பிரபல படத் தொகுப்பாளரும், தேசிய விருது பெற்ற இயக்குநருமான பி.லெனின் இயக்கியிருக்கும் புதிய படம் ‘கண்டதை சொல்லுகிறேன்’.
இந்தப் படத்தில் ‘பூ’ ராமு, ஆனந்த், ஜானகி, கருணா, ஜெனிஃபர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – அஷிஷ் தவார், ஒலிப்பதிவு – யுவராஜ், எடிட்டிங் – மாருதி கிருஷ், இசை – பி.ஆர்.ராஜன், பாடல்கள் – இளம்பிறை, நிர்வாகத் தயாரிப்பு – புத்தா பிலிம் புரொடக்சன், தயாரிப்பு – கோ. தனஞ்ஜெயன் – புளூ ஓஷன் எண்டர்டெய்ன்மென்ட், ஜே. சதீஷ் குமார் – ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன். எழுத்து, இயக்கம் – பி.லெனின்.
இந்த ‘கண்டதை சொல்லுகிறேன்’ திரைப்படம் மக்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரது கலை கலாசாரத் தன்மையுடன் தங்கள் உறவினர் மற்றும் நண்பர்களுடனான இன்ப, துன்பங்களையும் அவர்களின் அன்பையும், குடும்ப உறவுகள் தொடர்பான விஷயங்களையும் விளக்குகிறது.
கதையின் முக்கியக் கதாபாத்திரமான மாசானம், தன் முன்னோரால் தனக்கு வழங்கப்பட்ட இசைக் கருவியான பறை முழக்கத்துக்கு இந்த சமூகம் உரிய மரியாதை அளிக்காததால் விரக்தி அடைகிறான். இதனால் வாழ்க்கையில் பிடிப்பற்றுப்போய்… குடும்பத்தை கவனிக்காமல் குடிக்கு அடிமையாகிறான்.
மாசனத்தின் மகன் சுடலை, பறை இசைப்பதில் கெட்டிக்காரன். அவன் பாரம்பரியமான இந்த இசைக் கருவியை வாசிப்பதில் சில மாற்றங்களை ஏற்படுத்தி, அதை, மற்றவர்களுக்கு சுவாரஸ்யமாகக் கற்பிக்கிறான். சுடலையின் இந்த நடவடிக்கையில் அவன் அப்பா மாசானம் ஆரம்பத்தில் பெரிய ஈடுபாடு எதையும் காட்டவில்லை.
நகரத்து இளைஞனான சித்தார்த், இசைக் கலைஞனாக முயற்சி செய்பவன். இவன் பெற்றோர் ஜே.பி. – நிரஞ்சனா ஆகியோரது கருத்துகளுக்கு எதிரான எண்ணம் கொண்டவன் – அவர்களைப் பொறுத்தவரை இசை என்பது, பணப்பால் சுரக்கும் ஒரு பசு. சுடலை வசிக்கும் கிராமத்துக்கு வரும் சித்தார்த், சுடலையின் பறையிசையைக் கற்றுக் கொள்கிறான். சுடலையின் இந்தத் திறமை, சித்தார்த்தைக் கவர்கிறது.
பழைய தலைமுறையினரது சிதைந்த, பணத்தையே குறியாகக் கொண்ட மன நிலையிலிருந்து மாறுபட்டு புதிய இளந்தலைமுறையினரான சுடலையும் சித்தார்த்தும் சேர்ந்து எப்படி இந்த இசைத் துறையைச் செழுமைப்படுத்துகின்றனர் என்பதுதான் படத்தின் கதை..!
மொத்தம் 106 நிமிடங்களே ஓடக் கூடிய இந்தப் படம் தணிக்கையில் ‘யு’ சான்றிதழைப் பெற்றுள்ளது.
இத்திரைப்படம் வரும் டிசம்பர் 30-ம் தேதியன்று திரைக்கு வருகிறது.