full screen background image

“இளையராஜா-பாரதிராஜாவை என் மனதிலிருந்து தூக்கியெறிந்துவிட்டேன்..” – கங்கைஅமரனின் பேட்டி..!

“இளையராஜா-பாரதிராஜாவை என் மனதிலிருந்து தூக்கியெறிந்துவிட்டேன்..” – கங்கைஅமரனின் பேட்டி..!

கோடம்பாக்கத்தில் தேனி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த அற்புத கலைஞர்கள் அனைவருமே இப்போது ஆளுக்கொரு பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது கசப்பான உண்மை.

ilaiyaraja-bharathiraja-vairamuthu

அல்லிநகரத்து பாரதிராஜாவும், பண்ணைப்புரத்து பாவலர் சகோதரர்களும், பெரியகுளம் வடுகபட்டி வைரமுத்துவும் ஒரு காலத்தில் நகமும், சதையுமாக இருந்தவர்கள். இவர்கள் கூட்டணியில் இருந்தபோது தமிழ்ச் சினிமாவுக்கு இவர்களால் ஏற்றமும் கிடைத்தது.. பெருமையும் கிடைத்தது. பிரிவுக்கு பின்பும் அவரவர்க்கு தனித்தனியே வெற்றி கிடைத்தது என்றாலும், அன்றைய கூட்டணியில் கிடைத்தது போன்ற சுவையில்லை..!

காலம் மாற மாற “உங்களால் நானா..? என்னால்தான் நீங்கள்..?” என்றெல்லாம் பேச்சுக்கள் கிளம்பி உடன் இருந்த வெட்டிஆபீஸர்கள் ஒத்து ஊத.. மனம் சைத்தானாக மாறி ஆளுக்கொரு பக்கமாக திசை திரும்பி… இன்றைக்கு கடந்து வந்த பாதையை வேதனையோடு அசை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

கங்கை அமரனுக்கும், இளையராஜாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சுவார்த்தை இல்லையாம்.. நல்லதொரு தம்பியாக இளையராஜாவுக்கு எல்லாமுமாக இருந்தவர் இன்றைக்கு அவரால் ஒதுக்கப்பட்டு தனிமையில் இருக்கிறார். அதே நேரம் பாரதிராஜாவுடனும் சமீபத்தில் மனஸ்தாபப்பட்டு இன்னும் ஒரு மூலையில் ஒதுங்கிவிட்டார்.

பாரதிராஜா மற்றும் தனது அண்ணன் இளையராஜா பற்றி ‘ராணி’ பத்திரிகைக்கு  சமீபத்தில் பேட்டி கொடுத்திருக்கிறார் கங்கை அமரன்.

அந்தப் பேட்டி இது :

“பாரதிராஜாவை நம்பி நாங்க சென்னைக்கு வந்தோம் என்பது உண்மை. சினிமாவில் நடிப்பதற்காகத்தான் பாரதிராஜா சென்னைக்கு வந்தார். சிவாஜி, எஸ்.எஸ்.ஆர். மாதிரி ஆக வேண்டும் என்பது அவரது ஆசை. எங்களுக்காகவும் பாரதிராஜா ரொம்ப கஷ்டப்பட்டார் என்பதும் நிஜம். ஆனால் அவருக்கு முன்னதாக நாங்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டோம். இது பாரதிராஜாவுக்குப் பிடிக்கலை. நாடகம், மேடை கச்சேரி என்று வாரத்தில் 2 நாட்களாவது எங்களால் சாப்பிட முடிந்தது..

‘நடிக்க உனக்கு வாய்ப்பு கிடைக்காது.. அதுக்கேத்த முகம் இல்லை.. டைரக்டரா ஆவதற்கு முயற்சி செய்…’ என்று பாரதிராஜாவுக்கு ஐடியா கொடுத்தது எங்க அண்ணன் பாஸ்கர். பாரதிராஜாவை பற்றி ஜி.கே.வெங்கடேஷிடம் சொல்லி அவரை புட்டண்ணாவிடம் உதவி இயக்குநராக சேர்த்துவிட்டவர் அண்ணன் இளையராஜா. எங்களுடைய வளர்ச்சிக்கு பாரதிராஜா உதவியாக இருந்ததை போல, அவருடைய வளர்ச்சிக்கு நாங்களும் உதவியாகத்தான் இருந்தோம்.

இப்போ இளையராஜா மாதிரியே அவரும் போஸ் கொடுக்க ஆரம்பிச்சிட்டார். மனிதர்களை மனிதர்களாக மதிக்கத் தெரியாத அவர்களை, என் மனதில் இருந்து தூக்கியெறிந்துவிட்டேன். அவர்கள் மனிதர்களை பக்தர்களாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள்..” என்று சொல்லியிருக்கிறார் கங்கை அமரன்.

பேட்டி கொடுத்தே பிரிவை பெரிதாக்குவார்கள் போலிருக்கிறது..!

நன்றி : ‘ராணி’ வார இதழ்

Our Score