந்தக் கை தட்டல் அனைத்து ஊர்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
இதேபோல் “போய்.. ரசம் வைக்குறது எப்படின்னு அந்தப் புள்ளைகிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்க…” என்று ‘பூ’ ராமு, வடிவுக்கரசியிடம் சொல்லும் காட்சிக்கும் தியேட்டரில் அமோக வரவேற்பு.
என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு கிராமங்களின் அழகை அள்ளித் தெளித்திருக்கிறது.
‘அழைக்கட்டும்மா தாயே அழைக்கட்டும்மா’ பாடல் இனி பட்டிதொட்டியெங்கும் அம்மன் கோவில்களில் ஒலிக்கப் போகிறது. பாடலை எழுதி இசையமைத்திருக்கும் மதிச்சியம் பாலாவுக்கு நமது பாராட்டுக்கள்.
யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘வங்கிக்காரி’ பாடல் படம் முடிந்த பின்னும் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இதேபோல் மற்றைய பாடல்களுமே கவிஞர் வைரமுத்துவின் வரிகளில் அழகான தமிழில் ஒலிக்கின்றன. இதற்காகவே கவிஞருக்கும், தேர்வு செய்த இயக்குநருக்கும், பாடல்கள் கேட்கும் அளவுக்கு இசைத்திருக்கும் இசையமைப்பாளருக்கும் நமது பாராட்டுக்கள்.
தனது முதல் படத்தில் இருந்து கிராமத்துக் கதைகளையே தேர்ந்தெடுத்து கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி, இந்தப் படத்திலும் எந்தவித சமரசமும் செய்து கொள்ளாமல் ஒரு அழகான, காதல் கதையைக் கொடுத்திருக்கிறார்.
‘தர்மதுரை’யில் இருந்த அதே காதல் அப்படியே வேறொரு பரிமாணத்தில் இத்திரைப்படத்திலும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. காதலின் டிரெண்டுகள் காலத்திற்கேற்றாற்போல் மாறும் என்பதற்கேற்ப இந்தப் படத்திலும் அந்தக் காதலின் தூண்டுதல்களையும், காதல் பேச்சுக்களையும் மிக, மிக யதார்த்தமாக படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
பெரும் பணக்காரர்களின் காதல், கல்யாணத்தில்கூட கேட்டிராத ஒரு கேள்வியாக “சேர்ந்து குளிக்கலாமா..?” என்று தனது மனைவியிடம் திருமணமான அடுத்த நாளே கேட்கிறார் உதயநிதி. இந்தக் காட்சியை தைரியமாக வைத்தமைக்காக இயக்குநருக்கு ஒரு மிகப் பெரிய பாராட்டைத் தெரிவிக்க வேண்டும்.
இடைவேளைக்கு பின்பு வரும் அந்தச் சோகக் காட்சியும், அது தொடர்பான திரைக்கதையும் மனதைப் பிசைகின்றன. இப்படியொரு நிலைமை எந்தவொரு காதலர்களுக்கும் நேரக் கூடாது என்றுதான் ரசிகர்கள் விரும்புவார்கள். அதைத்தான் இயக்குநரும் எதிர்பார்த்து பேச வைத்திருக்கிறார்.
நகரம், கிராமம் எங்கேயிருந்தாலும் காதல் உணர்வு என்பது ஒன்றுதான். எந்தச் சூழலிலும் காதலர்கள் திருமணமான பின்பும் தங்களது காதலை இழந்துவிடாமல் இருப்பதுதான் அவர்கள் காதலுக்குச் செய்யும் மரியாதை என்பதை இத்திரைப்படம் சொல்லிக் கொடுக்கிறது.
வெறும் காதலோடு மட்டுமில்லாமல் விவசாயத்தின் முக்கியத்துவம், இயற்கை விதைகள், இயற்கை உரங்களின் தேவை, அவசியம்.. விவசாயிகளை வாட்டி வதைக்கும் கடன் தொல்லைகள், கடன் கொடுத்த வங்கிகள் விவசாயிகளிடம் காட்டும் கடுமை.. கந்துவட்டிக்காரர்களின் கொடூரம்.. என்று இன்றைய கிராமங்களின் யதார்த்தமான உண்மை நிலையையும் அப்படியே படமாக்கியிருக்கிறார் இயக்குநர் சீனு ராமசாமி.
வெற்று கமர்ஷியல் கதைகளுக்கிடையே உதயநிதி போன்ற ஹீரோக்களை வைத்தும் இப்படியொரு உணர்வுமிக்க படத்தைக் கொடுக்க முடியும் என்று நினைத்த இயக்குநர் சீனு ராமசாமிக்கு ஒரு ‘ஜே‘ போடுவோம்..!
‘கண்ணே கலைமானே’ – படத்தின் தயாரிப்பாளருக்கு மட்டுமல்ல நடிகர், நடிகைகள், தொழில் நுட்பக் கலைஞர்கள், இயக்குநர் அனைவருக்குமே பெருமையளிக்கும் ஒரு திரைப்படம்.
அவசியம் பாருங்கள்.