விக்ரம் பிரபு நடித்த ‘சிகரம் தொடு’ படத்தின் பாடல் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா இன்று காலை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் பாடல்களை வெளியிட்டு பேசிய நடிகர் கமல்ஹாசன் விக்ரம் பிரபுவிடம் தனிப்பட்ட திறமை இருப்பதாகவும், அதனாலேயே தொடர்ந்து வெற்றி பெற்று வருவதாகவும் குறிப்பிட்டார்.
நடிகர் கமலஹாசனின் பேச்சில் இருந்து ஒரு சில பகுதிகள் :
“இந்த படத்தின் அழைப்பிதழைப் பார்த்து நான் கண்ணால் பேசியதாக டைரக்டர் கவுரவ் குறிப்பிட்டார். இந்த கண், அந்த கண்ணிடம்(சிவாஜிகணேசன் கண்) இருந்து கற்றுக் கொண்டதுதான். சிவாஜி மடியில் பிரபு தவழ்ந்ததைவிட, நான் அதிகமாக தவழ்ந்ததாக அவரே கூறியிருக்கிறார். எங்கள் இருவரையும்விட, சிவாஜி மடியில் அதிகமாக தவழ்ந்த பிள்ளை விக்ரம் பிரபுதான். நாங்கள் வெவ்வேறு வீட்டில் இருந்து வந்தாலும், சங்கமம் ஆவது அன்னை இல்லம்தான்.
சிவாஜியைப் பார்த்து வியந்த கோடிக்கணக்கானவர்களில், நானும் ஒருவன். அவருடைய ‘ஜீன்’ விக்ரம் பிரபு ரத்தத்தில் இருப்பதாக இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். ‘ஜீன்’ இருந்தாலும், கடுமையாக உழைத்தால்தான் வெற்றி பெற முடியும். சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் என்பதாலேயே விக்ரம் பிரபு இந்த அளவுக்கு உயர்ந்துவிடவில்லை. அதையும் மீறி அவருக்கென்று ஒரு தனிப்பட்ட திறமை உண்டு. அந்த திறமையினால்தான், தன்னுடைய கடின உழைப்பால்தான் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார். இன்னும் மேலும், மேலும் உயர்ந்த இடத்துக்கு செல்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது..” என்றார் கமல்.