Banner: Mangatha Movies • Produced by: Ravi
Starring: Natty Natraj, Singampuli, Mukesh Ravi, Sreerranjini, Shalini, Java Sundaresan, Karate Karthi, TSR, Muruganandam, Muthuraman, Vetrivel Rajan
Story & Direction: Rajanathan Periyasamy • Dialogue & Screenplay: Tha. Muruganandham • DOP: MRM Jaisuresh • Music: Satizsh Selvam • Editing: SN Fazil • Art: Shiva Yoga • Lyrics: A. Pa. Raja, Ku. Karthi • Singers: Benny Dayal, Antony Dasan, V. V. Prasanna, Padmalatha, H. S. J. Sahana, Satizsh Selvam • Dubbing: Hamar C. V, Prathap, Pon Kumar • Sound Designer : Jazz Records • Audiography : Arul Murugan • DI: Infinity Media • Colourist: Muthu • VFX: Moorthy [D. Note] • Costume Designer: James Abraham • Production Executive: Umamaheshwar Raju • Executive Producer: Krishna Mohan • Make-up: Sivakumar, • Stills: Mathan • Publicity Designs: Selvakumar • Storyboard Animation: Eliza Creations • P.R.O.: Sheik • Digital Ads: Ahmed Assad • Digital Marketing: Kamalesh Mohan • Audio Label: Mass Audios • Choreography: Harikiran & I.Radhika
‘சதுரங்க வேட்டை’ படம் மூலமாக விதவிதமாக ஏமாற்றும் மனிதர்களை அடையாளம் காட்டிய நட்டி நடராஜ், இந்தப் படத்தில் இன்னொரு சதுரங்க வேட்டையை காண்பித்திருக்கிறார்.
பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் சம்பாதிக்கும் நட்டி நடராஜிடம் ஆஃபர் ஒன்று வருகிறது.
பிரிட்டிஷ் ராணியின் கிரீடத்தில் இருக்கும் கோஹினூர் வைரத்தை பிரிட்டிஷ் கவர்னர் ஒருவர் ராணிக்குப் பரிசாக அளித்தார். அது இன்னமும் இங்கிலாந்து ராணியின் கிரீடத்தில்தான் அமைந்திருக்கிறது.
அதே கவர்னர் அந்த கோவிலூர் வைரத்தை போலவே இன்னொரு வைரத்தையும் அந்த நேரத்தில் கையில் வைத்திருந்திருக்கிறார். ஆனால், அதை ராணியிடம் கொடுக்காமல் தன்னுடைய பயன்பாட்டுக்காக மறைத்து வைத்திருந்திருக்கிறார்.
இப்பொழுது அந்த வைரம் யார் யார் மூலமாகவோ கை மாறி கடைசியாக விமானம் மூலமாக கடத்தப்பட்டு சென்னை வருகிறது. ஆனால் ஒரு அரசியல்வாதி அந்த வைரத்தை எப்பாடுபட்டாவது கைப்பற்றி விட துடிக்கிறார். ஆனால் அது விமான நிலையத்தில் தொலைந்து போகிறது.
அந்த தொலைத்து போன வைரத்தைக் கண்டுபிடித்து தரும்படி நட்டி நடராஜிடம் போலீஸ் கமிஷனர், அரசியல்வாதி என்ற இருவரும் இணைந்து கொடுக்கிறார்கள்.
நட்டி நடராஜன் தன்னுடைய திறமையை வைத்து அந்த வைரத்தை கஷ்டம்ஸ் ஆபிசர் வீட்டில் இருந்து களவாடுகிறார். ஆனால், களவாடிவிட்டு போகும்போது இந்த வைரத்தை நாமே ஏன் வைச்சிக்க கூடாது என்ற நினைத்து அதை காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் புதைத்து வைத்துவிட்டு… “அந்த வைரத்தை நான் தேடியும் கிடைக்கவில்லை…” என்று பொய் சொல்கிறார். ஆனால் கமிஷனர் அதை நம்பாமல் நட்டி மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கிறார்.
