50 மில்லியன் பார்வைகளை கடந்த ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல்! 

50 மில்லியன் பார்வைகளை கடந்த ‘கனா’ படத்தின் ‘வாயாடி பெத்த புள்ள’ பாடல்! 

நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், மற்றும் தர்ஷன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘கனா’.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் 'வாயாடி பெத்த புள்ள’ பாடல் யூ டியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

இது குறித்து பேசிய படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சிவகார்த்திகேயன், "சில நேரங்களில், நாம் எதிர்பாராத நல்ல விஷயங்கள் நடந்து நம்மை  மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அப்படி வாயடைத்து போகும் அளவுக்கான அன்பை இசையின் காதலர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலுக்கு வழங்கியிருக்கிறார்கள்.

kanaa movie song stills

தந்தை, மகள் உறவையும், அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களையும் சொல்லும் இந்த பாடல்  இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் மற்றும் பாடலாசிரியர் ஜி.கே.பி ஆகியோரின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.

அதோடு, என் மகள் ஆராதனாவுடன் எனக்கு இருக்கும் உறவை காலம் முழுக்க நினைக்க, கிடைத்த இந்த பாடலுக்காக அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பாடல் இப்போது யூ டியூபில் 50 மில்லியனை தாண்டியிருப்பதும், பலருக்கு  பிடித்தமான பாடலாக இருப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. பாடலை பாடிய வைக்கம் விஜயலட்சுமி அவர்களுக்கு நன்றி.

ஆராதனாவின் அழகிய குரல் இந்த பாடலின் இனிமைக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, என்னையும், என் மகள் ஆராதனாவையும் இந்த ஒரே பாடலில் பாடவைக்கும் யோசனையை கொண்டு வந்த என் நண்பரும் திரைப்பட இயக்குனருமான அருண்ராஜா காமராஜிற்கு நான் நன்றி கடன்பட்டிருக்கிறேன்" என்றார் சிவகார்த்திகேயன்.

தற்போது ‘கனா’ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் டிரெய்லர் மிக விரைவில் வெளியிடப்படவுள்ளது.