full screen background image

“கண்ணப்பாவை நியூஸிலாந்தில் படமாக்கியது ஏன்..?” – ஹீரோ விஷ்ணு மஞ்சுவின் பதில்!

“கண்ணப்பாவை நியூஸிலாந்தில் படமாக்கியது ஏன்..?” – ஹீரோ விஷ்ணு மஞ்சுவின் பதில்!

ஏ.வி.ஏ எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 24 ஃபிரேம் பேக்டரி நிறுவனங்கள் சார்பில் பிரபல நடிகர் மோகன்பாபு தயாரித்திருக்கும் பிரம்மாண்டமான சரித்திர காவியம் ‘கண்ணப்பா’.

இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

பரச்சூரி கோபால கிருஷ்ணா, ஈஸ்வர் ரெட்டி, ஜி.நாகேஸ்வர ரெட்டி, தோட்டா பிரசாத் ஆகியோர்  கதை எழுத, விஷ்ணு மஞ்சு திரைக்கதை எழுதியிருக்கிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியிருக்கிறார். அமெரிக்காவைச் சேர்ந்த ஷெல்டன் சாவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சித்தார்த் இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். ஸ்டீபன் தேவசி இசையமைக்க, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். பிரபு தேவா மூன்று பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார்.

வரும் ஏப்ரல் 25-ம் தேதி உலகம் முழுவதும் தெலுங்கு, தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக உள்ள ‘கண்ணப்பா’ திரைப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று காலை சென்னையில் ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.

இந்த விழாவில் படக் குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.

நடிகர் விஷ்ணு மஞ்சு பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், எனக்கு மீடியா முன்பு பேசுவதற்கு கொஞ்சம் தயக்கமாக இருக்கும். இது என் முதல் தமிழ் பத்திரிகையாளர்கள் சந்திப்பு, பெருமையாக இருக்கிறது, கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்தது சென்னையில்தான், தமிழ் நன்றாக பேசுவேன். ரொம்ப நாளாக தமிழ் பேசாததால் கொஞ்சம் பிழை இருக்கலாம், மன்னித்துக் கொள்ளுங்கள். 15 வருடங்களுக்கு முன்பு நான் நடிகனாக தொடங்கினேன். அன்று முதல் தமிழில் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டேன், இன்று சிவன் அருளால் என் ஆசை நிறைவேறியிருக்கிறது, அதுவும் இந்தக் கண்ணப்பா திரைப்படம் மூலம் நிறைவேறியது பெருமையாக இருக்கிறது.

15 வருடங்களுக்கு முன்பு இருந்தே சரத்குமார் அங்கிளுடன் படம் பண்ண வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேயிருந்தேன், இப்போது அது நடந்திருக்கிறது. என் அப்பா மீது உள்ள மரியாதை காரணமாகத்தான் அவர் இந்தப் படத்தில் நடித்தார்.

காலை 7 மணிக்கு மேக்கப்போடு படப்பிடிப்பில் பங்கேற்போம் என்று அவர் சொன்னார். அந்த நேரத்தை நிர்ணயம் செய்ததே அவர்தான். அவர் நினைத்திருந்தால், அந்த கடும் குளிரில் 9 மணிக்கு வருகிறேன், என்று சொல்லியிருக்கலாம். ஆனால், அதை செய்யாமல் 7 மணிக்கு மேக்கப் உடன் படப்பிடிப்பு தளத்தில் வருவார். அவரைப் பார்த்து மற்ற கலைஞர்களும் அதே நேரத்திற்கு, சிலர் அதற்கு முன்பாகவும் வந்துவிடுவார்கள் அவருக்கு என் நன்றி.

பிரபு அண்ணா, அவர் என் அப்பாவை அண்ணா என்று அழைப்பார். நான் அவரை அண்ணா என்று அழைக்கிறேன். நான் சிறு வயதில் அவரது வீட்டுக்கு சென்று நடனம்கூட கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரைப் பற்றி எவ்வளவு சொன்னாலும் அது குறைவாகத்தான் இருக்கும். அவர் நடன இயக்குநராக பணியாற்ற வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் கேட்டுக் கொண்டதற்காக அவர் எங்கள் படத்தில் பணியாற்றினார். இரண்டு முறை நியூசிலாந்துக்கு அவர் வந்தார். அவருக்கு நன்றி. படம் பார்த்தால் உங்களுக்கே புரியும், நான் பிரபு அண்ணாதான் நடனம் அமைக்க வேண்டும், என்று முடிவு செய்தேன்.

