full screen background image

இயக்குநர் சாமி இயக்கிய ‘கங்காரு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்…!

இயக்குநர் சாமி இயக்கிய ‘கங்காரு’ படத்திற்கு ‘யு’ சான்றிதழ்…!

அதிர்ச்சியான செய்திதான். ஆனால் உண்மையான செய்தி.

சாமி இயக்கிய படம் என்றாலே அது ‘ஏ’ ரகமாகத்தான் இருக்கும் என்று முத்திரை குத்தப்பட்டு, அந்த முத்திரை கடந்த காலங்களிலிருந்து இன்றுவரையிலும் அவரை விடாமல் துரத்தி வருகிறது.

இதுவரை தான் இயக்கிய படங்களிலெல்லாம் பாலுணர்வையே உயர்த்திப் பிடித்த சாமி இப்போது, ’நான் அப்படிப்பட்ட இயக்குநரல்ல. ஆளை விடுங்கப்பா சாமி’ என்பதை நிரூபிக்கும்விதமாக பாசவுணர்வை தூக்கிப் பிடித்து ஒரு படத்தை இயக்கியிருக்கிறார். அதுதான் ‘கங்காரு’ திரைப்படம்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக அர்ஜுனா நடித்துள்ளார். மேலும், ஸ்ரீபிரியங்கா, வர்ஷா அஸ்வதி, ஆர்.சுந்தர்ராஜன், தம்பி ராமையா, கலாபவன் மணி, கஞ்சா கருப்பு, தயாரிப்பாளர் ஜின்னா ஆகியோரும் இதில்  நடித்துள்ளனர்.

”இனியாவது ஒழுங்கா பெண்களும் பார்க்குற மாதிரி நல்ல படம் பண்ணு…” என்று இயக்குநர் சாமியின் அம்மாவே சாமியாடிவிட்டதால், தாய்ச் சொல்லுக்கு மறுபேச்சில்லை என்பதை போல இந்த ‘கங்காரு’வை படைத்திருக்கிறாராம் இயக்குநர் சாமி.

“இந்த கங்காரு திரைப்படம் என் அம்மாவே பாராட்டும்படி இருக்கும்.. இதுவரையிலான என்னுடைய பிம்பத்தை இந்தப் படம் நிச்சயம் உடைக்கும்..” என்று சமீபத்திய தனது பேட்டிகளில் கூறி வந்தார் இயக்குநர் சாமி.

அதனை உறுதி செய்யும்விதமாக படம் பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் ‘கங்காரு’ படத்திற்கு எவ்வித கட்டும் சொல்லாமல், ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். “படத்தின் அழுத்தமான கதையினால் பல இடங்களில் கண்ணீரை வர வைத்திருக்கிறார் இயக்குநர்” என்று பாராட்டியுள்ளனர் படம் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள்.

‘கங்காரு’ படம் பிப்ரவரியில் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..!

Our Score