சிறையில் இருந்து வெளியில் வரும் நட்டி நட்ராஜ் அந்த வைரத்தை தேடி ஓடி வருகிறார். ஆனால் வைரத்தைப் புதைத்த இடத்தில் தூங்கும் துறவி கோவில் என்ற பெயரில் ஒரு கோவில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியாகிறார்.
இப்போது அந்த இடத்தில் தனியாக வந்து நிலத்தைத் தோண்ட முடியாது என்பதால் அந்தக் கோவிலின் சாமியாராக உருவெடுக்கிறார் நட்டி நட்ராஜ். இவருக்கு துணையாக சிங்கம்புலியும் இருக்க ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அந்த நிலத்தை தோண்டி வைரத்தை எடுக்கலாம் என்று கனவு காண்கிறார் நட்டி நட்ராஜ்.
அது சாத்தியமானதா..? அந்த வைரம் கடைசியாக சிக்கியதா?.. நட்டி நடராஜின் நிலைமை என்ன ஆனது? என்பதுதான் இந்தப் படத்தின் கதை சுருக்கம்.
‘சதுரங்க வேட்டை’ படம் போலவே இதுவும் ஏமாற்றுகின்ற ஒரு ஹீரோவின் கேரக்டர்ஸ் ஸ்கெட்ச் என்பதால் அந்தப் படம் போலவே இந்தப் படத்திலும் தன்னுடைய நடிப்பை ஒரே மாதிரி வைத்திருக்கிறார் நட்டி நடராஜ்.
முகத்தில் எந்தவித ரியாக்ஷனையும் காட்டாமல் வேகவேகமாக பேசுகின்ற பேச்சுக்கள் எதிரில் இருக்கும் அப்பாவிகளையும் ஏமாற தூண்டுகிறது. ஒருவரிடமிருந்து கொள்ளையடிக்க வேண்டும் என்று நினைத்தால் அவனது ஆசையை தூண்டிவிட வேண்டும் என்பதுதான் சதுரங்க வேட்டை படத்தில் இருந்த ஒரு கரு.
அதையே மையமாக வைத்து இந்தப் படத்திலும், “பைசா, காசு செலவில்லாமல் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கிறோம். நீங்க நாலாவது மாச சம்பளத்தை மட்டும் கொடுத்தால் போதும்…” என்று சொல்லி பணத்தை சுருட்டும் நட்டி நடராஜ், அதற்காக மெடிக்கல் பாலிசியை பயன்படுத்துவது ஒரு சுவையான திரைக்கதை.
சாமியார் ஆன பின்பு சுற்றிலும் இளம் பெண்கள் சூழ வாழ்கிறார் நட்டி. அதற்குப் பிறகு அந்த ஆலயமே ஜெகஜோதியாக இருப்பதாக திரைக்கதையில் காட்டும்போது நட்டி நட்ராஜ் நம்முடைய பொறாமைகளை எதிர்கொண்டு படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். நித்தியானந்தாவை அடையாளப்படுத்தும் வகையில் நட்டியின் காதல் ஆட்டமும் மக்களை ஏமாற்றும் செயலும் இருக்க ரொம்பவே ரசிக்க முடிகிறது.
படத்தில் இன்னொரு நாயகனான முகேஷ் ரவி, சிக்ஸ் பேக் ஷோ உடம்பை காட்டுவிதமாக சண்டை காட்சியில் தன் உடலை காண்பித்தாலும் அதற்கான திரைக்கதை இல்லாதது அவருடைய தவறில்லை.. இது அவருடைய முதல் படம் என்பதால் எந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பை காட்ட முடியுமோ… கொட்ட முடியுமோ அதைத்தான் செய்திருக்கிறார்.
ரஞ்சிதானந்தமாயியை நினைவுபடுத்தும்வகையில் நட்டி நட்ராஜூக்கு ஜோடியாக நடித்த ஸ்ரீரஞ்சனியும், முகேஷ் ரவியின் காதலியாக ஷாலினியும் வந்து போயிருக்கிறார்கள்.