இயக்குநர் முகேஷ் சார், படம் இயக்குவது இதுதான் முதல் முறை. அவர் நிறைய டிவி தொடர்களை இயக்கியிருக்கிறார். நான் பல முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றியிருக்கிறேன், முகேஷ் சார் உடனான என் உறவு ரொம்பவே ஸ்பெஷல். நான் படம் தொடர்பாக குழப்பமாக இருக்கும்போது, எனக்கு பெரும் உதவியாக இருந்தார்.

படத் தொகுப்பாளர் ஆண்டனி,  ’காக்க காக்க’ படம் பார்த்தது முதல் அவருடைய ரசிகனாகி விட்டேன். அவர் ஒரு வாரத்தில் முழு படத்தையும் எடிட் செய்துவிடுவார், ஆனால் என் படத்தை ஒரு வருடமாக எடிட் செய்துக் கொண்டிருக்கிறார். கேமராமேன் சித்தார்த், என் சகோதரர். அவர் எனக்காக இரண்டாவது யூனிட் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

நாயகியாக நடித்திருக்கும் ப்ரீத்தியை நாங்கள் தான் அறிமுகப்படுத்த இருந்தோம், ஆனால் அதற்கு முன்பாகவே அவர் அறிமுகமாகிவிட்டார். அவர் சிறப்பாக நடித்திருக்கிறார். நிச்சயம் பெரிய நடிகையாக வருவார்.

கண்ணப்பா பற்றி அனைவருக்கும் தெரிந்ததுதான். நாங்கள் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறோம். அனைவரும் கஷ்டப்பட்டுத்தான் படம் எடுக்கிறார்கள். கண்ணப்பா ஏப்ரல் 25-ம் தேதி வெளியாகிறது. நிச்சயம் படம் உங்களுக்கு பிடிக்கும். எங்களுக்கு உங்கள் ஆதரவு வேண்டும். நன்றி.” என்றார்.

“கண்ணப்பா கதையை நியூசிலாந்தில் படமாக்க காரணம் என்ன?” என்ற பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த விஷ்ணு மஞ்சு, “இந்தக் கேள்வியை நிறைய பேர் கேட்கிறார்கள். கண்ணப்பா கதை 3-வது நூற்றாண்டில் நடக்கிறது. அந்தக் காலக்கட்டத்தில் நீர், காற்று, வனம் என அனைத்தும் எவ்வளவு பசுமையாக இருக்கும் என்று யோசித்து பாருங்கள். கண்ணப்பா கதையை என்னிடம் கொடுத்தவருக்கு தொடர்ந்து பணியாற்ற முடியாமல் போய்விட்டது. அதனால், நான் அந்த கதையை விரிவுப்படுத்தி எழுதியதோடு, படப்பிடிப்புக்கான இடத்தை தேர்வு செய்ய தொடங்கி விட்டேன்.

உலகின் பல நாடுகளுக்கு சென்று பார்த்தபோது, நியூசிலாந்து நாடுதான் சரியான இடமாக இருந்தது. கடவுள் வரைந்த கடைசி ஓவியம் என்றால் அது நியூசிலாந்துதான். நம் நாடும் ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்திருக்கும், ஆனால் நாம் அதை இப்போது கெடுத்து விட்டோம். கண்ணப்பா படத்தின் கதை அப்படி ஒரு இடத்தில் நடக்க வேண்டும் என்று விரும்பினேன், அதனால்தான் அங்கு படப்பிடிப்பு நடத்தினேன்.

படத்தில் நீங்கள் பார்க்கும்போது கிராபிக்ஸ் என்று நினைப்பீர்கள், ஆனால் உண்மையில் படத்தில் இடம் பெறும் லொக்கேஷன்கள் அனைத்தும் லைவானவை… அந்த அளவுக்கு நீர், வனம் என அனைத்தும் மிக அழகாக இருக்கும்.” என்றார்.

மேலும், கண்ணப்பா யார்? என்ற ஆரம்பக் கதையை காமிக்ஸாக படக் குழு வெளியிட்டிருக்கிறது. “இரண்டு தொகுப்புகளாக இதுவரை 80 ஆயிரம் பிரதிகள் வெளியிட்டுள்ள படக் குழு, விரைவில் மூன்றாவது தொகுப்பையும் வெளியிட இருப்பதாகவும், கண்ணப்பா காமிக்ஸுக்கு கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரவேற்பு, நிச்சயம் படத்திற்கும் கிடைக்கும்..” என்றும் விஷ்ணு மஞ்சு தெரிவித்தார்.

 

Our Score