நட்டி செய்யும் அனைத்து கிரிமினல் வேலைகளுக்கும் துணையாக நிற்கும் சிங்கம் புலி ஆசிரமத்தில் ஒரு சீடராக இருந்து அத்தனை கோல்மால்களை செய்து தன்னால் முடிந்த அளவுக்கு நம்மை சிரிக்க வைத்திருக்கிறார்.
இன்னொரு பக்கம் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிய முருகானந்தம் திடீரென்று என்ட்ரி ஆகி ஷாலினியை கொல்ல திட்டமிடுகிறார். இது ஒரு தனி காமெடி ட்ராக்.
பூனை சுல்தானாக அடித்திருக்கும் கோதண்டம் தீவுக்கு ஒரு மனைவியை வைத்திருக்கிறார். ஆனாலும் குழந்தை இல்லை. குழந்தை உருவாக்கத்திற்காக ஆசிரமத்தில் வந்து தங்கும் இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்துமே டபுள் மீனிங் டயலாக்குகளாகவும், பாலியல் தொடர்பான பேச்சுகளாகவும் இருக்க கொஞ்சம் அசூயை தன்மையுடன்தான் இந்தக் காட்சிகளை ரசிக்க வேண்டி இருக்கிறது. இதை மாற்றி அமைத்திருக்கலாம். குடும்பமாக படம் பார்க்க வருபவர்கள் நிச்சயமாக சங்கடப்படுவார்கள்.
கோதண்டத்தின் மொழிபெயர்ப்பாளராக நடித்திருக்கும் சாம்ஸ் என்ற ஜாவா சுந்தரேசன் மொழிபெயர்ப்பிலேயே அதிகமான காமெடியை கொட்டி சிரிக்க வைத்திருக்கிறார். படத்தில் நடித்திருக்கும் ஏனைய நடிகர்களும் இயக்குநரின் இயக்குதல் திறமைக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
படத்தின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாகத்தான் அமைந்துள்ளது. ஒளிப்பதிவாளர் ஜெய் ரொம்பவும் சிரமப்படாமல் அந்த திரைக்கதைக்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைத்திருக்கும் சதீஷ் இசையில் உருவாகி இருக்கும் பாடல்கள் ஒரு தடவை கேட்கலாம் என்ற அளவில்தான் உள்ளது.
நித்தியானந்தாவை நியாபகப்படுத்தும் சாமியார் வேடம்தான் படத்தின் பிற்பகுதியில் படத்தை அதிகமாக ரசிக்க வைத்திருக்கிறது. காசேதான் கடவுளடா படத்திலிருந்து ஒரு முக்கிய காட்சியை இந்தப் படத்தில் இணைத்து இருக்கிறார்கள். அதுவும், நமக்கு ஒரு சுவாரசியமான விஷயத்தைதான் தருகிறது.
கலை இயக்குநர் சிவ யோகா ஆசிரமப் பகுதியை மட்டும் அழகாக வடிவம் வைத்து அங்கே நடக்கும் காட்சிகளுக்கு பெரிதும் உதவி இருக்கிறார். காமெடி திரைப்படம் என்று முதலிலேயே சொல்லிவிட்டதால் எடிட்டர் பாசில் தன்னுடைய கட்டுகளால் படத்திற்குக் காமெடி கிடைக்க பெரும் உதவி செய்திருக்கிறார்.
விறுவிறுப்பான திரைக்கதையாலும், காமெடி வசனங்களாலும் நித்யானந்தா சாமியாரை கிண்டல் செய்திருக்கும்விதத்தாலும் இந்தப் படத்தை கடைசி வரையில் ரசிக்க முடிந்திருக்கிறது.
நிச்சயமாக ஒரு முறை இந்தப் படத்தைப் பார்க்கலாம். ஆனால் குடும்பத்தோடு போய்விடாதீர்கள்.
RATING : 2.5 / 5









